Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ்த்தேசியம், இலங்கை அரசு ஆதரவு; ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள்

லண்டன் புறநகர் பகுதியான ஹரோ நகரசபை மேயரான சுரேஸ் கிருஸ்ணா அல்லது லண்டன் பாபா என்பவர் கார்த்திகை மாதத்தில் மாவீரர் நாள் நிகழ்வில் "தமிழ்த்தேசியத்தின் தவப்புதல்வன்" என்னும் நாடகத்தை மேடையேற்றினார். பின்பு கழுத்தில் மணிகள், சங்கிலிகள் தொங்க ரணில் விக்கிரமசிங்காவுடன் சேர்ந்து "நீயும் நானும் ஒண்ணு, அதை தெரியாதவன் வாயில் மண்ணு" என்ற நாடகத்தை ஒரே மாதத்திற்குள் அரங்கேற்றினார்.

லண்டன் பாபாவை எனக்கு சிறுவயதில் இருந்து தெரியும். 1983 இல் இளைஞர்கள் எல்லாம் இயக்கங்களுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் தனது வீட்டில் கலர் பல்ப்புகள் போட்டு ஆங்கிலப் பாடலுக்கு டிஸ்கோ ஆடியதை ரோட்டில் இருந்து வேடிக்கை பார்த்த இளைஞர்களில் நானும் ஒருவன். அப்போது இவரது செயல்கள் எமக்கு வேடிக்கையாகவும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அதேபோல் லண்டன் வந்து அவர் ரஜனி பாடலுக்கு ஆடி "லண்டன் பாபா" பட்டத்தையும் விரும்பி சூட்டிக கொண்டதும் கூட எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. ஆனால் அவர் திடீரென புலிகளின் மேடையில் தோன்றி ஆரம்பகால போராட்ட வரலாறுகள குறித்து முழங்கியதைத்தான் என்னால் இன்று கூட தாங்க முடியாமல் இருக்கிறது என்று தோழர் பாலன், பாபா அவதாரம் எடுத்த புண்ணிய கதையை தனது முகப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இது தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள பெரும்பாலான பிழைப்புவாத தேசபக்த பிரமுகர்களின் கதை. இலங்கையின் இனவெறி அரசுகள் தமிழ்மக்களை படுகொலை செய்து கொண்டிருந்த போது எத்தனையோ ஆயிரம் ஆண்களும், பெண்களும் தம் வாழ்வு துறந்து மக்களிற்கான போராட்டங்களில் இணைந்து கொண்ட போது, இவர் போன்றவர்கள் மக்களின் துயரம் குறித்த எந்த விதமான சிந்தனையுமின்றி தம் சொப்பன வாழ்வில் மகிழ்ந்திருந்தனர். மண்ணில் விழுந்த மக்களை மிதித்துக் கொண்டு வெளிநாடு சென்றார்கள்.

வெளிநாடு வந்த பின்பு போராட்டத்திற்கு சேர்ந்த பெரும் பணத்திற்காக சிலர் தேசபக்தர்கள் ஆகினார்கள். தமக்கு ஒரு மேடை வேண்டும், பிரமுகர் பட்டம் வேண்டும் என்பதற்காக சிலர் தேசபக்தர்கள் ஆகினார்கள். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று புலம்பெயர்நாடுகளில் உள்ளூராட்சி சபைகள், பாராளுமன்றங்களில் பதவியைப் பிடிக்க சிலர் தேசபக்தர்கள் ஆகினார்கள். ஆனையிறவை அடித்த பிறகு அடுத்தது தமிழீழம் தான்; விட்டால் பிடிக்கேலாது ஏறுவோம் பஸ்சில் என்று மதில் மேல் பூனைகள் சிலர் தேசபக்தர்கள் ஆகினர். தமிழ் மக்களின் போராட்டத்தை அழிக்க ஏகாதிபத்தியங்கள் செய்த சதிகளிற்கு பணத்திற்காகவும், பதவிகளிற்காகவும் கூட்டுச் சேர்ந்த அயோக்கியர்கள் சிலர் தேசபக்தர்கள் ஆகினார்கள்.

மறு பக்கத்தில் ஈழப்போராட்டத்திற்கான முழுக்குத்தகையும் தமக்கு மட்டுமே மற்ற ஒருவரும் பக்கத்திலேயும் வரக்கூடாது என்று புலிகள் தம்மைத் தவிர்ந்த மற்றவர்கள் எல்லோரையும் கொலை செய்தனர். மக்களை நேசித்த எத்தனையோ மனிதர்கள், போராட்டத்திற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்த எத்தனையோ போராளிகள் அவர்கள் புலிகள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக புலிகளால் கொல்லப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பொதுவுடமை போன்ற முற்போக்கு அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த எல்லோரையும் புலிகள் கொலை செய்த பின்பு எஞ்சியது இப்படியான பிழைப்புவாதக் கூட்டங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏகாதிபத்தியங்களின் சதிகார ஏஜெண்டுகளும் தான்.

சுமந்திரன், சம்பந்தன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் துரோகிகள், தமிழ் மக்களின் எதிரிகள் என்று இன்றைக்கு சொல்வதை பார்க்கும் போது ரொம்பவே சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது. இந்த வலதுசாரி தமிழ்க்கட்சிகள் என்றைக்கு தமிழ்மக்களிற்காக பேசினார்கள்? என்றைக்கு தமிழ் மக்களிற்காக போராடினார்கள்? தமிழ்ப்பகுதிகளில் வீரவசனம் பேசிவிட்டு கொழும்பு போய் இனவாத இலங்கை அரசுகளுடன் கட்டித் தழுவுவது தானே அவர்களின் என்றைக்குமான வரலாறு. தமிழ் அரசுக் கட்சி என்று தமிழிலே வீரமாக பெயர் வைத்து விட்டு Tamil Federal Party என்று ஆங்கிலத்தில் பவ்வியமாக பம்முவார்கள். அதாவது தமிழிலே தமிழர்களின் அரசுக்கான கட்சி என்றும் ஆங்கிலத்திலே கூட்டாட்சி முறை சார்ந்த கட்சி என்றும் கட்சிப் பெயரிலேயே இவ்வளவு ஏமாற்றுவித்தைகள் காட்டுபவர்களைத் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மறுபடியும் புலிகள் கொண்டு வந்தார்கள்.

உலகின் மிகப் பெரிய பயங்கரவாத, மக்கள் விரோத அமெரிக்க அரசின் ஜனாதிபதிக்காக "ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு" என்று போராட்ட அமைப்பு ஒன்றின் ஆதரவாளர்கள் சங்கம் வளர்த்தது உலகிலேயே ஈழப்போராட்டத்தில் மட்டுமே நடந்த அதிசயம். இராக்கில் பொய் சொல்லி போர் தொடுத்த ரொனி பிளேயரின் லேபர் கட்சிக்கு ஒரு பகுதி தேசபக்தர்கள் ஆதரவு கொடுத்தனர். மறு பக்கத்தில் மார்க்கரட் தச்சர் போன்ற பேய்களின் கட்சியான கொன்செர்வட்டிவ் கட்சிக்கும் இந்த அரசியல் விஞ்ஞானிகள் ஆதரவு கொடுத்தனர். உலகின் மற்றப் போராட்ட அமைப்புக்கள் எல்லாம் முற்போக்கு சக்திகளுடனும், உழைக்கும் மக்களுடனும் கூட்டுச் சேர்ந்த போது இந்த பிழைப்புவாதிகளும், ஏகாதிபத்தியங்களின் முகவர்களும் வெளிப்படையாகவே வலதுசாரி, மக்கள் விரோத கட்சிகளுடன் சேர்ந்து கொண்டனர்.

இந்தியாவின் ஆதரவு இல்லாவிட்டால் புலிகளிற்கு எதிரான போரை வென்றிருக்க முடியாது என்று கோத்தபாய ராஜபக்ச வெளிப்படையாகவே அறிவித்தான். தமிழ்மக்களை இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்ற இந்திய அரசின் சூத்திரதாரி சோனியா காந்திக்கு எதிர்ப்புக் காட்டி தமிழ்நாட்டில் தடியடி வாங்கினார்கள்; சிறை சென்றார்கள். ஆனால் உலகத்தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் என்பவர் லண்டனில் வைத்து சோனியா காந்தியைச் சந்தித்து விட்டு "இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றிப் பேசும் போது சோனியாவின் கண்களில் ஈரம் தெரிகிறது" என்று பஜனை பாடினார்.

மக்களை நேசித்த போராளிகளை எல்லாம் கொன்று குவித்த பெரும்புலிகளில் பலர் இன்றைக்கு தமிழ்மக்களின் கொலையாளிகளான மகிந்தவின், மைத்திரியின் காலை நக்கும் நாய்களாக இருப்பது சதிகாரர்கள் எவ்வளவிற்கு ஊடுருவி இருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. புலிகள் போன்ற நீண்ட கால இராணுவ அனுபவம் கொண்ட அமைப்பு எப்படி முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்பிற்குள் முடங்கிக் கொண்டது என்பதை ஆராய்ந்தால் இந்த உள்நாட்டு, வெளிநாட்டு உளவுப்படைகளின் துரோகம் துலக்கமாக விளங்கும்.

இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா? - லங்கா சிறி, தமிழ்வின்

[ ஞாயிற்றுக்கிழமை, 20 டிசெம்பர் 2015, 04:53.22 PM GMT ]

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி லங்காசிறி என்னும் தமிழ்த்தேசியத்தையும், தமிழ்ச்சினிமா கிசுசுப்பையும் இரு கண்களாகக் கொண்ட இணையத்தளத்தில் மைத்திரி சிறிசேனா யாழ்ப்பாணம் போன புராணத்தை போற்றிப் பாடி வந்த செய்தி. தமிழ்த்தேசியம், இலங்கை அரசு ஆதரவு; ஒரே மேடையில் இரண்டு நாடகங்கள் என்பதற்கு குறுகத் தரித்த குறள் எதுவும் இதற்கு மேல் தேவையில்லை.