Thu10062022

Last updateSun, 19 Apr 2020 8am

சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்- நூல் அறிமுகமும் சில குறிப்புகளும்

நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது அவற்றின் இடையேயுள்ள இருள்- பிரமிள்

ஈழப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவிற்கு வந்த ஈழத் தமிழர்களை இந்திய அரசும், தமிழக அரசும் எவ்வாறு நடத்தி வந்துள்ளன என்பன பற்றிய விபரங்களை உள்ளடக்கிய சமீபத்தில் வெளிவந்த இரண்டு நூல்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

• தமிழகத்தின் ஈழ அகதிகள்- தொ.பத்தினாதன் (காலச்சுவடு பதிப்பகம்)

• சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்- தோழர் பாலன் (தோழர் பதிப்பகம்)

தோழர் பாலன் அவர்களின் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் என்ற நூல் தமிழில் அழகுபடுத்தி "சிறப்பு" முகாம் என்ற பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட முகாம்களில் நடந்த மனித விரோத சித்திரவதைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந் நூலில் பாலன் அவர்களின் சுய வரலாற்றுக் குறிப்புகளும், வாக்குமூலமும் மற்றும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட பிறிதொரு அரசியல் போராளியான சிவா என்றவரின் வாக்குமூலமும், மலையகத்தில் இருந்து இந்தியா திரும்பிய இந்தியத் தமிழர் வழக்கறிஞர் சிவலிங்கம் அவர்களின் சிறப்புமுகாம் அனுபவங்களையும் தொகுத்து இந் நூலை "தோழர்" பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசின் தலையீடும் போராளிக் குழுக்களிடையே உட்பகையை ஏற்படுத்தி அதன்மூலம் பல்வேறு இயக்கங்களை அழித்தொழித்ததில் இந்திய அரசும் அதன் ஏவலர்களான உளவுத்துறையின் செயற்பாடுகள் பற்றியும் அதற்கு துணைபோன தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றியும் அனைவரும் நன்கு அறிந்ததே.

1990 களில் தமிழகத்தில் போராளி அமைப்புகளின் நடவடிக்கைகளை காரணம் காட்டி அவ்வாண்டு மார்ச் மாதம் 1638 க்கு மேற்பட்ட TELO, ENDLF, EPRLF அமைப்பை சேர்ந்த போராளிகள் ஒரிசா மாநிலத்தில் உள்ள Malkangiri முகாமில் அடைக்கப்பட்டனர். பின் ஜீன் 1990ல் EPRLF தலைவர் பத்மநாபா மற்றும் அவரது தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து முன்பே உளவுத்துறையால் கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டிருந்த ஈழ அகதி மக்களின் மீதான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டன. இளைஞர்கள் கைரேகை பதிவுகளுடன் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டதுடன் பல இளைஞர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் பல்வேறு வழக்குகளில் இவர்களை இணைத்தும் விடப்பட்டனர்.

இதே காலத்தில்தான் (24.04.1990) இலங்கையில் இருந்து இந்தியா வரும் பாலன் (இலங்கை கடவுச் சீட்டுடன், இந்தியா வழங்கிய விசாவுடன்) தன்னை தமிழகத்தில் முறையாக தமிழக அரசு ஆணைக்கு இணங்க காவல் நிலையத்தில் பதிவு செய்துகொள்கிறார். (பக்-89) "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" அமைப்பை சார்ந்தவர் என்று அறிந்துகொண்ட உளவுத்துறை தனது சதித் திட்டமான "தி.மு.க கட்சியை வன்முறைக் கட்சி என மக்கள் மத்தியில் காட்டுவதற்கு (பக்-90) உடந்தையாக செயற்பட வேண்டும் என்ற முயற்சிக்கு பாலன் ஒத்துழைக்க மறுத்ததன் காரணமாக இவர் மீதான பொய் வழக்குகள் போடப்பட்டன.

சிறப்புமுகாம்கள் அமைத்து ஆட்சியை தக்க வைக்க முயன்ற கருணாநிதியின் தி.மு.க அரசின் முயற்சி பயனின்றி மத்திய அரசால் கலைக்கப்பட்டதுடன் மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. இக்காலத்தில் ராஜிவ்காந்தி கொல்லப்படுகிறார். பின்பு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசு தனது அரசை தக்கவைத்துக்கொள்ள சிறப்புமுகாம்களை மேலும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தியது. அகதி மாணவர்கள் கல்வியை தொடர தடை ஆணையை (03.09.91)ல் பிறப்பித்தது. கடலோரப் பகுதிகளில் உள்ள முகாம்கள் மூடப்பட்டு அவர்களை வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டதுடன், மாற்றப்பட்ட முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகள் முகாம் மாணவர்களை தமது பள்ளிகளில் சேர்க்க மறுத்தவிட்டன. இதனால் அம் அகதி மாணவர்கள் கல்வியை இழந்தனர்.

ஜ.ஜி தேவாரம் (அசைடு 15.09.91) ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில் 1300 தீவிரவாதிகள் முகாமில் உள்ளதாகவும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை தமிழ் தீவிரவாதிகளுக்கு தமிழக தமிழ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் நிகழ்ச்சி நிரல்படி எவ்வாறு மாநில அரசும் அதன் உளவுத்துறைகளும் திட்டமிட்டு செயல்படுகின்றன என்பதற்கு தேவாரம் பேட்டி ஒரு உதாரணம். எவ்வாறு உளவுத்துறை, கியூ பிரிவு காவல்துறையினரால் தமிழகத்தில் வழக்குகள் ஜோடிக்கப்படுகின்றன என்பதற்கு பாலன், சிவா வழக்கு மட்டுமல்ல இந்த காலகட்டங்களில் சென்னை மத்திய சிறையில் பல்வேறு இளைஞர்களும் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தனர்.

பத்மநாபா கொலை வழக்கில் சிலரை தமிழ்தேசிய மீட்பு படையினருடனும், ராஜீவ் வழக்கில் சிலரை தமிழ்தேசியமீட்பு படையினருடனும், டோங்னோவா கப்பல் வழக்கில் சிலரை பட்டினங்காத்தான் துப்பாக்கி சூட்டு வழக்கிலும், தமிழக மீனவர்களை இணைத்து பாம்பன் பாலத்தை தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக வழக்கும், வெட்டுவாங்கினி வழக்கும், தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு போட்டவர்களை தடா வழக்கிலும் சேர்க்கப்பட்டனர்.

இவற்றில் தமிழக இளைஞர்களும் ஈழத்தின் பல்வேறு போராளி அமைப்புகளும் உள்ளடக்கப்பட்டதுடன் மாக்சிய லெனிய அமைப்புகள் மீதும் திராவிடர் கழகம் உட்பட்ட பல அமைப்பகள் மீதும் தொடர் வலைப்பின்னல் மூலம் தொடர்பு படுத்தி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம்

(1) வழக்கை நடத்தாமல் காலம் தாழ்த்தி சிறையில் அடைத்து வைப்பது

(2) பிணையல் வழங்கப்பட்டாலும் சிறப்புமுகாமில் அடைத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்துவது.

(3) நெடுங்காலம் சிறையில் வைத்து அடக்குமுறைக்கு உட்படுத்துவது, எதிர்வினையாக தப்பிக்க முயல்பவர்களை பயங்கரவாதியாக சித்தரிப்பது

(4) தமிழகத்தில் பல்வேறு போராட்ட அமைப்புகள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது

(5) ஜனநாயக போராட்டங்களையும் நசுக்குவது

இதன் மூலமாக அடக்குமுறையை ஏவுவதும் தொடர்ந்து அடக்குமுறை சட்டங்களின் கீழ் கண்காணிப்பதும் உளவுத்துறையினதும் அரசினதும் தொடர் நிகழ்வாக இருந்துள்ளது.

1) பத்மநாபா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயபாலசிங்கம் என்பவர் சென்னையில் முறையாக பதிவு செய்து நீண்டகாலமாக இருந்து வந்துள்ளார். திரைப்படத்துறையில் தயாரிப்பாளராகவும் திரைப்பட விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார். இவருக்கு பிணையல் வழங்கப்பட்டவுடன் கியூ பிரிவானது அரச உத்தரவைக்காட்டி செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அவரை அடைத்தது. இவர்மீதான சிறப்புமுகாம் உத்தரவு உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதாக இந் நூலில் (பக் 94) கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் மீதான வழக்கில் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு கூறப்பட்ட பின்பும் சிறப்புமுகாமிலேயே அவர் வெகுகாலம் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் அவரை சித்திரவதை செய்தனர்.

2) மகேந்திரராஜா என்பவருக்கும் பிணையல் வழங்கப்பட்டபோது சிறைவாசலில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். இவரை பார்க்கவரும் இவரது மனைவியின் தாயார் சாலை விபத்தில் இறந்துவிட்டார். பின்பு அவர் தனது பிணையலை ரத்துச் செய்துவிட்டு மீண்டும் சிறைக்கே வந்துவிட்டார். இவரும் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டபோது மீண்டும் கைது செய்து சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார்.

3) ஈசன் மற்றும் சுகிர்தகுமார் என்பவர்களும் 1991 பிப் 4ல் தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்பு 1991 நவம்பர் 1ல் டோங்னொவா கப்பல் வழக்கில் சேர்க்கப்ட்டனர். இவர்கள் தம்மீதான வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தமது குடும்பத்தினருடன் சேரவிடாமல் தடுத்து வைக்கப்பட்டனர்.

4) இதேபோல் சிவதம்பி என்பவர் டோங்னோவா கப்பல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்பு நான்கு மாதத்திற்கு பின்பு பட்டணங்காத்தான் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் சேர்க்கப்பட்டார். இவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். இவரும் தனது குடும்பத்தினருடன் சேர அனுமதிக்கப்படவில்லை.

5) கிரன் என்கிற 12 வயது சிறுவன் சுயநினைவின்றி கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கியூ பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். அந்த சிறுவன் இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க சதித்திட்டம் தீட்டியதாக கூறி தடா வழக்கில் கைது செய்யப்பட்டார். சுயநினைவற்ற நிலையில் ஒரு சிறுவன் அதுவும் தனிமனிதனாக தமிழகத்தை பிரிக்க சதித்திட்டம் தீட்டியதை கியூ பிரிவு பொலிசாரினால் நீதிமன்றில் நிரூபிக்க முடியாததால் தடா சட்டத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அச் சிறுவன் விடுவிக்கப்பட்டு வேலூர் திப்புமாலில் இருந்த சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார்.

6) பத்மநாபா வழக்கில் விடுதலையாகி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட குணா, வசந்தன் ஆகிய இருவரும் ராஜீவ்காந்தி மறுசீராய்வு கமிட்டியில் சேர்க்கப்பட்டனர். பின்பு உச்சநீதிமன்றத்தின் கட்ட பஞ்சாயத்தினால் வழக்கை பதிவு செய்யாமல் மீண்டும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

7) பிரதாப் என்பவர் ஒரு கண் பார்வையை இழந்தவர். பாம்பன் பாலம் தகர்க்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டு தடா வழக்கில் சேர்க்கப்பட்டார். இவர்மீதான வழக்கில் இருந்து விடுதலையானவுடன் சிறப்புமுகாமிற்கு அனுப்ப முயன்றதைக் கண்டித்தமைக்காக இவர்மீது கியூ பிரிவு பொலிசாரை தாக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இதே வழக்கில சேர்க்கப்பட்டிருந்த ரூபன், ராஜா என்பவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர்.

8) நீண்ட கொடிய சிறைவாசத்தால் குஞ்சான் என்பவர் மனநோயாளிகி விட்டார். இவரையும் கொஞ்சம்கூட இரக்கமின்றி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார்.

இவர்கள் அனைவரும் சிறையிலும் சிறப்புமுகாமிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளனர். இதுபோல எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வு விடுதலைக்கு பின்பும் சிறப்புமுகாமில் தொலைத்துள்ளதுடன் காணாமல் அடிக்கப்பட்டும் உள்ளது.

திருமதி வெங்கடேஸ்வரி மதுரையை சார்ந்தவர். (பக்-29) ஈழத் தமிழரை திருமணம் புரிந்தவர். இவரது கணவர் மதுரையில் ஒரு பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறப்புமுகாமில் அடைத்தனர். தன் கணவரை கைது செய்ததை கண்டித்தும் கணவரின் விடுதலைகோரி போராடிய தமிழகத்தை சேர்ந்த அவ் வெங்கடேஸ்வரியையும் கியூ பிரிவு பொலிசார் கைது செய்து சிறப்பமுகாமில் அடைத்துவிட்டனர். கியூ பிரிவு பொலிசாரின் அதிகார துஸ்பிரயோகத்திற்கு இது ஒரு சான்று.

மேலும் "ஒருவேளை கணவன் மனைவி இருவரில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழராக இருந்தாலும் இத் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தியாவில் குடியுரிமை பெற இயலாது. கணவன் மனைவி இருவரில் ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் குடியரிமை கிடையாது என்று 2003ல் வாஜ்பேயி அரசு (திமுக, மதிமுக, நெடுமாறன் உள்ளிட்டோரின் ஆதரவு பெற்ற அதே வாஜ்பேய் அரசுதான்) சட்ட திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. இதுதான் ஈழத் தமிழகள் மீதான "அக்கறை" உள்ள "தமிழக தலைவர்களின்" அரசியல் நிலைப்பாடு.

துறையூர் சிறப்புமுகாமில் நடந்த பாலியல் வன்கொடுமைகளையும் அவற்றில் கியூ பிரிவு பொலிசாரின் பங்கும் அதற்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களை எவ்வாறு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இப் புத்தகத்தில் ( பக் 35-36) தொகுக்கப்பட்டு விபரித்துள்ளது.

வேலூர் திப்புமகாலில் இருந்து 43 பேர் தப்பி சென்றதை அடுத்து அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலுவின் ஒரு நபர் அறிக்கையை அடிப்படையாக கொண்டு PUCL அமைப்பின் உண்மை அறியும் அறிக்கையில் "சிறப்புமுகாம் என்பதே அதி பாதுகாப்புடைய சிறைச்சாலைதான்" என்று குறிப்பிடுகிறது.

"சட்ட ரீதியாக தமிழக அரசின் நிலைப்பாட்டுப்படி சிறப்புமுகாம் என்பது சிறைச்சாலையோ அல்லது சிறைவாசிகள் அடைக்கப்பட்ட இடமோ அல்ல. சிறைச்சாலையின் விதிகள் முகாமிற்கு பொருந்தாது. இந்த சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் சிறைவாசிகளோ அல்லது சிறைத்தண்டனை அடைந்தவர்களோ அல்லது வழக்கை நடத்திக் கொண்டிருப்பவர்களோ அல்லது இந்திய சட்டத்தின்படி குற்றம் சுமத்தப்பட்டவர்களோ அல்ல" என்ற தமிழக அரசின் "வெளியுலக" முகத்தைக் காட்டுகிறது.

ஆனால் சிறப்புமுகாம் எவ்வாறு நடைமுறையில் உள்ளது என்பதைக் குறிப்பிடுகையில் சிறப்புமுகாம் என்ற சிறைச்சாலையின் நிருவாகம் வருவாய்துறை அதிகாரியிடமும், பாதுகாப்பு காவல்துறையுடனும் இருப்பதாகவும், இம் முகாமில் இருப்பவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதும், எப்பொழுதும் (24 மணி நேரமும்) பூட்டியே வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், தமிழ்நாடு அரசின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பில் ஆயுதம் தாங்கிய பொலிசாரால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றனர் என்றும், மூன்று அடுக்கு பாதுகாப்பு இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

மேலும் பார்வையாளர் சந்திப்பு பற்றி குறிப்பிடும்போது "சிறப்புமுகாமில் உள்ளவர்களை சந்திக்க சிறப்புதாசில்தாரிடம் அனுமதி வாங்கவேண்டும். அவரது அலுவலகம் எப்போதுமே சிறப்புமுகாமில் இருந்து பல மைல்கள் தாண்டியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் அவரிடம் அளிக்கப்பட்ட மனு மாவட்ட காவல்துறையினருக்கு அனுப்பப்பட்ட பிறகு அவர்கள் அனுமதி வழங்கிய பிறகே பார்வையிடமுடியும். இந்த நடைமுறை பல நாட்கள் எடுக்கக்கூடும். கியூ பிரிவு விசாரணக்கு பிறகே சந்திப்பு நடைபெறும். பெண்கள் இம் முகாமில் உள்ளவர்களை பார்வையிட வந்தால் (மேற்கண்ட நடைமுறைக்கு பிறகு) இவர்களை பரிசோதனையிட பெண் காவலர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் வர 2 முதல் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும். சிலவேளைகளில் அந்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படும்" எனக் குறிப்பிடுகிறது.

நீதிபதி சிங்காரவேலு கமிஷன் அறிக்கையில் கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக தொடர்ந்து இவர்கள் அடைக்கப்பட்டிருந்ததன் விளைவாகவே இந்த தப்பித்தல் முயற்சி நடந்துள்ளதாக குறிப்பிடுகிறார். பத்தாண்டுகளுக்க மேலாக வெளியுலகை பார்க்காமல் இந்த சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் பலர் இருக்கின்றனர். குடும்பத்தினருடன் சிறப்புமுகாமில் வளரும் குழந்தைகள் வெளியுலகைப் பற்றிய அறியாமையுடனும் கல்வி அறிவின்மையுடனும் வளர்கிறார்கள்.

மேலும் கமிஷன் அறிக்கையில் சிறப்புமுகாமில் வயதானவர்களும் உடல் ஊனமுற்றவர்களும் கண்பார்வை இழந்தவர்களும் இரண்டு கைகளை இழந்தவர்களும், வலத கால் செயல் இழந்தவரும்; காது கேளாதவர்களும், வலது மற்றும்; இடது பாதங்களை இழந்தவர்களும் உள்ளனர் எனக் குறிப்பிடுகிறது. இவர்கள் மீது எந்த வழக்குகளும் பதிவோ அல்லது தண்டனை வழங்கப்பட்டவர்களோ அல்ல என குறிப்பிடுகிறது. இவர்களது தூரத்து உறவினர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பைக்கூட கேட்க அனுமதிப்பதில்லை" என குறிப்பிட்டுள்ளது.

இதே நிலைதான் இன்றளவும் சிறப்புமுகாமில் தொடரும் அவல நிலையாக உள்ளது. சில முகாம்கள் மூடப்பட்டுவிட்டதாக அறிவிப்புகளை ஆடம்பரமாக விளம்பரப்படுத்தும் தமிழக அரசு மறுபுறம் விடுவிப்பதாக கூறியவர்களை வேறுபல முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்றளவும் போராட்டம் நடத்தி வருவதுடன் தற்கொலைக்கு தள்ளப்படும் அவல நிலையும் செய்தியாக உள்ளது.

இலங்கையில் வேண்டப்படாதவர்கள், இந்தியாவில் விரும்பப்படாதவர்கள்

மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற பொதுச் செயலாளர் இரா.சிவலிங்கம் அவர்கள் சிறீமா- சாத்திரி ஒப்பந்தத்தின்படி இந்தியா திரும்பிய இந்தியர்களின் அதுவும் 90 சதவீதத்திற்கும் மேலான தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய "தாயகம்" திரும்பிய தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடியவர்.

தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் தமக்கு பழக்கமான தொழிலும் பரிச்சயமான கால நிலையும் உள்ள நீலகிரிக்கு தன்னிச்சையாக இடம் பெயர்ந்தவர்கள்.

ராஜீவ் கொலைக்கு பிறகு தாயகம் திரும்பிய இந்தியர்களை இலங்கையர் என்று பதிவு செய்யுமாறும் அவ்வாறு பதிய மறுப்பவர்களை கைது செய்தும் பல்வேறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியும் காவல்துறையும் மாவட்ட ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுத்தனர்.

துன்புறுத்தலுக்கு ராஜிவ் கொலைதான் காரணமா?

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு திரும்பும் வகையில் இலங்கையில் அப்போது பாஸ்போட் முறை அமுலில் இருக்கவில்லை. 1954 க்கு பிறகு இந்தியா செல்பவர்களுக்கு பாஸ்போட் வழங்கப்பட்டது. 1964ல் சிறிமா- சாத்திரி ஒப்பந்தம் உருவான பின்பே அதுவும் அந்த ஒப்பந்தப்படி இந்திய பிராஜாவுரிமை பெற்றவர்களேயன்றி ஏற்கனவே இந்திய பிரஜைகளாக இருந்தவர்களுக்கு அல்ல.

தாயகம் திரும்பியோர் இலங்கையிலேயே இந்திய தூதரத்தால் இந்திய கடவுச்சீட்டு தரப்பட்டு மண்டபம் முகாமில் அகதிகளாக கணக்கெடுக்கப்பட்டு ஆவணரீதியான அனைத்து உத்தரவாதங்களுடன் தமிழக மண்ணில் விடப்படுகின்றனர். பலர் மறுவாழ்வு உதவிக்காக ஊட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆவணங்களை ஒப்படைந்திருந்தனர். அவர்கள் ஆவணங்களை பெற்றதற்கான எந்தவித அத்தாட்சிகளையும் அப்போதைய காலத்தில் வழங்கப்பட்டதில்லை. ஆவணங்களை உரியவர்களிடம் திருப்பித் தரப்படவும் இல்லை.

மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் தொடர்ச்சியாக பல போராட்டங்களை தேயிலை தோட்ட முதலாளிகளுக்கு எதிராகவும் தொழிலாளர்களுக்கு பக்க பலமாக நின்றும் போராடி வந்துள்ளது. கொடைக்கானலை சேர்ந்த காளிமுத்து என்பவர் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுவின் மீது அன்றைய டிவிசன் பென்ச் தாயகம் திரும்பிய இவர்களை "இலங்கையர்" என பதிவு செய்ய தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது.

முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆட்சியாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு எப்போதும் "பிய் தொடைத்த கல்" தான். ஆட்சியாளர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்வதேயில்லை.

07.10.91ல் படுக மகாஜன சங்கத்தின் நான்காம் ஆண்டு பொதுக்குழு தீர்மானம்

1. இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோரை நீலகிரியில் குடியேற்றுவதை நிறுத்த வேண்டும். இதேபோன்ற கணக்கெடுக்கப்படாத வெளியார் குடியேற்றம் (Unchecked immigration from outside) கட்டுப்படுத்த வேண்டும்.

2. இந்த வெளியாருக்கு வழங்கப்படும் திட்டமிட்ட மறுவாழ்வு உதவிகளை இச் சங்கம் எதிர்க்கிறது.

3. இக் குடியேற்றங்களால் ஏற்பட்டுள்ள ஜனத்தொகைப் பெருக்கம் நீலகிரியின் சுற்றுச் சூழலை கெடுக்கிறது. எனக் கூறியிருக்கிறது.

தாயகம் திரும்பிய இந்த மக்கள் தேயிலை தோட்டங்களில் அடிமை வாழ்வினையும் காலனிகளில் வாழ்ந்து கொண்டு கிடைக்கும் கூலித்தொழில் பிழைப்பவர்களாக உள்ளதுடன் இத் தீர்மானங்களுக்கு பின் உள்ள அரசியல், அதன் செல்வாக்கு, ஆட்சியாளர்களின் அனுசரணை, முதலாளிகளுடான உறவு இவற்றை அம்பலப்படுத்தி தொடர்ந்து போராடி வந்ததின் விளைவு சிவலிங்கம் கைது செய்யப்பட்டதும் அதுவும் அவரை சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டுள்ளதில் உள்ள பின்னனி அரசியல் காரணங்களாகும்.

இந்த நூல் கால இடைவெளி கடந்து வந்திருப்பினும், மேலும் விரிவாக வந்திருக்க வேண்டியது. இருப்பினும் இது உரையாட ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும் என நம்புவோம்.

- பவானி

துணை சான்றுகள்

1. மக்கள் மன்றம் ஆவணி 1991

2. மக்கள் மன்றம் ஜப்பசி 1991

3. Srilankan Tamil Refugees in India - Asha Hans Refugee vol- No.3 (June 1993)

4. www.vinavu.com/2013/05/16/eelam-refugees-tn-prisions//

5. Frontline July 01.04.2006 . camps of neglect -T.S.Subaramanian

7. சட்டம் ஒரு வன்முறை - அ.மாக்ஸ்

8. தமிழகத்தின் ஈழ அகதிகள் - தொ.பத்தினாதன்

 

பின்குறிப்பு : நூல்களை பெற்றுக்கொள்ள தொடர்புகள்.

மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

தொலைபேசி: (0044) 7753465573