Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

"உடல் மண்ணுக்கு, உயிர் தத்துவமேதைக்கு"!!!

அறுவைதாசனிற்கு வேலை போய்விட்டது. அய்யாமுத்து ஒரு தமிழரின் கடையில் வேலை இருக்கிறது போய்ப் பார்ப்போம் வா என்று கூட்டிக் கொண்டு போனான். இவர்கள் போன போது முதலாளி கடைக்குள் போன ஒரு பெண்ணை பின்னுக்கு நின்று வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றார். முதலாளியின் பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் கிடந்தது.

இவர்களைக் கண்டதும் திடுக்கிட்டு "இவளை மாதிரி ஒருத்தி தான் அன்றைக்கு வந்து களவெடுத்தவள் அவள் தானா என்று பார்க்கிறேன்" என்று அசடு வழிந்தார். "அடையாளம் எங்கை வைச்சிருக்கிறார் பாத்தியா" என்றான் அறுவை. அதிருக்கட்டும் உங்கடை கட்சிக்கு போலி சோசலிஸ்ட்டுக்கள் என்று அடையாளம் ஒருவர் வைச்சிருக்கிறார் அதுக்கென்ன சொல்லுறாய் என்று அய்யாமுத்து நடுச்சென்ரரில் ஆணி அடிச்ச மாதிரி கேட்டான்.

"ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து முன்னிலை சோசலிசக் கட்சி என்ற வாக்குப் பொறுக்கும் கட்சியை தொடங்கினார்கள் என்று ஒரு புரட்சிக்காகவே உயிர் வாழும் ஒரு தத்துவமேதை சொன்னதை தானே சொல்லுறாய். முன்னிலை சோசலிசக் கட்சி தேர்தலில் நின்று ஆட்சியை பிடிக்கப் போகிறோம் என்று எங்காவது சொல்லியிருக்கிறதா?. "மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை எந்த வழியில் கொண்டு வரமுடியும் என்பதை விளக்க பொது இடதுசாரி வேட்பாளரை நிறுத்த உள்ளோம். அவர் யார் என்பதைவிட இடதுசாரிய அரசியல் உள்ளடக்கம் என்ன என்பதே முக்கியமானதாக இருக்கின்றது, எத்தனை வாக்குகள் எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல, மக்களை இடதுசாரிய திட்டம் சென்றடைவதும் அவர்களை அணிதிரட்டுவதுமே முக்கியமானது" என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.

இலங்கையில் இன்று இருக்கும் சர்வாதிகாரச் சூழலில் மக்களிடம் பரந்த அளவில் கட்சி வேலை செய்ய முடியாத நெருக்கடியில் இருக்கிறது. அரசபடைகளும் மகிந்தவின் குண்டர்களும் நீக்கமற நிறைந்திருக்கும் சூழலில் கட்சி வன்முறைகளுக்கு முகம் கொடுத்து தினமும் போராடுகிறது. ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் என்று கிடைக்கும் சிறு இடைவெளியை பயன்படுத்துவது என்பது தான் ஒரே நோக்கம். இவர்கள் சொல்லுவது போல் வாக்குப் பொறுக்குவது தான் நோக்கம் என்றால் முன்னிலை சோசலிசக் கட்சி தனது வேட்பாளரையே நிறுத்தலாமே, ஏன் இடதுசாரி பொதுவேட்பாளரை நிறுத்த மற்ற இடதுசாரி கட்சிகளுடன் பேச வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கேட்க போவதில்லை.

ஜனாதிபதி ஆட்சிமுறையோ, பாராளுமன்ற ஆட்சி முறையோ மக்களின் பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. ஜனாதிபதி ஆட்சிமுறையை வைத்துக் கொண்டு ஜெயவர்த்தனா, பிரேமதாசா, ராஜபக்சா போன்றோர் செய்யும் கொலைகளையும், கொள்ளைகளையும் தான் சேனநாயக்காக்கள், பண்டாரநாயக்காக்கள் பாராளுமன்ற ஆட்சிமுறையை வைத்துக் கொண்டு செய்தார்கள். இரண்டு ஆட்சிமுறையுமே மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளையே கொண்டிருக்கின்றன. இரண்டுமே முதலாளிகளிற்கு சேவை செய்யவே ஆட்சி அதிகாரத்தை பாவிக்கின்றன. இரண்டு ஆட்சிமுறைகளிலும் வெளிநாட்டு முதலாளிகளிற்கு நாட்டை விற்பதில் எந்த வித வித்தியாசமும் இல்லை.

அதே மாதிரித் தான் தமிழ் மக்களை இனவாதம் காட்டி ஒடுக்குவதில், முஸ்லீம் மக்களை மதவாதம் காட்டி ஒடுக்குவதில், மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமையை பறிப்பதில் அய்க்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எதுவித வித்தியாமும் இல்லை. தமிழ், முஸ்லீம் இனக்கலவரங்கள் பாராளுமன்ற ஆட்சிமுறையிலும் நடந்தன. ஜனாதிபதி முறையிலும் நடக்கின்றன. அய்க்கிய தேசியக்கட்சி கொலைகாரன் ஜெயவர்த்தனாவிற்கும், சுதந்திரக் கட்சி கொலைகாரன் மகிந்தாவிற்கும் இரத்தம் தோய்ந்த கைகள் ஒரே மாதிரித் தான் இருக்கின்றன.

"இன்னொரு பேரினவாதியை ஆட்சியில் அமர்த்தும் நோக்குடன் அல்ல. மகிந்த போன்ற பயங்கரவாதி தண்டிக்கப்படாமலிருப்பது மேலும் பல கொலையாளிகளை ஊக்கப்படுத்தும் என்பதற்காகவே" என்று ஒரு தத்துவ முத்து உதிர்க்கப்பட்டிருக்கிறது. "மகிந்த அரசையும், சர்வாதிகார ஜனாதிபதி முறையையும் ஒழிப்பது அவசியமானது தான், ஆனால் எப்படி என்பதில் தான் வேறுபடுகின்றோம், சிலர் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதை ஒழிப்போம், பிறகு கிடைக்கும் "ஜனநாயகத்தில்" உங்கள் அரசியலுக்காக போராடுங்கள் என்கின்றனர். இதை தான் ஜே.ஆர் முதல் சந்திரிக்கா காலம் வரை சொல்லியும் செய்தும் வந்தார்கள், ஒவ்வொரு முறையும் இதை சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை ஒழித்து சோசலிச வாழ்க்கை முறைக்காக போராடுவது ஒன்றே நிரந்தர தீர்வை நோக்கி செல்லும்.

"மக்களை அணிதிரட்டுவதும் போராடுவதுமே இலங்கையில் ஜனநாயகத்தை மீளமைப்பதற்கான ஒரே வழிமுறை என்பதை போலி சோசலிஸ்ட் குமார் குணரத்தினம் குழு மறுத்து பேரினவாத அரசியல் திட்டத்திற்கு உடந்தையாகின்றது" என்று ஒரு திருவாசகம் எழுதப்பட்டிருக்கிறது". யார், யார் மக்களை அணி திரட்டி போராட வேண்டும் என்று சொல்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. இவர்களது நிழல் கூட இவர்களிற்கு பின்னாலே போகாது. இங்கே ஒரு இணையம், நாலு பேர் சேர்ந்து ஒரு அமைப்பு. அதிலே அவர்களே கூடிக் கதைப்பது என்பதைத் தவிர வேறு எந்த நடைமுறை வேலையும் இல்லாத இவர்கள் மக்களை அணி திரட்டுவார்களாம். மக்களது பிரச்சனைகளிற்காக ஒரே ஒரு துண்டுப்பிரசுரத்தை இவர்கள் இலங்கையிலே ஒட்டிக் காட்டட்டும், அல்லது ஒரே ஒரு ஆளை என்றாலும் வைத்து ஒரு கூட்டமோ, ஒரு போராட்டமோ நடத்திக் காட்டட்டும். அதுக்கு பிறகு நான் உடல் மண்ணுக்கு, உயிர் தத்துவமேதைக்கு என்று எழுதிக் கொடுக்கிறேன் என்று அறுவை இரத்தக் கொதிப்பால் நடுங்கும் குரலால் வீரவசனம் பேசினான்.

தெருவிலே போகும் போது ஒருவர் வந்து ஒரு துண்டுபிரசுரத்தை கொடுத்தார். அதில் மேற்கு நாடுகளின் அரசு பிரதிநிதிகள் தமிழ்மக்கள் பிரச்சனை குறித்து பேசுவார்கள் என்று போடப்பட்டிருந்தது. "அண்ணே நீங்கள் இந்தக் கள்ளரை இன்னும் எவ்வளவு காலம் நம்புவீங்கள்" என்று அறுவை அவரைக் கேட்டான். "என்ன அப்பிடி சொல்லுறீர், எங்கடை இப்பிடியான வேலைகளாலே தானே அமெரிக்கா எங்களுக்கு பின்னாலே நிக்குது, பிரித்தானியா பின்னாலே நிக்குது" என்றார் அவர். பல்லைக் கடித்தபடி நின்ற அறுவையிடம் "பின்னாலே பின்னாலே என்கிறாரே இவர் அந்த முதலாளிக்கு சொந்தமோ" என்று மெதுவாகக் கேட்டான் அய்யாமுத்து.