Mon06142021

Last updateSun, 19 Apr 2020 8am

தீதும் நன்றும் பிறர் தர வாரா

இலங்கை அரசின் போர்க்குற்றங்களிற்கு சுதந்திரமான, சுயாதீனமான  விசாரணையை வேண்டி புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி விடுத்த அறிக்கையை, லண்டனில் மக்களிற்கு கொடுத்துக் கொண்டிருந்த தோழர்களில் ஒருவர் புலிகளின் ஆதரவாளர்கள் எனப்படும் காடையர் கும்பலினால் அச்சுறுத்தப்பட்டார். “தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக சொல்பவர்கள் மக்கள் அழிவிற்கு வழிவகுத்த புலிகளின் ஏகாதிபத்திய சார்பு, குறுந்தேசிய அரசியலையே பிரதிநிதிப்படுத்துகின்றனர்” என்கின்ற வரிகள் அறிக்கையின் ஓரிடத்தில் வருகின்றன. இதன் காரணமாகவே தோழர் மிரட்டப்பட்டார்.

 

தோழரை துரோகி, சிங்களவனிற்கு பிறந்தவன் என்று வசை பாடி தாக்க முயன்றிருக்கிறார்கள். தோழர் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தன்னை விடுதலைப் போராட்டத்துடன் முழுமையாக இணைத்துக் கொண்டதுடன், இயக்கத்தின் அராஜய நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததனால் கொடிய சித்திரவதைக்கும் உள்ளானவர். இவரைத் தான் இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் துரோகி என்கிறார்கள்.

இங்கே ஒருத்தன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் போலே என்று அவர்கள் தோழரை தாக்க முயன்ற போது, அந்த மே 18 நிகழ்வை ஒழுங்கு செய்த பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த சிலர் அடிக்க வேண்டாம் என்று தடுத்திருக்கிறார்கள். இவங்க ரொம்ப நல்லவங்களாக்கும் என்று தோழர் நினைத்துக் கொண்டிருக்க அவர்கள் சொன்னார்களாம், இங்கே வைச்சு பிரச்சினைப் பட வேண்டாம் பொலிசிற்கு தெரிந்தால் அடுத்த முறை  கூட்டத்திற்கு அனுமதி எடுப்பது பிரச்சனையாகி விடும் என்றார்களாம். மக்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதாக நாடகம் போடுபவர்களின் லட்சணம் இது தான். துண்டுபிரசுரம் சொல்லும் விமர்சனங்களில் உடன்பாடு இல்லை என்றால் விவாதிக்க முடியாது, விவாதிக்க தெரியாது எங்களது இயக்க கலாச்சாரப்படி அடிதான் போடுவோம் என்பது தான் இவர்களின் அரசியல் வழிமுறையாக எப்போதும் இருந்து வருகிறது.

மற்றைய இயக்கங்களில் இருந்த பலர் தமது இயக்கங்களின் வன்முறை, மக்கள் விரோதப்போக்குகளை எதித்து விலகினர். இவர்கள் தொடர்ந்தும் இலங்கை அரசையும், மக்கள் விரோத சக்திகளையும் எதிர்த்து வருகின்றார்கள். அனால் புலிகளில் இருந்து விலகியவர்கள் வைச்சால் குடும்பி, அடிச்சால் மொட்டை என்பது போலஒன்றில் மேதகு அல்லது மகிந்தா என்று ஒரே தாவாக இலங்கை அரசின் பக்கம் தாவுகின்றனர். அரசியல் அறிவு, நேர்மை என்பது அறவே இல்லாத இந்த கூட்டம் மற்றவர்களைப் பார்த்து துரோகி என்கிறது.

புலிகளின் போராளிகள் இயக்கக்கட்டுப்பாடு, தலைமை சொல்வதை கேள்வி கேட்காது அடி பணிதல் போன்ற முறைகளினால் ஒரு முதலாளித்துவ ராணுவம் போன்றே வளர்க்கப்பட்டவர்கள். சமூகம் பற்றிய ஆய்வுகள், தேசிய விடுதலை போராட்டங்கள், வர்க்கப்போராட்டங்கள் பற்றிய எந்த விதமான அறிவுகளும் அவர்களிற்கு எக்காலத்திலும் வழங்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் கருணா பிரிந்த போது கருணாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்த பெரும்பாலான போராளிகள் வேறு வழியின்றி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு கருணாவுடன் பிரிந்தனர். பிரபாகரனின் தலைமை, கருணாவின் தலைமை இரண்டுமே அவர்களிற்கு ஒன்று தான், ஏனெனில் ஆயுத முனையிலே சொல்வதைக் கேட்டு அடிபணிந்து பழக்கப்பட்டவர்களால் சிந்திக்க முடியாது. கிழக்கு மாகாண போராளிகள் பிரிந்தவுடன் துரோகிகள் பட்டியல் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் எகிறியது. அது நாள் வரை பாதித் தேசிய தலைவராக இருந்த கருணா துரோகியாக்கப்பட்டார். கருணா போன்ற பயங்கரவாதிகளை இவர்கள் எப்படி அழைத்தாலும் எமக்கு கவலையில்லை. ஆனால் வேறு வழியின்றி கருணாவுடன் சென்றவர்களையும் துரோகிகள் ஆக்கினர்.

மட்டக்களப்பார்கள் எருமைத் தயிர் சாப்பிட்டு மூளை மந்தமாகிப் போனவர்கள் என்று சில யாழ் பிரதேசவாத அறிவுக்கொழுந்துகள், இதற்கு விஞ்ஞான விளக்கம் கொடுத்தார்கள். வசதி படைத்த யாழ்ப்பாணிகள் ஒரு குண்டு விழ முதல் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று நாட்டை விட்டு ஓடி வந்த போது நாட்டிலேயே அடக்குமுறைகளிற்குள் வாழும் கிழக்கு மாகாண மக்களும், வாழ்விழந்து போன வன்னி மக்களும், யாழ்ப்பாணத்து ஏழை மக்களும் புத்தி குறைந்தவர்கள் என்பது இந்த புலம்பெயர் தேசபக்தர்களின் கொழுப்பேறிய மண்டைகளில் சுரந்த ஆய்வு முடிவு. கிழக்குமாகாண போராளிகளை துரோகிகள் என்று மேதகு  கல்வெட்டிலே பொறித்த நாளிலே இருந்து ராணுவ சமனிலை குலைந்தது புலிகளின் தோல்விக்கான காரணிகளில் ஒன்று என்பது இந்த அறிவுகொழுந்துகளின் மரமண்டைகளிற்கு இன்னும் ஏறாத விடயம்.

இலங்கையின் தமிழ். சிங்கள மக்கள் இணைந்து போராடுவதன் மூலமே பாசிச அரசினை விழ்த்த முடியும் என்ற இலங்கையின் யதார்தத்தை எடுத்துச் சொல்பவர்களை சிங்களவனிற்கா பிறந்தாய் என்று இந்த மசிர்புடுங்கிகள் பட்டமளித்து கெளரவிப்பது வழக்கம். ஆனால் தினவெடுத்த தோள்களும், வீறு கொண்ட நடையும் கொண்ட செந்தமிழ் புலிகள் இரண்டாம் மேதகு கே. பி, கருணா,  பிள்ளையான்கள் தான் பிணம் தின்னும் இலங்கை அரசுடன் கூட்டுக் கலவி செய்கிறார்கள். புலிகளால் துரோகிகள் என்று சொல்லப்படுபவர்கள் இலங்கை மக்கள் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராக, நன்றாகக் கவனிக்கவும் இலங்கை அரசிற்கு எதிராக போராட வேண்டும் என்று கூறுகையில் மேதகுவினால் புடம் போட்டு எடுக்கப்பட்ட இந்த சொக்கத்தங்கங்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து நிற்பது ஏன் என்று இந்த புலிவால்கள் றூம் போட்டு யோசித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும்.

அந்த இடத்தில் புதியதிசைகள் அமைப்பினரும் தமது துண்டுப்பிரசுரத்தை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தனர். தோழரிடம் இவர்கள் யார் என்று தெரியுமா என அந்த காடையர் கும்பல் விசாரித்திருக்கிறது. ஆனால் புதியதிசைகள் அமைப்பினரை கும்பல் ஒன்றும் செய்யவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்.


1. பிரசுரம் ஆங்கிலத்தில் இருந்தது.


2. புதியதிசைகள் அமைப்பினர் புலிகளின் போர்க்குற்றம் தொடர்பாக எதையும் பிரசுரத்தில் சொல்லவில்லை. புலிகள் என்ற சொல் அல்ல, பு என்ற எழுத்தே வரக் கூடாது என்று பிளான் பண்ணி எழுதியிருக்கிறார்கள்.

 

ஈழ விடுதலை இயக்கங்களின் வன்முறை. ஜனநாயக மறுப்பு என்பவற்றிற்கு எதிராக பெரும்பாலானவர்கள் வாய் மூடி மெளனம் சாதித்தனர். அது இறுதியில் மக்களையே கேடயமாக்கி கொன்றது வரைக்கும் கொண்டு போய் விட்டது. இன்று புதிய ஜனநாயக மக்கள் முன்ணணிக்கு எதிராக மூன்று வன்முறைச் சம்பவங்கள் காடையர்களால் மேற்கொள்ளப்பட்டன.


1.நோர்வேயில், அந்த நாட்டு கம்யுனிஸ்டு கட்சி ஒன்றின் மாநாட்டின் போது புலி சார்பான அமைப்பு ஒன்று பங்கு பற்றிய போது, அவர்களின் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டை முன் வைத்த தோழி ஒருவர், புலிப்பினாமி அமைப்பின் தலைவரான பைத்திய கலாநிதி ஒருவரால் மிரட்டப்பட்டார். இன்று அந்த பைத்தியக் கலாநிதி, புலிகளும் போர்க்குற்றம் செய்தவர்கள்தான் ஆனால் அதற்காக வழக்கு தொடர முடியாது, ஏனென்றால் புலித்தலைமை இறந்து விட்டது என்று பழி முழுவதையும் செத்தவர்கள் மேல் போட்டது மயிர்க்கூச்செறியும் திகில்கதைகளில் கூட வராத திடீர் திருப்பம்.


2. பாரிசில் முன்ணணி இதழை விற்றுக் கொண்டிருந்த தோழர்கள் தடுக்கப்பட்டனர். ஆனால் இதை முன்னணியின் புத்தகம் என்பதால் தடுக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பொதுவாகவே அவர்களிற்கு புத்தகங்கள் என்றாலே அலர்ஜி தான்.


3. லண்டனில் தோழர் தாக்கப்பட்டது.

 

இக்காடைத்தனங்களை விட முற்போக்கு சக்திகள்,  மாற்று அரசியலிற்கான சமவெளிகள், பள்ளத்தாக்குகள், கைகாட்டிகள், திசைகாட்டிகள் என்று சொல்பவர்களின் மெளனமே அச்சமூட்டுவதாக இருக்கிறது. சந்திரமண்டலத்தில் மனித உரிமை மீறல் நடந்தாலும் விட மாட்டோம் என்பது போல கூச்சலிடும் இவர்கள் இச் சம்பவங்களை கண்டிக்காதது இவர்களின் சந்தர்ப்பவாதங்களை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

கெட்டதிலும் சில நன்மைகள் நடந்திருக்கின்றன. தலைவர் வாழ்க, துரோகிகள் ஒழிக என்று கத்த மட்டும் தெரிந்த கூட்டத்திற்கு ஏகாதிபத்திய சார்பு, குறுந்தேசியம் என்பன கெட்ட வார்த்தைகள் என்று விளங்கத் தொடங்கியிருக்கிறது. மாற்று சக்திகள் என்று சொல்பவர்களின் அறிக்கைகள் வழக்கமாக ஒருவரிற்கும் விளங்காமல் இருக்கும். இந்த முறை அவர்களும், பாவம் மற்றவர்களும் வாசித்து விளங்கிக் கொள்ளட்டும் என்று இலகுவாக எழுதியிருக்கிறார்கள்.

நமக்கான வாழ்வை நாமே தீர்மானிக்க முடியும். வன்முறையாளர்களிற்கும். பயங்கரவாதிகளிற்கும் இடம் கொடுத்தால் நமது வாழ்வு தான் இருள் மண்டிப் போகும். கணியன் பூங்குன்றன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் ” தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று ஆயிரம் ஆண்டுகளாக ஆழமாக. அழகாக இதைத் தான் கூறுகின்றான்.

 

விஜயகுமாரன

01/06/2011