Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

போராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..!

நாம் ஒவ்வொரு முடிவெடுக்கும் போதும் சுயஅறிவு எமக்குள் மேலோங்கி நிற்க வேண்டும். நாம் குறுகிய சிந்தனைக்குள் நின்று கொண்டு, எதையும் ஆழ்ந்து நோக்காமல் இன்னொருவரின் தவறான வழிகாட்டலை இனங்காண முடியாது அதை ஏற்றுப் பின் நடந்தால், அது எம்மையும் எம்மை நம்பியவர்களையும் அழிவிற்கே கொண்டு செல்லும். இன்னொருவரின் அறிவு மட்டத்தினை, தவறான கருத்துக்களையோ செயற்பாட்டினையோ நாம் வெறும் விசுவாசத்திலும் உணர்ச்சியிலும் ஏற்றுக் கொண்டால், எமது அழிவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நாம் விரும்பும் மனிதர் உண்மையாவராவோ திறைமையானவராகவோ இருக்கலாம், ஆனால் அவர் எடுக்கும் முடிவும் பாதையும் தவறாகிவிட்டால் அனைத்துமே தவறாகிவிடும்.

தமிழ் மக்கள் கடந்த காலப் போராட்டத்தினால் மாபெரும் அழிவினை சந்தித்து விட்டார்கள். பல்லாயிரக்கணக்கான போராளிகள் மண்ணுக்குள் புதைத்தாகி விட்டார்கள். அதைவிடவும் பல ஆயிரக் கணக்கான உயிர்களை தொலைத்தும் விட்டார்கள். தம் பிள்ளைகளையும், கணவன்மார்களையும் பலி கொடுத்துவிட்டு அந்த உறவுகளின் சமாதிக்கு விளக்கேற்றி ஒரு பூ வைக்கக் கூட முடியாத அளவிற்கு இந்த பாசிச அதிகாரம் அவர்களை தடுத்து நிற்கின்றது. தமிழ்ப் பிரதேசங்களை இராணுவ கூலிப்படைகளின் துப்பாக்கிகள் சிறைப்பிடித்து வைத்துள்ளது. வாய் திறக்காத வரைக்கும் தான் வாழ்வு, வாயைத் திறந்தால் நீயும் காணமல் போய்விடுவாய் என்று மிரட்டுகின்றது மகிந்த பாசிச அரசு. தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைகளைக் கூட புலிகளின் கோரிக்கைகள் கருத்துக்கள் என சாதாரண சிங்கள மக்களுக்கு எடுத்து கூறி இனத்துவேசத்தினை தூண்டிவிட்டு தனது ஆதரவினை வளர்த்து வருகின்றது இலங்கை அரசு.

இந்த அரசோடு கைகோர்த்துக் கொண்டு பல நாடுகளும், பல நவீன முதலீட்டாளர்களும் நிற்கின்றார்கள். மக்களை இணைய விட்டால் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய்விடும், மக்களை பிரித்து மோதவிட்டால் தம் எதிரிகளை இலகுவாக அழித்து விடலாம் என்பதே இவர்களது பிரதான கொள்கையாகும். இன்று மண்ணில் புதைக்கப்பட்ட போராளிகளின் உறவுகள் பொதுவாக ஒன்றிணைந்து தம் விருப்பத்தினை செயற்படுத்த முடியாது தடை விதித்துள்ள இலங்கை அரசினை தட்டிக் கேட்க எந்த நாட்டின் அதிகாரமும் தயாராகவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் முதலீடும் இலாபமுமே தவிர மக்களின் விருப்பு வெறுப்பல்ல. தங்கள் இலாபத்திற்காக அவர்கள் இலங்கை அரசிற்கு எந்த உதவியினையும் வழங்குவார்கள்.

இந்த உண்மை இன்றுள்ள புலி ஆதரவாளர்கள் உட்பட எல்லாரும் அறிந்ததே. எமது கடந்த கால அனுபவம் இதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனால் இந்த நிலையில் கூட எம்மை நாம் மாற்றிக் கொள்ள தயாராகவில்லை. தொடர்ந்தும் குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்குள்ளே நின்று கொண்டு இன்னும் பல போராளிகளை மண்ணுக்குள் புதைப்பதே இந்த தமிழ்த் தேசியவாதிகளின் நோக்கமாகவுள்ளது. இன்று இனவாதத்தினை தூண்டும் ஊடகங்களின் கருத்துக்களும், அதில் கருத்துக் கூறுபவர்களும் இந்த நோக்கிலேயே செயற்படுகின்றார்கள். தங்கள் இருப்புக்களை பாதுகாப்பாக நிலை நிறுத்திக் கொண்ட இந்த புத்திவான்கள் அங்குள்ள மக்களை மண்ணில் புதைப்பதிலேயே முனைப்பாக உள்ளார்கள்.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணில் புதைக்கப்படும் அத்தனையும் விதையாகி வித்துவிட்டு வளராது. இடம், காலம், சூழலாலை தெரிந்து கொள்ளத் தவறினால் விதைக்கப்பட்ட அனைத்தும் மண்ணேடு மண்ணாகிவிடும். ஆசைகள் அனைத்தும் கனவாகிவிடும்.