Thu08052021

Last updateSun, 19 Apr 2020 8am

பற நாயே, ஒரு தமிழ்த்தேசிய சாதிவெறி

மோப்பக் குழையும் அனிச்சம் முகந் திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

முகர்ந்து பார்த்தால் அனிச்சம்பூ வாடிவிடும்; முகம் கோணி பார்த்தால் விருந்தினர்கள் வாடிவிடுவார்கள் என்கிறான் அய்யன் வள்ளுவன். பார்வைக் கோணலிற்கே மனிதர்கள் முகம் வாடி விடுவார்கள் என்னும் மரபில் வந்த மனிதர்கள் நாமா என்று வெட்கி தலை குனிய வைக்கிறார்கள் சாதிவெறியர்கள். வள்ளுவன் பறை இசைக்கும் சமுதாயத்தில் பிறந்தவன் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. இங்கே வள்ளுவன் பெயரையோ, அவனது குறள்மொழியையோ சொல்லவே பயமாக இருக்கிறது.

பற நாயே என்றும்; ஈழத்தமிழர்களை அழித்த வள்ளுவன் போன்ற தமிழ்நாட்டு நாய்களே, எனக்கு குறள் மயிரா சொல்கிறாய், பொத்தடா வாயே; என்னைப் பற்றிக் கதைக்க உனக்கு என்னடா அருகதை இருக்கு, என்றும் அய்யனிற்கு திட்டு வாங்கி கொடுத்து விடுவோமா என்று பயமாக இருந்தாலும்; கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத் தக என்றும் அவனே சொல்லியிருப்பதால் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சமத்துவக் கல்வியைக் கற்ற நாம் அதற்கு தக அவனது குறளை எடுத்து விட்டிருக்கிறோம்.

தமிழ்த்தேசியத்திற்காகவும், தமிழர்களிற்காகவுமே வாழ்கிறோம் என்று சொல்லிக் கொள்கிற ஒரு மனிதர், இன்னொரு சக தமிழ்மொழி பேசும் மனிதரை "பற நாயே" என்று ஏசுகிற கொடுமையை என்னவென்று சொல்ல. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று இவர்கள் வைத்திருக்கும் சாதிமயிரிற்கு அளவுகோல் என்ன? ஒரு தொழில் செய்பவன் உயர்ந்த சாதி, வேறொரு தொழில் செய்பவன் தாழ்ந்த சாதி. ஆகா என்ன ஒரு அறிவு, என்ன ஒரு தத்துவம். இந்த முட்டாள்தனம் எங்கிருந்து வருகிறது. இந்துமதம் என்னும் பிராமணியப் பயங்கரவாததில் இருந்து வருகிறது. தாம் உழைக்காமல் வாழ்வதற்காக உழைக்கும் மக்களை பிரித்த நயவஞ்சகர்களின் சதியால் வந்த சாதிவேறுபாட்டை வேதம் என்று வணங்கும் வீணாய்ப்போனவர்களினால் தமிழ்ச்சமுதாயம் வீழ்ந்த கதை இது.

இவர்களின் மொழியான தமிழ் இல்லாத, தமிழிற்கு சற்றும் தொடர்பில்லாத, தமிழை தீண்டத்தகாத மொழி என்று சொல்லி சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் பிராமணன் உயர்ந்த சாதி. பிராமணர்களின் நாலு வர்ணங்களின் படி நாலாவது வர்ணமான சூத்திரர்கள் என்றால் யாரென்று மனுசாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த பி.ஏ கிருஷ்ணன், பிராமணக் குடும்பத்தில் பிறந்த கண்ணனால் வெளியிடப்படும் "காலச்சுவடு" இதழில் பின்வருமாறு சொல்கிறார். http://www.kalachuvadu.com/issue-159/page50.asp

"எனக்குக் கிடைத்த இரு மொழிபெயர்ப்புகளில் ஒன்று பழையது. 1886 ஆம் வருடத்தில் ப்யூலர் மொழிபெயர்த்தது. அதில் சுலோகம் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது: There are slaves of seven kinds, he who is made a captive under a standard, he who serves for his daily food, he who is born in the house, he who is bought and who is given, he who is inherited from ancestors and he who is enslaved by way of punishment. அடிமைகளில் ஏழு வகைகள் -

  • போரில் அடிமைப்பட்டவன்
  • தின உணவிற்காக வேலை செய்பவன்
  • வீட்டில் பிறந்தவன்
  • வாங்கியவன்
  • கொடுக்கப்பட்டவன்
  • மூதாதையர்களால் தரப்பட்டவன்
  • தண்டனையாக அடிமைப்படுத்தப்பட்டவன்

இந்த அடிமைகள், சூத்திரர்கள் என்று சொல்லப்படுபவர்களில் தான் இரு மரபும் துய்ய வந்த வேளாளர்கள் அடங்குகிறார்கள். இவ்வாறு வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் தம்மை அடிமைகள் என்று அழைப்பதை அகமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு அவர் தம் பாதம் நக்கி பணிவிடை செய்வது தான் இவர்களது சாதிப்பெருமையாக இருக்கிறது. அன்றில் இருந்து இன்று வரை எமது சமுதாயத்தின் அவலவாழ்விற்கு மேலிருந்து கீழாக எல்லா மட்டங்களிலும் பரவியிருக்கும் சாதியே முதன்மைக் காரணியாக இருக்கிறது. இடதுசாரி, முற்போக்கு சக்திகள் சாதிக்கொடுமையை எதிர்த்துப் போராடும் போது பிற்போக்கு தமிழ்த்தேசியவாதிகள் சாதிய வெறியர்களாகவே என்றைக்கும் இருக்கிறார்கள்.

தமிழ்த்தேசியத்தையும், சாதிவெறியையும் ஒரே வாயால் பேசிவிட்டு அது வேற வாய், இது நாற வாய் என்று சொல்லும் இந்த ராமசாமி மாதிரியானவர்கள் விதிவிலக்குகள் அல்ல. சாதி தான் பிற்போக்கு தமிழ்த்தேசியத்தின் அடிப்படை விதியாக இருக்கிறது. தமிழரசுக் கட்சி என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் சாதிக்கொடுமைகளிற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடியபோது சாதிவெறியர்களின் பக்கமே நின்றனர். அண்ணன் அமிர்தலிங்கம் ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்தை கிண்டலடித்து பாராளுமன்றத்தில் பேசுமளவிற்கு சாதிவேறி சகஜமாக இருந்தது.

முதன் முதலில் தமிழ் ஈழம் கேட்டவர்களில் ஒருவர் என்று விக்கிபீடியாவில் குறிப்பிடப்படும் "சிங்களத் தலைமையிடம் ஏமாந்தேன், அடங்காத் தமிழன் யான், அடிமையாக வாழமாட்டேன், தமிழ் ஈழம் அமைப்பதே ஒரே வழி" என்று வீரவசனம் பொழிந்த சுந்தரலிங்கம் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலிற்குள் வழிபட செல்ல போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக வாழுங்கள், கோவிலிற்குள் விடமாட்டோம் என்று எதிர்த்து நின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பச் சேர்ந்த வவுனியா நகர சபைத் தலைவரினால் 2012 இல் துப்புரவுத் தொழிலாளர்கள் “வெளியே போங்கடா சக்கிலிய நாயளே” என இழிவுபடுத்தப்பட்டனர்.சக்கிலியர்கள் வழமையான மனிதர்கள் அல்ல என்று 2015 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நகரசபை உபதலைவரான சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா என்ற சாதிவெறி பிடித்த நாய் ஊளையிட்டது.

ராமசாமியால் திட்டப்பட்ட ரவிக்குமார் தமிழ்நாட்டு சட்டசபையில் உறுப்பினராக இருந்தவர். தமிழராய் உணரும் தருணம் (2009) என்ற ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு போன்ற நூல்களை எழுதியவர். விடுதலைப் புலிகள் என்ற பெயரை ஒத்ததாக தமது கட்சிப் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயரை கட்சிக்கு வைத்த திருமாவளவனின் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களின் அரசியலை விட்டு விடுவோம்.

ஆனால் "ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார் போன்ற நாய்களே பொத்தடா வாயை" என்று புலிகளின் ஆதரவு அமைப்பான விடுதலைச் சிறுத்தைகளை சேர்ந்தவரை சொல்லும் இந்த லூசுக்கூட்டம் ஈழ மக்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது "போர் என்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்" என்று மக்களின் மரணங்களை நியாயப்படுத்திய பார்ப்பனப் பயங்கரவாதி ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று காலில் விழுகிறது. இதே கூட்டம் தான் தமிழ்மக்களைக் கொன்ற சோனியா காந்தியைச் சந்தித்து விட்டு "இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து பேசும் போது சோனியாவின் கண்களில் ஈரம் தெரிகிறது" என்று உளறியது. ஜெயலலிதாவை கொள்ளை அடித்ததிற்காக சிறைக்குள் தள்ளிய போது கிளித்தட்டு விளையாட்டில் கோடு விட்டு கோடு பாய்வது போல் நாடு விட்டு நாடு கடந்து தமிழீழம் காணலாம் என்று சொல்லும் கூட்டம் விட்ட கண்ணீரில் அந்த அறிக்கை அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கப்பல் போல மிதந்தே போய்ச் சேர்ந்தது.

இது அரசியலில் இருக்கும் சாதிவெறி லூசுக்கூட்டம் என்றால் பதிவுலகில் இதை வென்ற லூசுக்கூட்டம் தம்மை அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு உலா வருகிறது. "பற நாயே" என்பது சாதியை குறித்து சொல்லும் வெறிச்சொல் இல்லையாம், அது சாதாரணமான வசவுச் சொல் என்று ஒன்று உளறியது. நாய்களே, சாதிக்கொடுமையினை தினமும் அனுபவிக்கும் ஒடுக்கப்படும் மக்கள் சொல்லட்டும், அது சாதிவெறியா இல்லையா என்று, ஒடுக்கும் சாதிவெறியர்களான நீங்கள் உங்களது ஊத்தை வாய்களை திறக்க வேண்டாம்.

இன்னுமொரு அறிவாளி ராமசாமியின் சாதிவெறி கண்டு அறச்சீற்றத்துடன் பொங்கி எழுந்து இப்படிக் கண்டிருக்கிறார், "மற்றவர்களை சாதி சொல்லி திட்டும் நீங்கள், உங்களது சாதியினை எண்ணிப் பார்க்க வேண்டும்". ஆகா என்ன ஒரு சாதி எதிர்ப்பு. அண்ணன் ராமசாமி வெள்ளாளர் இல்லைப் போலிருக்கிறது, ஆகவே அவருக்கு சாதிவெறி காட்ட உரிமை இல்லை என்பதை அந்த அறிவாளி நினைவூட்டுகிறார்.

என்ன வெங்காய மொழி?

நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,

நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,

நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்,

நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்,

நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி

என்று சொன்னான் ஈரோட்டு தாடிக்காரன் ராமசாமி, அத்துடன் நமது தேசியம் சாதி காப்பாற்றும் தேசியம் என்பதையும் சேர்த்துக் கொள்வோம்.