Mon08022021

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களின் வீட்டு காணி உரிமையை வென்றெடுக்க பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்படுவோம்!

மே தின கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

காணி வீட்டுரிமையை வென்றெடுக்க அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்க அரசியல் கட்சிகளின் வேறுபாடுகளுக்கப்பால் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய காலமிதுவாகும். அத்துடன் அவற்றை வென்றெடுக்க இந்நாட்டின் ஏனைய தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் உழைக்கும் மக்களினதும் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இந்திய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கென நாளாயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்கவுள்ளமைக்காக நாம் இந்திய மக்களுக்கு நன்றி கூற கடைமைப்பட்டுள்ளோம். இவ்வெண்ணிக்கை மலையகத் தமிழ் மக்களின் வீடுகளுக்கான தேவையில் மிகச் சிறிய பகுதியாக இருப்பினும், இதற்கூடாக இந்திய மேலாதிக்க நலன்கள் மறைந்திருந்தாலும் இந்திய மக்களின் வரிப்பணத்தின் ஒரு பகுதியையும் கொண்டே அமைக்கப்படவிருப்பதை நாம் அறிவோம். அதற்காக இந்திய மக்களுக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை இன்னொரு கட்டத்திற்கு வளர்த்தெடுத்த நவ இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு உழைத்த இன்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கிய மலையகத் தமிழ் மக்களுக்கு தேவையான வீடுகளை வழங்க வேண்டிய கடமையிலும் பொறுப்பிலும் இருந்து இலங்கை அரசும் அரசாங்கமும் தூர விலகி நிற்க முடியாது. அதனால் மலையக மக்களுக்கு தேவையான காணியுடன் கூடிய வீடுகளை இலங்கை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அவ்வுரிமையை வென்றெடுப்பதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களுடன் இந்நாட்டின் அனைத்து தொழிலாளர்களும் விவசாயிகளும் ஏனைய உழைக்கும் மக்கள் பிரிவினரும் அணிதிரள வேண்டும்.

இவ்வாறு காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா வலியுறுத்தினார்.

மலையக மக்களின் வீடு, காணி, சம்பள உரிமைகளை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மேதினத்தில் தலைமையுரையாற்றும் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த லயன் வாழக்;கை முறை ஒழிக்கப்பட வேண்டும். தொடர் மாடி வீடுகள் என்ற மாயைகள் களையப்பட வேண்டும். பெரும் கடன் சுமைக்குள் தொழிலாளர்களை இழுத்துச் செல்லும் தந்திரமான வீட்டுக் கடன் திட்டங்களும் நிராகரிக்கப்பட வேண்டும். மாறாக வாழ்வதற்கேற்ற சூழல் மற்றும் உட்கட்டமைப்புகளை உறுதி செய்யும் காணியுடன் கூடிய வீடுகள் அமைத்துக் கொடுத்து வீட்டு, காணி உரிமையை உறுதி செய்ய வேண்டும்.

ஏனைய நவதாராள நவகொலனித்துவ ஏகாதிபத்திய நாடுகள் போன்று இந்தியாவும் அதனது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்து வருகிறது. அதில் வடக்கில் வீடுகளை அமைத்துக் கொடுத்தல், மலையகத்தில் வீடுகளை அமைத்துக் கொடுத்தல் கல்வி புலமைப்பரிசில் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற சலுகைகளும் அடங்குகின்றன.

மலையக தமிழர்களை மையப்படுத்தி செய்யப்பட்ட நேரு - கொத்தலாவலை ஒப்பந்தம், சிறிமா – சாஸ்த்திரி ஓப்பந்தம், சிறிமா - இந்திரா ஒப்பந்தம் போன்றன மலையக சமூகத்தை சிதைவிற்குட்படுத்தின. இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையின் மூலமும் இந்தியாவின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டதேயன்றி தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை உறுதிப்படுத்த முடியவில்லை. இவ்வாறான இந்திய ஆளும் வர்க்கத்தின் தவறுகளை சீர் செய்யும் பொறுப்பு இந்திய மக்களுக்குரியதாகும். இந்தியா இங்கு வழங்குகின்ற சலுகைகளுக்கு இந்திய மக்களின் வரிப்பணமும் செலவிடப்படலாம். அதனால் இந்திய மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இந்திய வீடமைப்பு திட்டத்தை பெற்றுக் கொண்டது தங்களது சாதனையாக காட்டி மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் மக்களை ஏமாற்றி, பிரித்து, அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். கடந்த காலத்தில் அவர்களது மாநாட்டு, மே தின தீர்மானங்களில் காணி வீட்டுரிமையை மேலோட்டமாகவேனும் உள்ளடக்கி அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்காது அந்த பிரச்சினையின் நீடிப்பில் தமது இருப்பை பேணி வந்தனர். தொடர்ந்தும் அதே பாணியிலேயே செயற்பட முனைகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் வரவேற்புரையை சங்கத்தின் தொழில் உறவு உத்தியோகத்தர் ஆர். லோரன்ஸ் நிகழ்த்தினார். இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இணை அமைப்பாளர் டபிள்யூ.வீ. சோமரத்ன வாழ்த்துரையாற்றினார். மலையக மக்கள் மீது இன்று திணிக்கப்பட்டுள்ள பண்பாட்டு சூழல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தடையாக அமைவதனால் அதனை மாற்றி புதிய பண்பாட்டை அமைக்க வேண்டும் என மலையக மக்களும் மக்கள் பண்பாடும் என்ற தலைப்பில் உரையாற்றிய மேதின தலைமை உறுப்பினர்களில் ஒருவரான சு. விஜயகுமார் குறிப்பிட்டார். பெருந்தோட்டங்களில் நிர்வாகங்கள் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் அத்துமீறல்கள் பற்றி விலாவாரியாக எடுத்துரைத்து அதனை தீர்ப்பதற்கு மக்கள் தொழிலாளர் சங்கத்தினை பலமாக கட்டியெழுப்ப வேண்டும் என தலைமை குழுவின் இன்னொரு உறுப்பினரான கு. அமுதகௌரி தெரிவித்தார். நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

{jcomments on}