Sun09192021

Last updateSun, 19 Apr 2020 8am

வாழ்வைச் சந்தித்தல்: கவியரங்குக்கான அறிமுகம்

(தேசிய கலை இலக்கியப் பேரவையின் 39வது ஆண்டுவிழாவின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வாக 17-06-2012 அன்று 'வாழ்வைச் சந்தித்தல்' என்ற தலைப்பில் இடம்பெற்ற கவியரங்குக்கு வழங்கப்பட்ட அறிமுகம்)

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

 இது கவிதைகளுக்கான நேரம்


கவிதை மூழ்கிக் கரைவதற்கு மட்டுமல்ல...
மூழ்கி முத்தெடுத்து
மீண்டும் உயிர்த்து
மேலெழும்பி
வானைத் தொடவும் தான்...

இங்கே மூங்கில்கள் முறித்து எழுகிறது குரல்

கோரிக்கையற்றுக் கிடக்கும் வாழ்க்கையின் கூறுகளில்
'வாழ்வைச் சந்திப்போம்' வாருங்கள்...

இவை
காற்று அழைத்துவரும்
கனவுகள்
கற்பனைகள்
காகிதங்கள்
கடிதங்கள்
கல்லறைகள்

இவற்றை சொற்களால் மொழிபெயர்த்து
காற்றில் அழைத்து வரும்
கவிஞர்களை அழைப்போம்…

முதலில்

ஒரு கவியரங்குக்கு முதலில் மேடையேறும்
எல்லாத் தகுதியும் இவனுக்குண்டு

ஈழத்துக் கவிஞரின் பெயரொன்றைச் சொல்லும்படி
இளையோரிடம் கேட்டுப்பாருங்கள்
சொல்வார்கள் பலர் இவர் பெயரை

சந்தியிலே நின்றபடி
சந்தத்தில் சிந்துபாடி
சந்தர்ப்பத்திற்கும் சிந்துபாடி
கதை பேசி
கானம் பாடி

'நாற்சந்தியில்' வாழ்வைச் சந்திக்க வருகிறார் ஆதித்தன்.

அடுத்து

இவர் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் கைதேர்ந்தவர்
சங்ககாலப் பெண் புலவர்கள் பற்றிக் கேட்கலாம் இவரிடம்
"வெள்ளைவீதியார்" கேள்விப்பட்டதுண்டா நீங்கள்
கேளுங்கள் இவரிடம்…

ஆனால்
வானலைகளில் இவர் குரலைத் தொலைத்தது - சோகம்

இந்தக் கனவுகள் தொலைத்த பெருநகரில்
கனவுகளில் காசு பார்ப்பது என்னமோ ஊடகங்கள் தானே
எனவே
கனாப் பொழுது இவருக்கு நல்ல பொருத்தம்

இன்று
கனாப்பொழுதில் கண்டதெல்லாம் வாழ்வாமோ?
கேட்போம் இவரிடம்

அட்டாங்கயோகம் ஆனந்தம் தந்துவிடும் - நான்
நித்தியானந்தாவைச் சொல்லவில்லை

அட்டாங்கயோகம் ஆனந்தம் தந்துவிடும் 'கனாப்பொழுதில்'
வாழ்வைச் சந்திக்க வருகிறார் பவணீதா.

மூன்றாமவர்

இன்று இந்த அரங்கை நிறைத்தவர் இவர்
இவர் கவிதை பாடும் அழகை காண வந்தோர் பலர்
கேட்க வந்தோரோ சிலர்

கவிதை இவருக்கு கைவந்த கலை - ஆனால்
காதல் இவருக்கு ஏனோ வாய்ப்பதில்லை - அப்படி
வாய்த்தாலும் உடனிருப்போர் விடுவதாயில்லை

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லைத் தானே…

இதனால் தானோ என்னமோ
இவருக்கு எல்லாமே போர்க்களமாகிப் போனது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
களத்தில் நின்றபடி
'போர்க்களத்தில்' என
கவியுரைக்க வருகிறார் ரெஷாங்கன்.

எந்தப் போர்க்களத்தில் இவர் வாழ்வைச் சந்தித்தாரோ?

அடுத்தவர்

ஓவியமும் கவிதையும் ஒருங்கே வாய்க்கும் இவருக்கு - ஆனால்
இவர் கவிதை விளங்குவதில்லை என்கிறார்கள் நண்பர்கள்
நான் கேட்டதில்லை - இன்று
கேட்டுத்தான் பார்ப்போமே...

இன்னொரு பிந்திக் கிடைத்த செய்தி
இலத்திரனியல் வல்லுனரான இவர்
இப்போது 'ரோபோ' ஒன்றைச் செய்து கொண்டிருப்பதாக தகவல்
அதற்குப் பெயர் தேடுகிறார் என்பது மேலதிக தகவல்
பெயர் 'சிட்டி' இல்லை எனமட்டும் உறுதியாக நம்பலாம்

இந்தக் காலப் பெருவெளியில்
எதைத் தொடங்க
எதை முடிக்க

வாழ்வை
எங்கே சந்திக்க
எங்கே சிந்திக்க

கேள்விகள் மட்டும் முடிவற்றுத் தொடர

"காலமுடிவில்" வாழ்வைச் சந்திக்க வருகிறார் நிலா.

இறுதியாக

ஆதியும் அந்தமும் இல்லா இந்த அருட் பெரும் சோதியை
இறுதியாய் அழைப்பது தகும்

ஆதியை முதலில் அழைத்ததால் இவரை கடைசியாக
நிச்சயம் அழைக்கலாம்

இவர் இன்று பிந்தித்தான் வந்தார்
நிகழ்வுக்கு காலம் தாழ்த்தி வந்தது ஏன்? எனக் கேட்டபோது
இவர் சொன்னார்…

கட்டில் நடுவில் அவள் - களிப்பேறி
கைகள் பரபரத்து அவிழ்க்க
அவிழ்ந்து விழுந்தன
மனத்திலிருந்து குப்பைகளாய்

கலவிக் களியின் கலையோகம் - அது நிலவைத் துகிலுரிக்கும்
என்கிறதே கலிங்கத்துப்பரணி - உண்மைதானோ?
இவரிடம் தான் கேட்டுப் பார்க்க வேண்டும்

தாரமும்
தடை ஊறுகாயும் தொட்டுக் கொள்வதற்கு மட்டுமல்ல
என்ற இரகசியம் சொன்னவன் - இவன்

'கலவியில் அறியாமை பேரின்பம்' என்ற மயூரா
உன்போல் கலவியில் வாழ்வைச் சந்திக்க யாரால் முடியும்…

உன்னை மட்டும் தான் தோழமையுடன் என்னால் இப்படி அழைக்க முடிகிறது.

‘கலவியில்’ வாழ்வைச் சந்திக்க மயூரனை அழைக்கிறோம்.எனக்கு இன்று வரம் வாய்த்திருக்கிறது - உண்மைதான்

கவியரங்கக் தலைமையை அறிமுகம் செய்யும் பெருமை

பெருங்கனவு - வாய்த்துத்தான் இருக்கிறது.

இவரைப் பற்றி எதுவும் பேசுவதாயில்லை

எந்த ஒன்றைப் பற்றிப் பேசுகின்ற போது
இன்னொன்றைப் பற்றியும் - ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் பேசமுடிகிறது
என்றவரே இவர்தானே.

நீங்கள் சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்
தளபதிகள் தவறு செய்வதில்லை

அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது
அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை.
அவர்கள் செய்கிற எதிலும்
சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும்
தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும்
உரிமைப் படுத்தப் படுகின்றன.

தளபதிகள் தவறுகள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
ஒரு தளபதி ஒரு தவறு மட்டுமே செய்ததாகத்
தெரியவரும்போது
எல்லாத் தவறுகளும் அதே தளபதிக்கு உரித்தாகும்
என்பதால், எவருமறியத்
தளபதிகள் தவறு செய்வதில்லை.
தவறுகளை ஏற்பதுமில்லை.

நாற்சந்தியில்
போர்க்களத்தில்
கலவியில்
கனாப்பொழுதில்
காலமுடிவில்
என
வாழ்க்கையைச் சந்தித்தவர்களை
சந்திக்க
சிந்திக்க
அழைத்துச் செல்ல வரும் தலைமைக்கவி

சொல்லாத சொல்லெல்லாம் சொல்லிலே பூட்டிவைத்து
செல்லாத - கவி செல்லாத திசையெங்கும்
கவிதைகள் செய்து வைத்த
பொல்லாத பெருங்கருணை
எங்கள் தலைமைக் கவி
சி. சிவசேகரம் அவர்களே வருக
வாழ்வைச் சந்திக்க.....

--மீநிலங்கோ (17/06/2012)