Mon06212021

Last updateSun, 19 Apr 2020 8am

கொலைகாரர்கள் இனம், மதம் பார்த்து கொல்வதில்லை

"இனி இலங்கையில் சிறுபான்மையினரே கிடையாது. நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற பிரிவுகள் மட்டுமே உண்டு" -அதி உத்தம ஜனாதிபதி மகிந்து.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களின் இரத்தம் குடித்து முடித்து சிங்கள தேசத்தையும், அகிம்சை தத்துவத்தை அகிலத்திற்கு அரும்கொடையாக அளித்த மதங்களில் ஒன்றான பெளத்த மதத்தையும் காப்பாற்றிய பிறகு வெற்றிவீரன் மகிந்து, நாடாளுமன்றத்தில் வைத்து பொழிந்த பொன்மொழிகள் இவை. சிங்களதேசத்திற்கு, சிங்கள மக்களின் பிரச்சனைகளிற்கு, துன்பங்களிற்கு வறுமைக்கு தமிழ்மக்களும், தமிழ்பயங்கரவாதிகளும் தான் காரணம் என்று காலங்காலமாக சேனநாயக்காகள், பண்டாராநாயக்காகள், ஜெயவர்த்தனா என்று வந்த பொய்யர்களின், கொள்ளையர்களின், கொலைகாரர்களின் பொய்மொழிகள் இவை. பாமர மக்களை இனம், மதம், சாதி, பிரதேசம் என்று பிரித்து இரத்தம் சிந்த வைத்து விட்டு தமது கொள்ளைகளை, கொலைகளை தடங்கலின்றி கொண்டு போவதிற்கு உலகம் முழுக்க உள்ள பயங்கரவாதிகள் பிரயோகிக்கும் பச்சைப்பொய்கள் இவை.

கம்பஹா மாவட்டம் வெலிவேரியப் பகுதியில் போராடியது தமிழ்மக்கள் அல்ல சிங்களமக்கள். ஆனாலும் சிங்கள ராணுவம் கொன்றது. பணத்திற்காக எதையும் செய்யும், நாட்டையே விற்கும் அரசியல்வாதிகள் அல்ல அந்த மக்கள் மாறாக நாட்டை அழிக்காதே, மண்ணை மாசுபடுத்தாதே என்று நாட்டையும், இயற்கையும் நேசிக்கும் ஏழை, எளிய மக்கள். ஆனாலும் ஓடி, ஓடி தேய்ந்து போன மனிதர்களை, ஓட இடமில்லாமல் மூலையிலே முடங்கிய தமிழ்மக்களை கொன்று நாட்டைக் காப்பாற்றியதற்காக விஸ்வகீர்த்தி சிங்களதீஸ்வரா என்று தலதா விகாரையில் புத்தபிக்குகளால் பட்டம் பெற்ற மகிந்துவின் தேசபக்த ராணுவம் கொன்றது.

அநகாரிக தர்மபால முதல் அரசின் ஆசியுடன் அநியாயம் செய்யும் பொதுபலசேனா வரை அன்னியர்கள் என்று அவமானப்படுத்தும் முஸ்லீம் மக்கள் அல்ல ஆர்ப்பாட்டம் செய்தது. மண்ணின் மைந்தர்கள், இலங்கை தீவின் உரிமையாளர்கள் என்று பிரித்தாளும் நரிகளால் சொல்லப்படும் மக்கள். ஆனாலும் இந்திய முதலீட்டாளர்களான பாலாஜி ஷிப்பிங் நிறுவனத்தின் ஹேலிஸ் குரூப் தொழிற்சாலைக்காக பெளத்த சிங்கள தேசபக்த இராணுவம் கொல்லத் தயங்கவில்லை.

கூடங்குளத்தில் அணு ஆலை வேண்டாம் என்று அந்த மண்ணின் மக்கள் போராடும் போது பாரதமாதா என்று பஜனை பாடும் காங்கிரசு கள்ளர்கள், ரஸ்சிய முதலாளிகளிற்காக மக்களைக் கொல்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கென்றே உயிர் வாழும் தமிழ் கூட்டமைப்பினர் தமிழ் மண் முழுக்க சீன, இந்திய, மேற்குநாடுகளின் பொருளாதார கொள்ளைகள் நடப்பது குறித்து வாயே திறப்பதில்லை. கிழக்கில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களை எதிரிகள் என்று கொலை செய்யும், கிழக்கு மாகாணத்தில் மகிந்து சொல்லும் ஏவல் வேலைகளை தீயாய் வேலை செய்து முடிக்கும் மகிந்துவின் அப்பிரசென்டிவுகள் கருணாவும், பிள்ளையானும் சம்பூரில் இந்தியா கட்டும் ஆலை குறித்து மூச்சுக்கூட விடுவதில்லை.

ஊறும் நீர் எல்லாம் விசமாய் மாறினால் என்ன, உண்ணும் உணவு எல்லாம் நஞ்சு கலந்தால் என்ன, சுவாசப்பைகளை எல்லாம் அணு உலைக்கழிவுகள் நிறைத்தால் என்ன, அமிலமழை பொழிந்தால் என்ன அவர்களிற்கு கவலையில்லை. அவர்களிற்கு வேண்டியது பணம், பதவி, அதிகாரம். அதற்காக எதையும் விற்பார்கள். இயற்கையை அழிப்பார்கள். கனமழை பொழியும் காட்டை அழித்து மரத்தை கடத்துவார்கள். நீர் தரும் குளத்தை மேவி,மண் மூடி மாளிகை கட்டுவார்கள். தடுத்து நின்றால், கேள்வி கேட்டால் கொலை செய்வார்கள்.

கம்பஹாவில் கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள் இல்லை, தமிழர்கள் இல்லை, முஸ்லீம்கள் இல்லை. தமது வாழ்விற்காக போராடிய மனிதர்கள். இழப்பதற்கு எதுவும் இல்லாத ஏழைகள். இனத்தாலும், மதத்தாலும்,மொழியாலும் பிரிக்கப்பட்டு இருக்கும் மக்களிற்கு அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆராய் இருந்தாலும் அரசு கொலை செய்யும் என்பதை தமது மரணங்களின் மூலம் உணர்த்தி விட்டு சென்ற போராளிகள். மண்ணையும், மனங்களையும் மாசுபடுத்தும் கொலைகாரக் கும்பல்களை ஒழித்து கட்ட ஒன்றுபட்டு போராடுவோம்.