Mon06212021

Last updateSun, 19 Apr 2020 8am

சைவ வேளாள வெறி நல்லூர் ஆறுமுகத்தின் அடுத்த வாரிசு அ.முத்துலிங்கம்!!!

மூன்று நாட்களில் சொப்பனா தோழருடைய இரும்பு இதயத்தை பிளந்து உள்ளே நுழைந்து விட்டாள். கடத்தல் வெற்றிகரமான முடிவை எட்டியபோது அவரைக் கட்டிப்பிடித்து பெரிய முத்தம் ஒன்று கொடுத்தாள். தோழர் சிவா மறுபடி சொப்பனாவை அணைத்தார். அன்று இரவு அது 17வது தடவை. அவள் அவருடைய தலைமுடியை ஏழு குதிரை வேகத்தில் இழுத்தபடி முன்னேறினாள்.

அவள் கன்னமும், உதடுகளும் நெற்றிப் பொட்டும் ஒரே சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. "ஓ சொப்பனா, சொப்பனா" என்றார் தோழர் சிவா. அவருக்கு அந்தப் பெயரை பலதடவை உச்சரிக்க வேண்டும்போல தோன்றியது. அவர் குனிந்து தன் கால் பெருவிரலை பிடித்தார். "என்ன? என்ன?" என்று பதறினாள் சொப்பனா. நேற்று மதில் பாய்ந்த போது காயம் என்றார். "இங்கேயா?" என்று பெருவிரலை தடவினாள். "ஓமோம்" என்று தலையாட்டினார். அங்கே முத்தம் பதித்தாள். "இங்கே?’’ என்று கணுக்காலை தடவினாள். அவர் "ஓமோம்” என்று சொல்ல அங்கே முத்தம் பதித்தாள். "இங்கே?" முழங்காலை தடவினாள். "ஓமோம்". அங்கேயும் முத்தம் பதித்தாள். அவள் முத்தங்கள் மேல் நோக்கி ஏறின. உடம்பின் உறுப்பின் பெயர்களும் மாறியபடியே வந்தன.

"இனிமேல் எங்கள் போராட்டம் உலகமயமாக்கப்பட்டுவிடும். நகர்வுகள் இல்லை. பாய்ச்சல்தான்."

"ஓம் தலைவா."

"புதிய பெண்கள் அணி துவங்கப்பட்டு விட்டது. அதன் தலைவி இவர்தான், சொப்பனா."

அவசரமாக தலையை ஒதுக்கி, சேலையை நேராக்கி, உதட்டுக் காயத்தை மறைத்தவாறு சொப்பனா உடம்பை விறைப்பாக வைத்துக்கொண்டு செருப்புக் காலில் நின்றார்.

"ஓம் தலைவா."

இவை அ.முத்துலிங்கம் என்ற அறிவாளி, தமிழ் எழுத்தாளர், இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைகளிற்கு எதிராக போரிட வந்த தமிழ்ப்பெண்களைப் பற்றி ஆணாதிக்கத்துடனும், சாதிவெறியுடனும் கேவலப்படுத்தி எழுதிய வரிகள். இங்கே அவர் குறிப்பிடும் இயக்கம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F). ஈழப்புரட்சி அமைப்பு (E.R.O.S), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F), தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (N.L.F.T), மக்கள் தேசிய விடுதலை முன்னணி (P.L.F.T), தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை (T.P.S.O) என்பன இலங்கைத் தமிழ்மக்களின் விடுதலையை பொதுவுடமை தத்துவத்தின் வெளிச்சத்தில் போராட எழுந்த இயக்கங்கள். ஆகவே இயல்பாக இவற்றில் தமிழ் மக்களின் அடித்தட்டு மக்களும், யாழ் சைவ வேளாளியத்தின் கொடுமைகளால் ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களும் இணைந்து கொண்டனர். புலிகள் கொலைவெறி பிடித்து போராளிகளை கொன்று குவித்து, தங்களைத் தவிர மற்ற எல்லா இயக்கங்களையும் தடை செய்யும் வரை இந்த இயக்கங்கள் சமவுடமை கொள்கைகளை, சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.

அது இந்த யாழ் சைவ வேளாள வெறியர்களிற்கு பொறுக்க முடிவதில்லை. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தான் பேசிய முற்போக்கு கொள்கைகளிற்கு எதிராக இந்திய பிராந்திய வல்லரசின் கையாளாக மாறியது. வரதராஜ பெருமாள், சுரேஸ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்ற அதன் உறுப்பினர்கள் இலங்கை, இந்திய அரசுகளின் கால்களில் சரணடைந்து பதவிகளை தேடிக் கொண்டார்கள். இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இலங்கைத் தமிழ் மக்களை கொன்றார்கள். மக்கள் விரோதிகளாக மாறிப் போனர்கள். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு இந்த சாதி வெறியர்கள் அந்த இயக்கங்களின் ஆரம்ப கால வரலாற்றையே திரிக்கிறார்கள்.

வேளாள சாதி வெறியர்களிற்கான போராட்டத்தின் போது சங்கானையில் வெடிகுண்டை கூடைக்குள் எடுத்துச் சென்ற வீரப்பெண்மணி வள்ளியம்மை, தமிழரசுக் கட்சியின் சங்கானை அம்மா, திருகோணமலை பிலோமினா, தமிழ் இளைஞர் பேரவையின் புஸ்பராணி, காரைநகர் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தச் சென்ற போது மரணம் அடைந்த முதல் பெண் போராளி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சோபா போன்ற பெண்கள் ஆணாதிக்கம் மிகுந்த தமிழ்ச்சமுதாயத்தின் அடிமை விலங்குகளை உடைத்துக் கொண்டு மக்களிற்காக போரிட வந்தார்கள். அது இந்த சாதி வெறி ஆணாதிக்கப் பன்றிகளிற்கு சகிக்க முடியாமல் இருக்கிறது.

ஈழத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெண்கள் அமைப்பான "ஈழப்பெண்கள் விடுதலை முன்னணி" (E.W.L.F) "அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுந்து வருகின்றோம்" என்ற பிரகடனத்தோடு ஆணாதிக்கத்திற்கும், இன ஒடுக்குமுறைக்கும் எதிராக எழுந்தது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெண்கள் அமைப்பான ஈழப் பெண்கள் முன்னணியே இடதுசாரிய பெண்ணியக் கருத்துக்களை வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களிடையே ஓரளவிற்கேனும் பரப்பியது. அதற்கு முன்பு பரந்து பட்ட அளவில் பெண்கள் பிரச்சனைகளை பேசிய நிறுவனமயப்பட்ட பெண்கள் அமைப்பு வடகிழக்கில் இருக்கவில்லை. இடதுசாரிச் சிந்தனைகளுடன் போரிட வந்த அந்த பெண்களைத் தான் "நெற்றியிலே பொட்டு, காலிலே கொலுசு, கூந்தலிலே மல்லிகைச் சரம்" என்று கோவிலிற்கோ, கலியாண வீட்டிற்கோ போகும் பெண்கள் அலங்கரித்துக் கொண்டு போவது போல சொப்பனா என்ற பெண் E.P.R.L.F இல் சேர வந்தாள் என்று முத்துலிங்கம் அவதூறு செய்கிறார்.

அ.முத்துலிங்கம் தான் எழுதியது கதை என்று சமாளிக்கலாம். ஆனால் கதையில் அவர் அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். ஆகவே நடந்த நிகழ்வுகள் காலவரிசைப்படி எழுதப்பட வேண்டும். அலன் தம்பதிகளின் கடத்தலிற்கு முன்பே "ஈழப்பெண்கள் விடுதலை முன்னணி" உருவாக்கம் பெற்று விட்டது. ஆனால் முத்துலிங்கம் தனது வலதுசாரி பிற்போக்குப்பாசத்தின் காரணத்தால் அலன் தம்பதிகளைக் கடத்திய பிறகு தோழர் சிவாவும் சோபானாவும் உடலுறவு கொண்ட பின்பு தோழர் சிவா "புதிய பெண்கள் அணி துவங்கப்பட்டு விட்டது. அதன் தலைவி இவர்தான், "சொப்பனா" என்று அறிமுகம் செய்து வைப்பதாக ஒரு கீழ்த்தரமான பொய்யை எந்தவிதமான கூச்சமுமின்றி சொல்கிறார்.

அவருடைய இடதுசாரிய வெறுப்பு காரணமாக, வெள்ளாள சாதிவெறியின் காரணமாக இடதுசாரிய கருத்துகளைச் சொன்ன ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பற்றி எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அவ்வளவு பொய் சொல்கிறார். அதில் ஒன்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு அறிவுஜீவிகளைப் பிடிக்காதாம். அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி கலை, இலக்கியம், சமுகம், அரசியல் என்பவற்றை தமிழ்ச்சூழலில் எழுத்திலும், செயலிலும் முன்னெடுத்து செல்பவர்கள் இடதுசாரிகளே. தமிழைப் பழிக்கும், மனிதனை பிறப்பை வைத்து பிரிக்கும் கோயில்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்; கோமாளித்தனமான தமிழ் சினிமாக்களை புலம்பெயர் மண்ணிலும் விற்று பணம் பண்ணுபவர்கள்; விடுதலை இயக்க பத்திரிகைகள், இணையங்கள் என்று சொல்லிக் கொண்டு செய்திகள், கட்டுரைகள் எழுதத் தெரியாமல் போட்டோக்கொப்பி பண்ணி போடுபவர்கள்; அப்பிடியே எழுதி விட்டாலும் ஒபாமா தமிழீழம் பெற்றுத் தருவார் என்று சின்னப்பிள்ளைத்தனமாக எழுதுபவர்கள் தான் முத்துலிங்கத்தின் அகராதிப்படி அறிவுஜீவிகள்.

தமிழ்மக்களை அரசியல்மயப்படுத்தாமல் வெறும் ஆயுதங்களை நம்பி இராணுவத்தை கொல்வது தான் போராட்டம் என்று எந்த விதமான அரசியல் அறிவுமின்றி தமிழ்மக்களின் வாழ்வை நாசமாக்கி மக்களைப் பலி கொடுத்தது தாம் போராட்டங்கள் என்று இவ்வளவு இழப்புகளிற்குப் பின்பும் முத்துலிங்கம் என்ற அரசியல் விஞ்ஞானி சொல்கிறார். "இயக்கம் திருநெல்வேலியில் தாக்குதல் நடத்தி 13 ராணுவத்தினரை கொன்றது, அவர்கள் இயக்கம் என்ன செய்தது?" என்று இந்த வில்லேஜ் விஞ்ஞானி கேள்வி கேட்கிறார். மக்களை அணி திரட்டாமல் வெறும் பதின்மூன்று இராணுவத்தினரை கொல்வதற்காக திருநெல்வேலியின் நடுவில் வைத்து இராணுவத்தினரை கொன்று விட்டு ஓடி மறைந்தது போராட்டமாம். இதனால் சிங்கள பேரினவாதிகளால் தமிழ்மக்களின் மேல் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் முத்துலிங்கத்திற்கு அது ஒரு பெரும் வீரச்செயல், அண்ணே உங்களது அரசியல் அறிவை என்னவென்று சொல்வது?.

தமிழீழ விடுதலை இயக்கத்தவரை (T.E.L.O) முத்துலிங்கத்தின் பாசத்திற்குரிய இயக்கம் கிட்டுவின் தலைமையில் படுகொலை செய்து டயரில் போட்டு எரித்தது. E.P.R.L.F அலன் தம்பதிகளை கடத்தியது பற்றி நக்கலும், நளினமும் பேசும் முத்துலிங்கம் தமிழ் மக்களிற்காக போரிட வந்தவர்களை டயரில் போட்டு எரித்த கொலைகாரர்களை போற்றிப் பாடுகிறார். கிட்டுவும், குரங்கும் என்று தேவர் படம் போல ஒரு கதை எழுதியிருக்கிறார். இது தான் வலதுசாரி கும்பல்களின் பிழைப்புவாதம். அவர்களிற்கு முதுகெலும்பு என்ற ஒன்று எப்போதுமே கிடையாது. பிழைப்பிற்காக மக்கள் விரோதிகளை, கொலைகாரர்களை போற்றிப்பாடுவார்கள். சமுதாயத்தில் ஊறிப்போயிருக்கும் சாதி, சமயம் போன்ற பிற்போக்குத்தனங்களை தூக்கிப் பிடிப்பார்கள். சாதிக்கொடுமையை ஒழிக்க வேண்டும், சமயம் என்ற மாயையை உடைக்க வேண்டும் என்று சொல்லும் இடதுசாரிகளை இதனால் தான் ஜென்ம விரோதிகளைப் போல எதிர்க்கிறார்கள்.

அவர்கள் தந்தை என்றும், மேதகு என்றும், பெரியைய்யா என்றும் அழைத்த போது முத்துலிங்கத்தின் காதில் இன்பத்தேன் பாய்ந்தது. ஆனால் சக மனிதனை, சக போராளியை தோழர் என்று அழைப்பது அவரின் யாழ் சைவ வெள்ளாள வெறிக் காதுகளிற்கு பிடிக்கவில்லை. மேன்மை கொள் சைவவெள்ளாள நீதியின்படி எப்படி எல்லா மனிதரும் சமமாக முடியும்?. அதனால் தான் இயல்விருதை தன்னைப் போன்ற பிராமண அடிமை, இந்துவெறியர் ஜெயமோகனிற்கு கொடுக்கிறார். இலங்கையிலும், இந்தியாவிலும் தமது எழுத்துகளிற்காகவும், செயற்பாடுகளிற்காகவும் உயிரைக் கொடுத்த, சிறை சென்ற எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமது எழுத்தையும், வாழ்வையும் மக்களிற்காக அர்ப்பணித்து கலை, இலக்கியத்தின் உச்சம் தொட்ட மக்கள் எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்திய இராணுவம் இலங்கைத் தமிழ்மக்களைக் கொன்றது சரி என்று சொல்லும் ஜெயமோகனிற்கு இயல்விருது கொடுக்கிறார் முத்துலிங்கம்.

புளிய மரத்துப்பேய் கதை சொல்லும் முத்துலிங்கம் முதலில் தனது யாழ் சைவ வேளாள வெறி மரத்திலிருந்து இறங்கி வந்து பிறகு மற்றவர்களிற்கு கதைகளை அவிழ்த்து விட முயற்சி செய்யலாம். அவகாசம் எடுத்து சாதிவெறி, ஆணாதிக்கம், வலதுசாரிப் பிற்போக்குத்தனம் இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள். ஒன்றும் அவசரமில்லை, அதுவரை தமிழ்த்தாய் உங்களது எழுத்துகளிற்காக வழி மேல் விழி வைத்து காத்திருப்பாள்.