Sun12052021

Last updateSun, 19 Apr 2020 8am

உங்கள் உண்மையின் உளந்திறந்து பாருங்கள்…!?

‘… மானுடச் சிறப்பெனும் வாழிட எல்லையில்

மடமைகள் சீண்டிப் போர் புகா மண்ணினை

நாடி நாம் காண்பதே நிலம் …”


ம்..!
வாருங்கள்..,
உங்கள் உண்மையின் உளந்திறந்து பாருங்கள்…!?

தன் தாயிலே ஏறிய கடாய்களுக்கு
தீவனம் தீத்தினர் ஆட்டுக்காரர் – எங்கள்
ஊரிலே ஏறிய படைகளுக்கு – பல
தகமைகள் சூட்டினர் நாட்டுத் தலைவர் – ஈழ(ப்)
போரிலே ஏறிய போராளியர்க்கு – பல
ஈனங்கள் சூட்டினர்
அவரேயான கூட்டுக்காரர்.

 

அவ்வளவுதானா..? இல்லையே..!

ஆன மட்டும் ஆடிவிட்டு – எம்
அரசியற் சதுரங்கத்தில் சோரம்விட்டு
அந்தரக் காற்றினில் பறந்துகொண்டே – சிவ
சுந்தரத் தாண்டவம் ஆடிவிட்டு
எந்திரப் போர்வையில் முடங்கியது
தமிழீழ மண் பூர்த்த அணிகலமாயை.

அவ்வளவுதானா..? இல்லையே..!!

ஏனென்று கேட்டால்
எக்காளமிட்டு எத்தி உதைப்பதுவும் – உது
உங்கள் யுத்திக் குறைவு என்றால் – எமை
செத்தாய் நீ என்பதுவும் – அந்த
ஆளுமை, அறிவற்ற பேச்சுகளாய் – எங்கள்
வாழ்வையும்… வளத்தையும்…
எல்லோர் மௌனக் கனவுகளையும்…
ஏன்தானோ முடக்கி அழித்தீர்கள்..?
ஏதுக்காக எங்களின் சுதந்திரதாகத்தை
உங்களின் சோற்றுக்குச் சொதியாக்கினீர்..?

உலகறுத்த கொலனியக் கொள்ளையர் – அவர்
விரித்த உலகமய வலையுள்ளே – நாம்
எமையே போரென்று புலம் பெயர்த்தி – எங்கள்
முக – வரிகளை எங்கோ தொலைத்த – இந்த
இழிநிலை வாழ்வின் பனிப் புதரிடையே..!?
தெரியாமல் தெரிந்தும்.., புரியாத – சில
நம்பிக்கைகளையே தின்று தொலைத்த – உந்த
பொய்களை.., புரட்டுகளை.., புரியாத்தனங்களை..,
ஏன்தானோ எங்களில் ஏற்றுகிறீர் – உமக்கு
நாமெலாம் ஏதறியா ஏமாளிகளென்றா – இல்லை
தினமும் கழிவிலே மகிழும் ஈனங்களென்றா..!?

நாமென்ன…
அசையாது அடைகிடக்கும் – அந்த
தஞ்சைப் பெரியகோயில்
நந்தியென்று நினைத்தீரோ..!?
அதனாலோ தெருவெங்கும்
பிணையாகி வடம்பிடிக்க – எம்
புலம் பெயர்ந்த தமிழர்களை – அந்த
நகர் காணும் நந்தியாக்க நினைத்தீரோ..!?
……. …….. ……..

வேள்விக் கடாக்களாய் வளர்த்தெடுத்து
ஒன்றுள் ஒன்றடித்து – எங்கள்
சுதந்திர வேட்கையை
அடியொடு அழித்திட
திடமான திட்டங்களை
சதிமூலம் வளர்த்துவைத்த
பாரத மத்திமுதல்…,
உலகிதன் விதிகளினை
தெரிந்தும் தெரியாதோர் நீர்தானே.

நற் புரட்சிக்குப் போரென்றால் – அது
ஊர் வரட்சிக்கு நன் நீரைப் போலாகும்.
மாறாக…
சிறிலங்காச் சிங்களப் பேரினவாதம் என்ற
பேயிலும் பெரியதை வெல்வோமென்று – நீர்
இந்து – தமிழ்ப் பேரினவாதம் வளர்த்த…,
வஞ்சிக்கப்படும் மக்களை வெறுத்த…,
பிரித்தாளும் கொள்கையைப் பிடித்த…,
சிங்களப் பேரினவாதிகளையே விஞ்சிய…,
போக்கிலித் தனத்திலும் மிகையான…,
உங்களைப் பார்த்து..!
என்னத்தைக் கேட்க..!?

உங்கள் வண்டவாளம் யாவும் – இப்போ
A9 தண்டவாளத்தில் ஏறிச் சென்று – அந்த
சிறிலங்கா சனநாயக சோஷலிஸக் குடியரசு – என்ற
நாடாளும் குண்டர் கோட்டத்தில்
கிழக்கு வடக்காய் கிழிந்து தொங்கும்
தூமைச் சேலைகளாய் நாறிக் காய்கிறது.

அன்றுமுதல் இன்றுவரை
திரும்பிப் பாருங்கள் – அதில்
பட்டவைகள் படிப்பென்று
தினமும் காணுங்கள்
இனியாவது சமூகநிலைக்கான
கற்றலினைத் தேடுங்கள் – எந்த
மக்களின் மாற்று நிலைகளை மதிக்கும் – நல்ல
தொண்டராய் மாறுங்கள் – உந்த
ஆயுதம் மீதிருந்த காதலை அழியுங்கள் – நல்ல
தேடலின் காதலராய் மாறுங்கள்.

சொந்த மண்ணின்
நிலை தொலைத்த – எங்கள்
உண்மை நிலை புரியாத
புலம் பெயர்ந்த தமிழ்மக்களே..!

பணமீட்டி மட்டும்
பண்டமாற்றாய்
ஈழ நிலமறுக்கும் மனங்களே..!!
இந்தக் குணங்களினைத் தகருங்கள்.

இதனாலே நாம் மீள்வுகொள்வோம்
மீட்சி பல நலமே கொள்வோம்.
நற் புரட்சிக்கே முகங்கொடுப்போம் – எவரும்
சிறப்பொடு வாழ்கின்ற எல்லையை – எவரும்
சீண்டிப் போர் புகா மண்ணினை
வேண்டி நாம் காண்பதே நலம்..!
அதுவே எல்லா மனிதர் நிலம்..!!

‘உலகிலே தேடடித் தெரியாமை கடவுளாச்சு
மனதிலே மலைப்பான மடமையே பிசாசாச்சு – என்றும்
இயற்கையில் இழிநிலை கொண்டார்க்கு – இந்த
செயற்கையில் வாழ்வெலாம் நீங்காத் தடையாச்சு’

- மாணிக்கம்
02/04/2011