Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

புலிக் குழுக்கள் நவம்பர் 27 ந் திகதி மாவீரர் நாளுக்கான தயார் படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். -(பகுதி-3)

(பரீசில் பரிதி மீதான தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் – என்பதன் தொடர்ச்சி)

பரீசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரெஞ்சு நடவடிக்கைகள் ஏப்ரல் முட்டாள்கள் நாளன்று தொடங்கப்பட்டது. பிரெஞ்சு சட்ட அமலாக்க அதிகாரிகள் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளில் 2007 ஏப்ரல் முதலாம் திகதி ஈடுபட்டது, பிரான்சிலுள்ள புலிகளுக்கு ஒரு மோசமான ஏப்ரல் பூல்ஸ் நகைச்சுவை போலத் தோன்றியிருக்கலாம்

 

காவல்துறையினர் மு.ப. 4.00 மணியளவில் மேற்கொண்ட அதிகாலைத் திடீர் தாக்குதலின் போது சந்தேகத்துக்கிடமான 39புலிச் செயற்பாட்டாளர்களை மேலதிக விசாரணைக்கு வேண்டிக் கைது செய்து காவலில் வைத்தார்கள். கைதுகள் பரீசிலுள்ள, சினே மான, மற்றும் சினே செயின்ட் டெனிஸ், பரீசுக்கு அருகில் உள்ள லா கோர்னேவு, மற்றும் வால் டி மான் மற்றும் வால் டி ஒயிஸ் ஆகிய இடங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பரிசின் சுற்றுப்புறங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு துணை இயக்குனரகம் (எஸ்.டி.ஏ.ரி), பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள விசேட பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனரகம் என்பனவற்றின் கட்டளைகளின்படி, 210 காவல்துறை அதிகாரிகள் எல்.ரீ.ரீ.ஈயினரின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மற்றும் முக்கிய எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களின் வீடுகள் என்பனவற்றில் மின்னல் வேக அதிரடிச் சோதனைகளை நடத்தினார்கள். சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களில் பரீசின் பைரனீஸ் வீதி, 341ம் இலக்கத்தில் அமைந்திருந்த பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பேரவை(ரி.சீ.சீ) தலைமைச் செயலகமும் அடங்கும்.

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பேரவை(ரி.சீ.சீ)யானது நாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயினரின் ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னணி அமைப்பாகும். பரீசில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய நிறுவனங்களில்  தமிழ் தொலைக்காட்சி வலையமைப்பு (ரி.ரி.என்), மாரியம்மன் கோவில், மக்கள்கடை எனப்படும் பல்பொருள் அங்காடி, தமிழ் அச்சகம், மற்றும் தமிழர் புனர் வாழ்வுக் கழக (ரி.ஆர்.ஓ) அலுவலகம் என்பனவும் உள்ளடங்கும்.

கணணிகள், கடிதத் தொடர்புகள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள், கணக்குப் பதிவேடுகள், புத்தகங்கள், காணொளிப் பதிவுகள், மற்றும் கையேடுகள் என்பன கைப்பற்றப் பட்டன. 23,500 ஈரோக்கள் பெறுமதியான நாணயத் தாள்கள் மற்றும் 42,000 ஈரோக்கள் பெறுமதியான காசோலைகள் முறையே ரி.சீ.சீ மற்றும் ரி.ஆர்.ஓ வளாகங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

எல்.ரீ.ரீ.ஈ யின் நிதி சேகரிப்பு இயக்கங்கள் வழக்கமாக வெள்ளி மாலை ஆரம்பித்து ஞாயிறு மாலை வரை தொடர்ந்து நடக்கும். சுமார் 60,000 ஈரோக்கள் பெறுமதியான நாணயத் தாள்கள் மற்றும் 25,000 ஈரோக்கள் பெறுமதியான காசோலைகள் என்பன செயற்பாட்டாளர்களின் வீடுகளில் கண்டெடுக்கப் பட்டன. கைது செய்யப்பட்ட 39 பேரில் முதற்கட்ட விசாரணைகளின்; பின்னர் 22பேர்கள் ஏப்ரல் முதலாம் திகதியே விடுவிக்கப்பட்டனர். அடுத்த நாள் மேலும் இருவர் விடுவிக்கப்பட்டனர்.

நடவடிக்கை

ஏபரல் 2,2007 காலை 10மணியளவில் மற்றொரு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பரீசில் தமிழருக்கு சொந்தமான 75 விகிதமான வியாபார நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ள லா சப்பல் மற்றும் மார்சடட் பொய்சனரீஸ் பகுதிகளை காவல்துறையினர் சுற்றி வளைக்கத் தொடங்கினர். வணிக வளாகங்கள் யாவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர்கள், பணியாளர்கள், மற்றும் சில வாடிக்கையாளர்கள் உட்;பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ தொடர்பான புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இறுவட்டுகள், காணொளிப்பதிவுகள், புத்தகங்கள், மற்றும் புகைப்படங்கள் போன்ற பொருட்கள் மற்றும் வெளியீடுகள் கைப்பற்றப் பட்டன. மேலதிக ஆய்வுகளுக்காக 20 பேர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் அன்று மாலையில் விடுவிக்கப்பட்டார்கள்.

ஏப்ரல்3 மற்றும் ஏப்ரல்4 ஆகிய தினங்களிலும் காவல்துறையினர் நடவடிக்கைகள் தொடர்வதைக் காணமுடிந்தது. குட்டி யாழ்ப்பாணம் என்றழைக்கப்படும் வடக்கு ரயில் நிலையப் பகுதி முக்கிய  பரிசீலனைக்கு உள்ளானது. பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயின் நிதி சேகரிப்பு வலையமைப்பின் அங்கத்தவர்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் யாவரும் அவர்களது வீடுகளில் வைத்து நேர்காணப்பட்டு காணொளிப் பதிவுகளுக்கு உள்ளாக்கப் பட்டார்கள். அவர்களுக்குச் சொந்தமான வீடுகள், வாகனங்கள், மற்றும் இதர சொத்துக்கள் யாவும் புகைப்படமெடுக்கப்பட்டதுடன் காணொளிப் பதிவுகளுக்கும் உள்ளாயின. தினசரி ஒருவர் வீதம் பலர் தடுத்து வைக்கப்பட்டனர். ஏப்ரல் 5ம் திகதி ஒரு விசேட பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றலின் முன்னாக மொத்தம் 19 சந்தேக நபர்கள் முன்னிறுத்தப் பட்டார்கள்.

ஆரம்பத்தில் மிரட்டிப் பணம் பறித்தல், உடல் வன்முறைகளை ஏற்படுத்துதல், மற்றும் பிரான்சில் குடியேறியுள்ள தமிழர்களிடத்து சட்டவிரோத வரையறைகளைப் பயன்படுத்தியது போன்ற பல்வேறு குற்றங்களின் பேரில் 19பேர்கள் குற்றச் சாட்டுகளுக்கு உள்ளானார்கள். அவர்கள் மீது மேலும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தது மற்றும் பயங்கரவாத அமைப்புடன் குற்றவியல் கூட்டு ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டது.  எல்.ரீ.ரீ.ஈ கவலையளிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்டது.

அந்தப் 19பேரில் நான்குபேர் நிபந்தனை எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டனர். மற்றொருவர் நீதிமன்றக் கண்காணிப்புக்கு உள்ளாகவேண்டும் என்கிற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். எனவே 14 பேர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் தொடர்ந்தன.

இந்தப் 14பேரும் ஒரு தடுப்புக்காவல் தடை சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். நான்கு அங்கத்தினர்களைக் கொண்ட ஒரு விசேட விசாரணை நீதிபதிகள் குழாமினால் ஆரம்பகட்ட குற்றங்கள் பதியப்பட்டு நிலுவையிலுள்ள மேலதிக விசாரணைகளுக்கு வேண்டி அவர்களை 120நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிறை வைக்கப்பட்டவர்களில் பாரீஸ் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பரிதி அல்லது றீகன் என்றழைக்கப்படும் நடராஜா மதீந்திரனும் ஒருவர். மேலும் ஐரோப்பாவின் அரசியல் மற்றும் பிரச்சார பிரிவின் தலைவர் மேத்தா என்றழைக்கப்படும் துரைசாமி அரவிந்தனும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ள மற்றொரு பிரபலமான எல்.ரீ.ரீ.ஈ தலைவராவார். இதேவேளை பரிதியிடம் பிரெஞ்சுக் கடவுச்சீட்டும் மேத்தாவிடம் இத்தாலியக் கடவுச்சீட்டும் இருந்தன.

மற்றவர்களில் எல்.ரீ.ரீ.ஈயின் பிரான்சுக்கான நிதிச் செயலர் சின்னஜெயன் அல்லது ஜெயன் என்றழைக்கப்படும் துரைசாமி ஜெயமூர்த்தி, மக்கள் கடை முகாமையாளர் செல்லக்கொழுந்து ரவிகுலன், பரிதியின் பிரத்தியேகச் செயலாளர் சின்னத்தம்பி சுதாகரன், மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக கணக்காளர் கந்தையா மோகனதாஸ், எல்.ரீ.ரீ.ஈயின் பிரான்சுக்கான விளையாட்டுத்துறை செயலாளர் வேந்தன், வணிகச் செயலாளர் மோகன், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயலாளரும் மற்றும் கோவில் அறங்காவலருமான தொங்கல் அல்லது பாலா மாஸ்டர் என்றழைக்கப்படும் வினாயகமூர்த்தி மற்றும் ரி.சீ.சீயின் அலுவலக நிருவாகி மகேஷ் மற்றும் பரீசின் சுற்றுப்புறத்தில் ஒரு பண்ணை வீட்டின் உடமையாளரான பார்த்திபன் என்போர் அடங்குவர்.

பண்ணை வீடு

இந்தப் பண்ணை வீடு தமிழர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்காககாப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. மகேஷ் எல்.ரீ.ரீ.ஈயின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல். பானுவின் சகோதரர் என்று சொல்லப்படும் அதேவேளை மோகன் சிலவருடங்களுக்கு முன்பு லா சப்பலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியர் கஜனது உடன்பிறப்பு என்றும் சொல்லப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வீடுகள், அலுவலகங்கள்,வியாபார நிறுவனங்கள், வாகனங்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான சகல அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களிலும் சோதனை நடத்தும் அதிகாரத்தை காவல்துறையினருக்கு நீதிமன்றம் வழங்கியது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பிரான்சிலுள்ள தமிழர்களிடத்து எல்.ரீ.ரீ.ஈக்கு நிதி சேகரித்ததாக சந்தேகத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதால், 2006 மே யிலிருந்து பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கமாக மாறியிருந்தது. எனவே அதற்காக நிதி சேகரிப்பது ஒரு குற்றமாகும்.இப்படியான ஒரு நிலையில் மிரட்டிப் பணம் பறித்தல், உடல் வன்முறைகளை ஏற்படுத்துதல், சட்டவிரோத வரையறைகளைப் பயன்படுத்துதல்,போன்றவை அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குவதாக இருந்தன.

பிரான்சில் எல்.ரீ.ரீ.ஈயின் நடவடிக்கைகள் பற்றிய ஆரம்பகட்ட விசாரணை ஜூலை 2006ல், ஐரோப்பிய ஒன்றியம் மே 27,2006ல் அதனை தடை செய்த பின்பு ஆரம்பமானது. 2006 ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக் குழுவொன்று முறைப்படி நியமிக்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு துணை இயக்குனரகம் (எஸ்.டி.ஏ.ரி),பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள விசேட பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனரகம் என்பனவற்றின் கட்டளைகளின்படியும் அவர்களின் மேற்பார்வையின் கீழும் காவல்துறையினர் மற்றும் நீதி அமைச்சின் வழக்கறிஞர்கள் ஆகிய இரு பகுதியினரும் விசாரணைகளில் தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர்.

2006 நவம்பரில் இதில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. பரிதியால் வழி நடத்தப்படும் எல்.ரீ.ரீ.ஈயினர் பரீசின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு பண்ணையில் கப்பம் பெறும் நோக்கத்தில் தமிழர்களை பலவந்தமாக அடைத்து வைத்து வருகிறார்கள். அவர்களில் சிலர் அடித்து சித்திரவதைப் படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

பின்விளைவுகளுக்கு அஞ்சி, காவல்துறையினர் மீதுள்ள நம்பிக்கை குறைவினால் மற்றும் தமிழர் பிரச்சினை தவறான வழியில் திசைதிரும்பி விடுலாம் என்கிற விசுவாசம் போன்ற பல்வேறு காரணங்கள் நிமித்தம் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரிடத்தில் முறைப்பாடு செய்வதை அலட்சியம் செய்து வந்தனர். ஆனால் மோசமாக அடித்து வதைக்கப்பட்ட ஒரு தமிழர், தனக்கு இந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பதைத் தனது உடற் சிகிச்சை வைத்தியரிடம் வெளிப்படுத்தியபோது ஆபத்தான அந்தக் குமிழ்கள் வெடித்துச் சிதறலாயிற்று. அந்த உடற் சிகிச்சை வைத்தியர் காவல்துறையினரிடம் எச்சரிக்கை விடுத்தபோது இந்தப் பிரச்சினைக்குள் எஸ்.டி.ஏ.ரி விரைவாகத் தலையை நுழைத்தது. அதன் அதிகாரிகள் பாதிக்கப் பட்டவரையும் மற்றும் வேறு இரண்டு சக பாதிப்பாளர்களையும் கண்டுபிடித்து அவர்களை ஒருவாறு இணங்க வைத்து நவம்பர் 2006ல் ஒரு இரகசிய முறைப்பாட்டைப் பதிவு செய்தனர்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழர்கள் எவரையும் இந்த விசாரணைகளின்போதோ அல்லது கைதுகளின்போதோ மொழிமாற்றல் மற்றும் விளங்கப்படுத்தும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தாததுதான்.பூரணமான ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசிப் பதிவு நாடாக்களையும் மொழிபெயர்ப்பதற்காக இந்திய வம்சாவழித் தமிழர்களே பயன்படுத்தப்பட்டனர். பாண்டிச்சேரியைச் சேர்ந்த கணிசமானளவு தமிழர்கள் பிரான்சில் குடியேறியுள்ளார்கள்.இந்தச் செயற்பாடு எல்.ரீ.ரீ.ஈயினருக்கு தகவல்கள் கசிவதை தடைசெய்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தச்சோதனைகளுக்குப்பிறகு நிலமையில் சுவராஸ்யமான முன்னேற்றம் ஏற்பட்டது.அநேக தமிழர்கள் தொலைக்காட்சியில் தோன்றி தாங்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரால் மிரட்டப் பட்டதாகவும், அதற்கு பணம் வழங்குமாறு கட்டாயப் படுத்தப்பட்டதாகவும் துணிந்து சொன்னார்கள். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அச்சிடப்பட்ட கையெழுத்து உள்ள, பிரான்சிய எல்.ரீ.ரீ.ஈ கிளையினரால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகளையும் சிலர் எடுத்துக் காட்டினர்.

தடுப்புக் காவல்

ஆகஸ்ட் 2007ல் பிரெஞ்சு நீதிமன்றம் ஏப்ரல் 1,2007ல் கைது செய்யப்பட்ட 14 எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபர்களுக்குமான தடுப்புக்காவல் காலத்தை 2007 டிசம்பர் முதல் வாரம் வரை வரத்தக்கதாக மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிப்புச் செய்தன.

2007 செப்ரம்பர் 25ல் பிரெஞ்சு பொலிசார் பரிதி என்கிற நடராஜா மதிதரனுக்குப் பதிலாக தற்காலிகமாக எல்.ரீ.ரீ.ஈ தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த ரஞ்சன் எனும் இரண்டாம் நிலை எல்.ரீ.ரீ.ஈ தலைவரை கைது செய்தனர். ரஞ்சனுடன் சேர்ந்து வெண்ணிலா கோஷ்டியைச் சேர்ந்த பல அங்கத்தவர்களும் பரீசில் வைத்து கைதானார்கள். ஊத்தை ரவி என்றழைக்கப்படும் ரவி மாணிக்கம் என்கிற வெண்ணிலா கோஷ்டியின் தலைவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர். வெண்ணிலா கோஷ்டியானது  பலவந்தமாகவும் மிரட்டல் கண்டனங்களுடாகவும் நிதி சேகரிப்பதற்காக  20 விகிதம் தரகுப்பணம் வழங்கப்படும் என்கிற நிபந்தனையின் பேரில் எல்.ரீ.ரீ.ஈ யினால் அமர்த்தப்பட்ட வெளி அமைப்பாகும்.

டிசம்பர் 2007ல் பிரெஞ்சு நீதிமன்றம் பிரான்சிலுள்ள 19 உயர்மட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கும் மேலும் நான்கு மாதங்களுக்கு தடுப்புக் காவலை நீட்டித்து உத்தரவிட்டது. இதில் ஏப்ரல் 2007ல் கைதான 14 பேரும் செப்ரம்பர் 2007ல் கைதான ஐந்து பேர்களும் அடங்குவர். 2007 கைதுகளிலிருந்து நழுவி, பாரிய சுற்றிவளைப்புகள் பரீசில் நடக்கும்போது நாட்டைவிட்டு வெளியேறியிருந்த இரண்டு எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களை பிரெஞ்சு பொலிசார் மே 2008ல் கைது செய்தனர். பிரான்சின் பயங்கரவாதத்துக்கு எதிரான துணை இயக்குனரகம் அறிவித்ததன்படி, சுப்பிரமணியம் முகுந்தன் மற்றும் யோகராசா சிவராசன் ஆகிய இருவரும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி மற்றைய எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் 2007ல் கைதானதன் பின்னர் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் மற்றும் நிதிப் பிரிவுகளுக்கு தலைமையேற்று நடத்திவருவது தெரியவந்துள்ளதனால் மே 13ல் பரீசில் வைத்து கைது செய்யப்பட்டனர் என்று தெரியவருகிறது.

ஒக்டோபர் 2008ல்தான் 22 எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் பிரான்சில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டார்கள். தலைமைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டவர் பரிதி. பிரான்சிலுள்ள 75.000 தமிழர்களை மிரட்டி  அவர்களிடமிருந்து ஐந்து மில்லியன் ஈரோக்களை பலவந்தமாக பெற்றதாக எல்.ரீ.ரீ.ஈமீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்தோடு பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ முன்னணி அமைப்பான  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் (ரி.சீ.சீ) குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. பெரும்பாலானவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு, குற்றவியல் சதி மூலம் பயங்கரவாதச் செயல்களைப் புரிந்தது, பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியது அல்லது  பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதற்காக பெரும் அமளியில் ஈடுபட்டது என்பனவாகவிருந்தன.

தண்டனை

2009 மேயில் எல்.ரீ.ரீ.ஈ க்கு இராணுவத்  தோல்வி ஏற்பட்டதன்பின்புதான், 2009 நவம்பரில் பிரான்சிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 21பேரில் 20பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஏ.எப்.பி செய்தியின்படி குழுவின் தலைவரான நடராஜா மதீந்திரனுக்கு, அச்சுறுத்தல் வழங்கி பரீசிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வாழும் தமிழ் சமூகத்தினரிடமிருந்து ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதற்காக வரிகள் மூலமாக சுமார் 5 மில்லியன் ஈரோக்களை மிரட்டிப் பெற்ற குற்றத்திற்காக 7வருட சிறைத்தணடனை வழங்கப்பட்டது. மற்றைய 19 குற்றவாளிகளுக்கும் ஆறு வருடமோ அல்லது அதற்குக் குறைவான சிறைத் தணடனையே வழங்கப்பட்டது. அதேவேளை ஒருவர் விடுவிக்கப் பட்டார். பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுமம் (ரி.சீ.சீ) ஒரு எல்.ரீ.ரீ.ஈயின் முன்னணி அமைப்பு எனத் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அது கலைக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

பரிதியும் மற்றவர்களும் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதால் இப்போது பிணையில் வெளிவந்து உள்ளனர். ரி.சீ.சீ யின் தடைக்கு எதிரான மேன்முறையீடும் நிலவையிலுள்ளதால்; அதுவும் இயங்கி வருகிறது. இந்த மேனமுறையீடுகளுக்கான தீர்ப்புகளை பிரெஞ்சு நீதிமன்றங்கள் வெகு விரைவில் வழங்கவுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் கடந்தமாதம் பரிதி மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பரிசில் விநாயகம் பிரிவின் தலைவரான தமிழரசன்தான் இந்தத் தாக்குதலின் பிரதான மூளை எனச் சந்தேகம் எழுந்துள்ளது. வெளிப்படையாக தெரிவது தாக்குதலின் நோக்கம் உயிரை எடுப்பதல்ல, ஆனால் ஊனமாக்குவதோ அல்லது தீவிரமான காயங்களை ஏற்படுத்துவதன் மூலம் பிரான்சிலுள்ள நெடியவன் பிரிவு எல்.ரீ.ரீ.ஈயினருக்கு ஒரு கடுமையான சமிக்ஞையை தெரியப்படுத்துவதற்காக இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பரிதி தனக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளதால் புலிகளின் அமைப்பில் தற்சமயம் எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்காத போதிலும் பெயரளவில் தொடர்ந்தும் பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயினருக்கு தலைவரைப் போலவே இருந்து வருகிறார். இது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் பரிதிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதலும் பிரதான நீரோட்டத்திலுள்ள எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒரு தாக்குதலாகவே கருதப்படும் என்று. எனவே வினாயகம் பிரிவினர் அவரை ஒரு நடைமுறையானதும் மற்றும் அடையாளத்தை அறிவிக்கும் நோக்கமுடையதுமான ஒரு இலக்காகப் பயன்படுத்தியுள்ளார்கள்.

நடைபெற்று வரும் இந்த அதிகாரப் போட்டியில் நெடியவன் பிரிவினைச் சேர்ந்த அநேக செயற்பாட்டாளர்கள் வினாயகம் பிரிவினரின் தாக்குதலுக்கு இரையாகி உள்ளார்கள் போலத் தெரிகிறது.முன்னர் குறிப்பிட்டதைப்போல தற்சமயம் வெளிநாடுகளில் எஞ்சியிருக்கும்  எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் மற்றும் கட்டமைப்பு எனப்படும் முன்னணிகள் யாவும் நெடியவனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.இதன் கருத்து யாதெனில் நெடியவன் பிரிவினர்தான் எல்.ரீ.ரீ.ஈயின் பிரதான நீரோட்டம் அல்லது பிரதான அமைப்பு எனக் கருதப்படுகிறது. வினாயகம் பிரிவினர் எல்.ரீ.ரீ.ஈயின் கிளர்ச்சி அல்லது முரண்பாடான பிரிவாகக் கருதப்படுவதுடன் நெடியவனின் அதிகாரத்தை செயலிழக்கச் செய்யவும் முனைகின்றனர்.

இதன்படி அநேகமாக புலிகளின் அனைத்து உள்ளக வன்முறைகளும் வினாயகம் குழுவினரால் நெடியவன் விசுவாசிகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டவையே. நெடியவனின் குழுவைச்சேர்ந்த அங்கத்தவர்களுக்கு வௌ;வேறு நாடுகளில் தொடரான உடற் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.சிலவற்றைப் பற்றி மட்டுமே முறைப்பாடுகள் வெளிவந்துள்ளபோதிலும் அநேகமானவை வெளிவராமலே போகின்றன.

(தொடரும்)

- டி.பி.எஸ்.ஜெயராஜ்

நன்றி:  தேனி.காம்