Sun06132021

Last updateSun, 19 Apr 2020 8am

என்னது, புலிகள் அனுதாபத்தோடு பார்த்தாங்களா!!

தோழர் நேசன் எழுதும் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையிலான எனது அனுபவங்கள் தொடரில் கீழ்வரும் வரிகள் வருகின்றன. “சிறிது நேர மெளனத்தின் பின்பு என்னையும், விபுலையும் ஒருவகை அனுதாபத்துடனும் அதேவேளை சிறிது அய்யத்துடனும் பார்த்தவாறு கிட்டுவும், திலீபனும் பேசத் தொடங்கினர்”. இது தோழர் நேசனின் அனுபவ வரிகள், அவருடைய பார்வை இது. ஆனால் கிட்டுவினதும், திலீபனினதும் அரசியலும் செயற்பாடுகளும் அவர்கள், மற்றவர்களை அனுதாபத்தோடு பார்க்கக்கூடிய மனிதர்களாக நமக்கு என்றுமே அடையாளம் காட்டியதில்லை.

 

பிரேமதாசா, ஜே.வி.பி போராளிகளை ரயரில் போட்டுக் கொழுத்தியதற்கு எவ்வளவோ காலங்களிற்கு முன்பே ரெலோ போராளிகளை ரயரில் போட்டுக் கொழுத்திய உதாரண புருசர்கள்  இவர்கள். மனோ மாஸ்ரரை, விமலேஸ்வரனை, ராஜினியை, செல்வியை புலிகளது வலதுசாரி, பிற்போக்கு, கொலைவெறி அரசியலிற்கு எதிரான இடதுசாரிகள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்றவர்கள் இவர்கள். தோழர் நேசன் எதிர்த்து போராடிய உமாமகேஸ்வரன், ரெலோவின் சிறிசபாரட்ணம் போன்றவர்கள் பஞ்சத்துக்கு கொலைகாரர்கள் என்றால் புலிகள் பரம்பரை கொலைகாரர்கள். சர்க்காரியா விசாரணை கமிசன் கருணாநிதியை விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் என்று தனது அறிக்கையில் சொன்னது. அது போல விஞ்ஞான ரீதியாக கொலை செய்தவர்கள் இவர்கள் .

இன்று ஏறக்குறைய எல்லோராலும் மறக்கப்பட்ட ஒரு பரிதாபத்திற்குரிய மனிதனை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொல்ளலாம். “TELE” என்ற இயக்கத்தின் தலைவனான வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜெகனின் கதை,  இவர்கள் எந்த அளவிற்கு கொடூரமானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லும். புலிகளால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரி, ஜனநாயக வழி நின்ற போராளிகள். ஆனால் இந்த ஜெகன் அச்சு அசலாக ஒரு புலி. அவனது இயக்கம் தான் ரெலியே தவிர அவனது தலைவன் பிரபாகரன் தான். அவன் இவர்களை போலவே அரசியல் தெரியாத வலதுசாரி, குறுந்தேசியவாதி. இராணுவத்திற்கு குண்டெறிதல், பொலிசாரை சுடுதல் என்பவற்றின் மூலம் தமிழீழத்தை பெற்று விடலாம் என்று புலிகள் நம்பியது போலவே அவனும் நம்பினான். புலிகளின் ஒரு பிரிவு போலவே தான் செயற்படுவதாக அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு சில ஆயுதங்களையும் பெற்றுக் கொண்டான்.

யாழ்நகரில் இருந்து காரைநகர் கடற்படை முகாமிற்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்த கடற்படையினரை தாக்குவதற்காக அராலியில் கண்ணிவெடி புதைத்து விட்டு ஜெகனும் நாலைந்து போராளிகளும் காத்திருந்த நேரத்தில் புலிகள் அங்கு சென்று சுட்டார்கள். கிட்டுவிற்கு சொல்லி விட்டுத் தான் நாங்கள் தாக்குதல் செய்ய நிற்கிறோம் என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தவனை கிட்டு சொல்லித் தான் நாங்கள் உன்னை சுட வந்தோம் என்று சுட்டுக் கொன்றனர்.

அடுத்த நாள், தவறுதலாக ஜெகன் சுடப்பட்டார் என்று புலிகளுடன் சேர்ந்து சுவரொட்டிகளும் பொய் சொன்னன. ஆம், தவறுதலாக புலிகள் ரெலியினர் நின்ற இடத்திற்கு ஆயுதங்களுடன் சென்றார்கள். தவறுதலாக தலைவனை மட்டும் கொன்றார்கள். எவருடைய கருத்துக்களையும் செவிமடுப்பவராகவும், ஓரளவு அரசியல் அறிவுடன் பேசக்கூடியவரும் என்று தோழர் நேசனால் சொல்லப்படும் திலீபன் எங்களது ஆதரவாளனை, எங்களிடம் ஆயுதம் வாங்கியவனை வேண்டுமென்றே ஏன் நாங்கள் கொல்லப் போகிறோம்,  இது தவறுதலாக நடந்தது என்று கூட்டங்களில் பேசினார். வேண்டுமென்று நீங்கள் கொல்லவில்லை, வேண்டாம் என்று தான் அவனை கொன்றீர்கள்.

அராலியில் ஜெகனுடன் நின்றவர்கள் புலிகளின் பொய்களை அம்பலப்படுத்த முயன்றனர். வழக்கம் போல கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. (கொலை மிரட்டல்களும் தவறுதலாகவே விடப்பட்டிருக்கலாம்.) அவர்களது வாய்கள் மூடப்பட்டன. இவையெல்லாம் நேசனின் சொந்த ஊரைச் சுற்றி நடந்த நிகழ்வுகள். அவரது ஊரைச் சுற்றியுள்ள பிரிவிற்கு தான் திலீபன் அந்த நேரம் பொறுப்பாக இருந்தார். அவரது ஊரில் தான் திலீபனிற்கு காலில் சூடு விழுந்தது.

தோழர் கேசவன், “கோவிந்தன்” என்ற புனைபெயரில் புளொட்டினது கொலைகளை, மக்கள் விரோத அராஜக போக்குகளை அம்பலப்படுத்தி எழுதிய, தீப்பொறி குழுவினரின் வெளியீடாக வந்த “புதியதோர் உலகம்” என்ற தமிழின் மிகச் சிறந்த அரசியல் புத்தகங்களில் ஒன்றை, புளொட்டிற்கு எதிரானது என்ற காரணத்திற்காக புலிகளே எங்கும் வினியோகித்து வந்தனர். அதே கேசவனை பின்பு அவர்களே படுகொலை செய்தனர்.

மனிதம் என்ற ஒன்றே மனதில் இல்லாத இந்த கொலைகாரர்களிற்கு அனுதாபமும் இரக்கமும் எங்கிருந்து வர முடியும்.

-விஜயகுமாரன்

11/12/2011