Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

மீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்

சில வருடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" வெளியில் இரு  மீ ரூ - பிரச்சனைகள் கிளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் மற்றவர் இந்தியாவை சேர்ந்தவர். பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட   ஆண்களும் முறையே ஒருவர் இந்தியர் மற்றவர் இலங்கைத் தமிழன். 

இந்த பிரான்ஸ் மீ ரூ-க்கள் சந்திக்கு வந்த வேளையில், இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" மாற்று சக்திகள் தாங்கள் தான் என மார்தட்டிக் கொண்ட பாரிய குழுவொன்று அந்த இரு ஆண்களுக்காகவும் குரல் கொடுத்தது.

அண்ணாக்களைக் காப்பாற்ற, பெண்கள் இருவர் மீதும் அவதூறுகள் இவர்களால் பரப்பப்பட்டது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த பெரியாரிசம் கதைக்கும் பெண் மீது படுகேவலமாக பாலியல் அவதூறுகள் கொட்டப்பட்டது. அவதூறுகளை, அப் பெண்ணை பாலியல்ரீதியில் சுரண்ட முற்பட்ட ஆண் எழுத்தாளரே, "soft porn" அல்லது ஆபாசக் கதை வகை எழுத்தாக எழுதி வெளியிட்டார். அவர் எழுதியதை "அவர் பக்க கருத்து" எனும் போர்வையில் அவரின் தொண்டரடிப்பொடிகள் பரப்பினார்கள். அக்காலத்தில், புலிகளுக்கு அடுத்ததாக இந்த எழுத்தாளர் சார்ந்த குழுவிடமே இணையங்கள் பல இருந்தன. Facebook அப்போது தான் அறிமுகமான காலம் என நினைக்கிறன். .......

மேற்படி இரு மீ ரூ-க்கள் சார்ந்து பெண்களுக்காக வெகு சிலரே குரல் கொடுத்தார்கள். இந்தியரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, அந்தக் காலத்தில் மிகவும் எழுச்சியுடன் இருந்த பெண்கள் சந்திப்பு சார்ந்த பெண்கள், சக்தி சஞ்சிகை, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர் வெளியீட்டுக் குழு போன்றவர்கள் குரல்கொடுத்தார்கள். பகிரங்க நோட்டீஸ் இவர்களால் வெளியிடப்பட்டது. இந்தியாவை சேர்ந்த பெரியாரிஸம் கதைக்கும் பெண்மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக தனிநபர்கள் பலர் குரல் கொடுத்தார்கள். பெண்ணியம் பேசும் பெண்கள் குழுக்கள் குரல் கொடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை.

 

தற்போது இந்தியாவில் மீ ரூ மிக வேகமாக மேலெழுந்துள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் சின்மயி என்ற பாடகி மற்றும் தலைமறைவான நிலையில் வேறு ஒரு பெண்ணும் வைரமுத்து மற்றும் ராதா ரவி போன்றவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் பாரிய விவாதங்கள் சமுக வலைத்தளங்களில் நடைபெறுகிறது.

இதில் பகிடி என்னவென்றால், மேற்கூறிய பாரிஸ் - பிரான்ஸ் மீ ரூ நடந்தபோது, ஆண்களுக்காக குரல்கொடுத்த மேற்படி "இலக்கிய -அரசியல்" குழுவினர் சிலர், இந்திய தமிழ்நாட்டு மீ ரூ -வுக்கு ஆதரவு கொடுத்து துள்ளிக் குதிக்கிறார்கள். அதில் ஒருவர் கூறுகிறார் "வயிரமுத்து ஆதிக்க சமுகத்தை சேர்ந்தவர். அவங்கள் தான் இப்போ தமிழ் நாட்டில சாதி வெறி பிடிச்சவங்கள். தலித்துகளுக்கு எதிராக கொலை, தீ வைத்தல் போன்றவற்றை செய்பவர்கள். வயிரமுத்துவை அம்பலப்படுத்துவதன் மூலம் அவரின் சமூகத்தில் சாதி வெறியை அடக்கமுடியும்" என கூறுகிறார்.

இதே குழுவை சேர்ந்தவர்கள் தான், சில வாரங்களுக்கு முன் இலங்கையில் மட்டக்களப்பில் நடந்த பெண்கள் சந்திப்பை அவதூறாக விமர்சித்தார்கள். இந்தியாவிலிருந்து வந்த பெண்ணிய எழுத்தாளர்களை படு கீழ்த்தரமான முறையில் விமர்சித்தார்கள். காரணம், அவர்களின் தமிழ் தேசியம் சார்ந்த கருத்துக்கள், இவர்களுக்கு பிடிக்காததினாலாகும். அதேபோன்று, மேற்படி சந்திப்பில் பங்குகொண்ட பெண்கள் மது அருந்தியதாக பிரச்சாரம் அவிழ்த்தும் விட்டார்கள். அத்துடன், பெண்ணிய உரையாடல்களை இலங்கையில் ஏற்பாடு செய்தவர்களை சுயநலவாதிகள், பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவர்கள் என பிரச்சாரம் செய்து  character assassination செய்தார்கள். அதேவேளை, மேற்படி பெண்கள் சந்திப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்தோரில் இஸ்லாமிய எழுத்தாளர்கள், "தமிழ் முற்;போக்கு" எழுத்தாளர்கள், மற்றும் சில பெண் எழுத்தாளர்களும் அடக்கம் என்பதுவும் குறிப்பிடப்படல் வேண்டும்.

இந்தப் பதிவில் பிரான்ஸ் இல் நடந்த விடயம் பற்றியே கூறி இருந்தாலும், நோர்வே, ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து என பல இடங்களிலும் பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கும் மற்றும் பெண்களுக்கும்  எதிராக பல ஆணாதிக்க கொடுமைகள் நடைபெற்றுள்ளது. இதை செய்தவர்கள் இன்றும் இலக்கியம், பெண்ணியம், மார்க்சிசம், தமிழ்த்தேசியம், தலித்தியம், இடதுசாரியம், ஜனநாயகம் கதைக்கும் ஆண்களே! தான் பெண்ணியவாதி, எனக் கூறிக்கொண்டு வெளிநாடு வர வாய்ப்பை ஏற்படுத்தி - பின் அவதூறுகள் பரப்பி பெண்களின் வாழ்நிலையை சீரழித்தோர் பலர் உள்ளனர். சஞ்சிகை வெளியிட்டு -தேசியம் கதைத்து- முற்போக்காளர்களாக  - இடதுசாரிகளாக வேடமிட்டு பாலியல் தேவைக்கு பெண்களை பயன்படுத்தியோர் இப்போதும் தமிழ் தேசிய மற்றும் இடதுசாரிய அரசியலில் உள்ளனர்.

பெரும்பான்மையான மீ ரூ- வெளிப்படுத்தல்கள், உலக நாடுகள் பலவற்றில் உள்ள குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் சாட்சிகளுடன் நிரூபிக்க முடியாதவை. சட்டத்தின் முன்னால் சாட்சிகளின் மூலம் நிரூபிக்க முடியாத மீ ரூ- வெளிப்படுத்தல்கள் பிரபலங்கள் மற்றும் குற்றம் சுமத்தப்படும் ஆண்களின் மீதான அவதூறுகளாகவே பொதுவெளியில் கருதப்படுகின்றன. அத்துடன், வர்க்க ரீதியில் மீ ரூ- வெளிப்படுத்தல்கள் மத்திய மற்றும் மேல்தட்டு வர்க்க பெண்களின் வெளிப்படுத்தல்களாகவே உள்ளது.

அது எந்த நாட்டில் இருந்தாலென்ன ஒரு சாதாரண வாழ்வியலைக் கொண்ட- உழைக்கும் வர்க்க பெண் ஒருவர், தன் மேலதிகாரி மீதோ அல்லது சக ஊழியர் மீதோ குற்றம் சுமத்தி விட்டு நிம்மதியாகச் சீவித்து விட முடியுமா? அல்லது குடும்பத்துக்காக வீட்டில் உழைக்கும் பெண்ணால், மீ ரூ - வெளிப்படுத்தல் ஒன்றை பதிந்து விட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்து விட முடியுமா?! அதனால் தான் சமூக, பொருளாதாரரீதியில் பலத்துடன் இருக்கும் பெண்களாலேயே பெருமளவில்  மீ ரூ- வெளிப்படுத்தல்கள் பொது வெளியில் பகிரங்கப்படுத்தப்படுகிறது.

வர்க்க ரீதியிலும், இன்றுள்ள சட்டங்களில் அடிப்படையிலும் சில குறைபாடுகள் மற்றும் விமர்சனங்கள்  மீ ரூ- வெளிப்படுத்தல்கள் மீது இருப்பினும், ஒட்டுமொத்த பெண்களின் உலகளாவிய ஒடுக்கப்பட்ட - பாலியல் ரீதியில் சுரண்டப்படும் நிலையை கருத்தில் கொண்டு மீரூ- வெளிப்படுத்தல்கள் விமர்சனத்துடன் ஆதரிக்கப்பட வேண்டியவை!

 

மீ ரூ- சிறு அறிமுகம்

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஹாலிவுட்டின் சக்தி வாய்ந்த தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டென் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு எழுந்தது. தன் படத்தில் நடிக்கும் நடிகைகள் மீது அவர் பாலியல்-ரீதியான அழுத்தங்கள் தந்ததாகவும் அதில் நிறைய நடிகைகள் வேறு வழியின்றி சம்மதிக்க நேரிட்டதாகவும் புகார்கள் கிளம்பின. அப்போது அது அமெரிக்கா எங்கும் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றிய விவாதம் இணையத்தில் தொடங்கியது.

இந்த விவாதத்தில் துணிச்சலற்ற சாதாரண பெண்களும் நிறையப் பேர் தாங்களும் தங்கள் அலுவலகங்களில் எதிர்கொண்ட பிரச்சனைகளை பகிரத் தொடங்கினர். அப்போது ஹாலிவுட் நடிகை அலிசியா மிலானோ அந்தப் பதிவுகளை Me Too எனும் ஹேஷ்டேக் போட்டு பதியுமாறு கோரிக்கை விடுத்தார். (அதாவது 'எனக்கும் இந்தப் பிரச்சனை வந்தது,' என்று அர்த்தம்.) சொன்ன சில நாட்களிலேயே உலகெங்கும் இந்த ஹேஷ்டேக் தீயாகப் பரவியது. ஹாலிவுட்டிலேயே நிறைய பெரிய நடிகர், இயக்குனர்கள் மேல் இந்தக் குற்றச்சாட்டு கிளம்பியது. புகழ் பெற்ற நடிகர் கெவின் ஸ்பேஸி மேல் குற்றச்சாட்டுகள் எழும்ப அதில் சிலவற்றை அவர் ஒப்புக் கொண்டார். உடனே அவர் நடித்துக் கொண்டு பெரும் ஹிட்டடித்த House of Cards சீரியலை கைவிடப் போவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்தது. ஹாலிவுட்டின் லெஜண்ட் நடிகை ஆன மெரில் ஸ்ட்ரிப்பும் கூட இந்த ஹேஷ்டேகில் கலந்து தான் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட பிரச்சனைகளை அப்போது பகிர்ந்தார்.

அப்போதே இந்த Me Too இயக்கம் இந்தியாவையும் பாதித்தது. பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் என்று நிறைய பேர் மேல் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த இயக்கத்தை விமர்சிப்பவர்களின் முக்கிய குற்றச்சாட்டே பத்து வருடத்துக்கு முந்தைய பிரச்சனையை இப்போது ஏன் எடுக்கிறாய்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தாய் என்பது தான். ஆனால் இந்த Me Too இயக்கத்தின் முக்கிய அம்சமே அதுதான். பாலியல் அழுத்தங்கள், பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக பேசுவதில் பெண்களுக்கு பெரும் சமூக அழுத்தங்கள் இருக்கின்றன. நாமே பார்த்திருக்கிறோம். ஒரு வன்புணர்வு குற்றச்சாட்டே வந்தால் கூட அதில் அந்தப் பெண் மேல் ஏதாவது தவறு காண முடியுமா என்று முயற்சி செய்யும் சமூகம் நம்முடையது. அந்த ராத்திரி நேரத்தில் வெளியே என்ன செய்து கொண்டிருந்தாய்? குடித்திருந்தாயா? ஏன் அவ்வளவு டைட்டாக டி-ஷர்ட் போடுகிறாய்? என்றெல்லாம் குற்றத்தின் பழியை அந்தப்பெண்ணின் மீதே சுமத்த முயற்சி செய்யும் சமூகம் நாம். Blaming the victim for the crime. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட பாலியல் சீண்டல்களை பெண்கள் அமைதியாக விழுங்க முனையவே செய்வார்கள்.

இதனால்தான் இந்த Me Too இயக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. உலகெங்கிலும் பெண்கள் துணிச்சலுடன் தங்கள் வாழ்வில் தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க இந்த இயக்கம் மேடை அமைத்துக் கொடுத்தது.

நன்றி : ஸ்ரீதர் சுப்பிரமணியம்