Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

பார்ப்பனியமும், யாழ் சைவ வேளாளியமும் ஒரு பாம்பின் இரு தலைகள்!!!

இந்தியாவில் ஆதிக்க சக்தியாக, மக்களை ஒடுக்குகின்ற கோட்பாடாக பார்ப்பனியம் ஆயிரம் வருடங்களாக இருந்து வருகின்றது. இப்படிச் சொன்னால் உடனே பார்ப்பனியர்கள், பார்ப்பனிய அடிமைகள் ஏன் மற்ற சாதிகள் ஒடுக்குவதில்லையா, அவை ஆதிக்கம் செய்வதில்லையா என்று பூணூலை இழுத்துப் பிடித்தபடி கேள்வி எழுப்புவார்கள்.

உண்மைதான் சாதிப் படிநிலையில் மேலிருந்து கீழாக இருக்கும் ஒவ்வொரு சாதியும் அப்படித் தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஒடுக்குதலை நியாயப்படுத்தும் பிரதான சக்தி பார்ப்பனியம். இந்த ஆதிக்கத்திற்கு தத்துவ விளக்கம் கொடுப்பது பார்ப்பனியம். சாதி பிறப்பினால் வருவது, கடவுளின் சித்தம் என்று மயிர் புடுங்குவது பார்ப்பனியம்.

இப்படி ஒடுக்குபவர்களை நியாயப்படுத்துகிறவர்களாக அதை சமயம், கடவுள் என்று சொல்லி மக்களை மயக்குபவர்களாக இருந்ததினால் தாம் மன்னர்கள் பார்ப்பனர்களை பொன்னும், பொருளும் கொடுத்து ஆதரித்தார்கள். ஊர் மக்களை துரத்தி விட்டு பார்ப்பனர்களிற்கு நிலங்களை தானம் கொடுத்தார்கள். அதனால் தான் தமிழ் மக்களிற்கும், தமிழ் மண்ணிற்கும், ஏன் இந்த தமிழ் மன்னர்களிற்குமே எந்தவிதமான தொடர்புமே இல்லாத பிராமணர்களை வட இந்தியாவில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் இறக்குமதி செய்தார்கள்.

தமிழ் சமுதாயத்தில் இனக்குழுத் தலைவர்களே இருந்தார்கள். அவர்களிற்கு பிறப்பினால் தலைமைப்பதவி வரவில்லை. தலைவர்கள் மணிமகுடம் தரித்து மக்களிடமிருந்து விலகி இருக்கவில்லை. மக்களின் உழைப்பினை வரி என்ற பெயரில் களவெடுக்கவில்லை. கள்ளு விற்கும் பெண்ணிடம் கடன் சொல்லி கள்ளுக் குடித்த தலைவன், மாடு களவெடுத்து வந்து அந்த கடனை கட்டுவதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. இந்த ஆடு, மாடு களவெடுப்பதனைத் தான் "ஆநிரை கவர்தல்" என்று இலக்கியங்கள் சொல்கின்றன. ஆனால் பார்ப்பனியமோ மன்னனைக் கண்டால் திருமாலாக காண்கிறது. "எங்க வீட்டுப் பிள்ளை" எம்.ஜி.ஆர் மாதிரி கடவுளின் டபுள் அக்டிங் தான் மன்னர்கள் என்று திரைக்கதை வசனம் எழுதுகிறது.

பார்ப்பனியத்தின் மக்கள் விரோதத் தன்மையினால், பெரும்பான்மையான உழைக்கும் மக்களிற்கு எதிரான அதன் நச்சுக் கருத்துகளினால் தான் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் வரை பார்ப்பனர்களாக அல்லது பார்ப்பனிய அடிமைகளாக இருக்கின்றார்கள். ஆதரவற்ற குழந்தைகளிற்கான சேரமான்தேவி இல்லத்தில் பிராமணக் குழந்தைகளிற்கு தனி உணவு, தனிப்பந்தி; மற்றச்சாதி குழந்தைகளிற்கு வேறு உணவு, வேறு பந்தி என்று நடத்தியவர்கள் தேசவிடுதலை பக்தர்கள் வேடம் போட முடிந்தது. அதைத் தட்டிக்கேட்டவர்களை இன்றுவரை தூற்றுபவர்கள் தேசபக்தி வேடம் போட முடிகிறது.

இந்தியாவில் பார்ப்பனியம் எப்படி மக்களை ஒடுக்குகிறதோ அதை இலங்கை முழுவதற்கும் பெளத்த சிங்கள பேரினவாதம் செய்கிறது. அதையே தமிழ்ப்பகுதிகளில் யாழ் சைவ வேளாளியம் செய்கிறது. சைவத்துக்கும், தமிழிற்கும் ஆபத்து ஓடி வாங்கோ என்று அபாயச்சங்கு ஊதிய நல்லூர் ஆறுமுகம் யாழ் சைவ வேளாளியத்தின் தத்துவ ஆசிரியராக இருந்து வேளாளிய விசத்தை எல்லா மட்டத்திற்கும் பரப்பினார். ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழையும், தமிழரையும் பைட் பண்ணி மீட்டெடுக்க வெளிக்கிட்ட அவரிற்கு எல்லாத்தமிழரும் தமிழராகத் தெரியவில்லை. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வருண பிராமணியத்தை அவர் சந்தோசமாக ஏற்றுக் கொண்டார்.

பிராமணருக்கு கீழ் யாழ் சைவ வேளாள சூத்திரரான அவர் அடிமைப்பட்டுக் கொண்டிருக்க வேசிமக்கள் (சூத்திரர் என்றால் வேசிமக்கள்) என்று அவமானப்படுத்தப்பட அவரது தன்மானம் இடம் கொடுத்தது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் தான் அவரிற்கு இடித்தது. சூத்திரர் என்று யாழ் சைவ வெள்ளாளரோடு கரையார், முக்குவர், திமிலர், கோவியர், சாண்டார், சிவியார் என்று மற்ற இடைநிலைச்சாதிகளையும் சேர்த்ததைத் தான் அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாமல் போனது. மண்டையை கசக்கி ஐடியா போட்டு வெள்ளாளர்கள் சற்சூத்திரர்கள் என்று புரமோசன் கொடுத்து மற்ற சாதி சூத்திரர்களிடமிருந்து யாழ் சைவ வேளாளர்களின் புனிதத்தை காப்பாற்றினார். நல்ல காலமாக நளவர், பள்ளர், வண்ணார், அம்பட்டர், பறையர் என்ற சாதிகளை பஞ்சமர்கள் என்று சூத்திரர்களிற்கு கீழே வைத்திருக்கிறார்கள், இல்லாவிட்டால் நல்லூர் ஆறுமுகம் தற்கொலையே செய்திருப்பார்.

நல்லூர் ஆறுமுகத்தின் இந்த யாழ் சைவ வேளாள ஆதிக்க சிந்தனை தான் பின்பு பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் ராமநாதன், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், ஆயுதம் ஏந்திய தமிழ் தேசிய இயக்கங்கள் என்று அத்தனை சந்தர்ப்பவாத, வலதுசாரி தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களின் மேல் திணித்த தமிழ் குறுந்தேசியமாக பரிணாமம் பெற்றது. அதனால் தான் சிங்களவர்கள் தமிழ்மக்களை ஒடுக்குகிறார்கள் என்ற இவர்கள் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்கள் உரிமை கேட்டுப் போராடியபோது வேளாள சாதி வெறியர்களின் பக்கம் நின்றார்கள். ஒடுக்கப்படும் சிங்கள மக்களுடனோ, முஸ்லீம் மக்களுடனோ ஒரு போதும் சேரமாட்டார்கள். ஆனால் ஆறுமுகம் பிராமணர்களிற்கு கால் கழுவியது போல இவர்கள் இன்றைய "தேசிய நிறைவேற்று சபை" வரை பெளத்த சிங்கள பேரினவாதிகளுடன் கூடிக்குலாவுகிறார்கள்.

உழைப்பைக் கேவலப்படுத்துதல்; உழைக்கும் மக்களைக் கீழானவர்கள் என்று சொல்லுதல்; தாங்கள் காலாட்டிக் கொண்டு வீண் கதை பேசிக் கொண்டு மற்றவர்களிற்கு உத்தரவு போடுதல் என்பன பார்ப்பனியம், யாழ் சைவ வேளாளியம் என்பவற்றின் மிகக் கீழ்த்தரமான சிந்தனை வெளிப்பாடுகள். பெருமாள் முருகனின் மாதொருபாகன் புத்தகத்திற்கு எதிராக திருச்செங்கோட்டு கவுண்டர் சாதி வெறியர்களும், இந்து பயரங்கரவாதிகளும் எதிர்க்கும் போது "மாபெரும் சிந்தனையாளர்" ஜெயமோகன் அதற்கான காரணத்தை கண்டு பிடித்து விட்டார். ஈ.வே.ராமசாமி என்ற கிழவனின் பார்ப்பன எதிர்ப்பினாலே தான் கவுண்டர்கள் போன்ற இடைநிலைச்சாதிகள் இப்படி சாதி வெறி கொண்டவையாக மாறிவிட்டனவாம். "நான் பார்ப்பன ஆதிக்கம் பற்றி பேசினால் சந்தோசப்படும் வெள்ளாளர்களும், செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களை பற்றி பேசினால் முகம் சுளிக்கிறார்கள்" என்று சொன்ன ஈ.வே.ராமசாமியினால் தான் கவுண்டர்கள் சாதிவெறி பிடித்து அலைகிறார்கள் என்று இந்த பார்ப்பன அடிமை கண்டு பிடித்திருக்கிறது.

இந்து வெறியர்களைப் கண்டிக்காமல் ஈ.வே.ராமசாமியைப் பற்றி பொய்யும், பிரட்டும் பேசும் ஜெயமோகனை பெரியாரியர்கள் எதிர்த்த போது ஆயிரம் போராட்டங்களில் அடிபட்டுக் களைத்த அண்ணன் ஜெயமோகன் "இங்கே பொங்காதீர்கள். உங்கள் பெரியாரியம் வெறும் கோசம் இல்லை என்றால் திருச்செங்கோடுக்கு போய் நில்லுங்கள். உங்கள் கறுப்புப்படை திருச்செங்கோட்டை அதிரவைக்கட்டும். பெருமாள் முருகனை தூக்கி முன்னால் நிறுத்துங்கள்". என்று உத்தரவு போடுகிறார். தாங்கள் திண்ணைக்குப் பாரமாக இருக்க மற்றவர்கள் உழைத்து தங்களிற்கு சோறு போட வேண்டும் என்ற அதே பிராமணத் திமிருடன் உளையிடுகிறார்.

ஜெயமோகன் போன்ற பார்ப்பனிய அடிமைகளிற்கு பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் பகைவர்கள் என்பது போல யாழ் சைவ வேளாள வெறியர்களிற்கு இலங்கையின் முற்போக்கு, இடதுசாரி சக்திகள் தான் முதல் எதிரிகள். தமிழ் மக்களை கொன்றவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை; இந்தியாவுடனும், மேற்கு நாடுகளுடனும் டீல் போட்டு தமிழ் ஈழம் எடுக்கலாம் என்று ஏமாற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை இவர்களிற்கு ரொம்ப பிடிக்கும். இலங்கையின் இன்றைய இனவெறிச் சூழலில் ஒடுக்கப்படும் எல்லா இனமக்களும் சேர்ந்து போராடுவதன் மூலமே விடிவு கிடைக்கும் என்று சொல்பவர்களை இவர்கள் தமிழ்க்குறுந்தேசிய வேதத்தின் துணையோடு வசை பாடுவார்கள். ஒரு வருசமோ, இரண்டு வருசமோ ஒரு இயக்கத்தில் இருந்து விட்டு ஓடி வந்த இவர்கள் இலங்கையிலே நின்று போராடுபவர்களிற்கு சைவ வேளாள வெறியோடு உத்தரவு போடுகிறார்கள். உழைப்பவர்கள் நயினார்கள் சொல்வதை சால்வையை கக்கத்தில் வைத்துக் கொண்டு வாய்பொத்தி கேட்டது போல் இந்த யாழ் சைவ வேளாள வெறியர்கள் சொல்வதை இலங்கையின் இனவெறி, மக்கள் விரோத அரசுகளிற்கு எதிராக போராடுபவர்கள் கேட்க வேண்டுமென்று சாதிவெறி கக்குகிறார்கள்.

பார்ப்பனியம், பெளத்த சிங்கள பேரினவாதம், யாழ் சைவ வேளாளம் என்பன என்றுமே உழைக்கும் மக்களிற்கு எதிரானவை. இடிபாடுகளிற்கு மத்தியில் துளிர்க்கும் சிறு அரும்புகளை, நம்பிக்கை மொட்டுக்களை முளையிலேயே கருகச் செய்ய விசத்தைக் கக்கும் நச்சுப் பாம்புகளை அடையாளம் கண்டு கொள்வோம். இருளில் ஒளியாக இடதுசாரியத்தை தூக்கிப் பிடிப்போம்.