Wed08172022

Last updateSun, 19 Apr 2020 8am

மே தினம்

அனைத்துமே போராட்டங்கள் மூலமாகவே கிடைக்கின்றன. வரப்பிரசாதங்களால் அல்ல. மே தினம் சிக்காகோ பேரெழுச்சியின் விளைவாக இருந்தாலும் அது இரத்தக் கரைகளுடனும் போராட்டங்களுடனும் தூக்குக் கயிற்றின் முடிவிலுமே ஆரம்பமானது. இதற்கு முன்பும் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றான்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12 -18 மணித்தியாலங்கள் வரை கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர் இதற்கெதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் குறிப்பிடத்தக்க கோரிக்கையாக இருந்தது. 10 மணித்தியால வேலை என்பதாகும்.

இதே போராட்டம் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஸ்யா என இன்னும் பல நாடுகளிலும் நடைபெற்றன. அனைத்துத் தொழிலாளர்களினதும் ஓரே கோரிக்கையாக இருந்தது வேலை அதற்குப்பின்னரான ஓய்வு ஆனால் அது சிக்காகோவில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாகத்தான் நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரம் 8 மணித்தியாலங்களாக ஆக்கப்பட்டது.

மே 1ம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாட அங்கு முடிவு செய்யப்பட்டது. தொழிலாளர்களின் ஒட்டு மொத்த நோக்கம் 8 மணி நேர வேலை அதற்குப்பின்னரான ஓய்வு குடும்ப வாழ்வில் ஈடுபடல் உல்லாசமாக வாழுதல் போன்றவையாகும். ஆனால் இவை அனைத்தும் தொழிலாளர்களுக்கு கிடைத்ததா என்று பார்த்தால் அது கேள்விக்குறியாகவே எஞ்சியிருந்தது.

ஆரம்ப காலத்தில் போராட்டங்களை மேற்கொண்டு தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்ள நினைத்த தொழிலாளர்கள் பின்னர் அவைகளை முதலாளித்துவத்திடம் விட்டுக்கொடுத்தனர். ஆரம்பத்தில் 8 மணி நேர வேலை கேட்டு போராடிய தொழிலாளர்கள் தற்போது பல்தேசியக் கம்பனிகளிடம் தங்களை அடகு வைத்துள்ளார்கள் முன்பு அதீத வேலை என்ற பெயரில் செய்த வேலைகள் இப்பொழுது ஓவர் டைம் என்ற அடிப்படையில் செய்கிறார்கள் முன்னைய தொழிலாளி ஒரு பொருளை தானே உற்பத்தி செய்தான். வளச்சியடைந்திருக்கும் இப்போதைய கால கட்டத்தில் பல தொழிலாளிகள் சேர்ந்து ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார்கள் அதனால் தொழிலாளிக்கு தான் உற்பத்தி செய்யும் பொருள் பற்றிய போதிய அறிவு ஆளுமையில்லாமல் போகின்றது.

ஒவ்வொரு முறையும் முதலாளித்துவ வர்க்கம் அதனது மாய வலைக்குள் தொழிலாளர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. தான் உற்பத்தி செய்யும் பொருளை தொழிலாளி நுகர முடியாமல் தவிக்கின்றான். அது வியாபாரப்பண்டம் மட்டுமே இப்படியாக முதலாளித்துவம் பல்தேசியக்கம்பனிகளை நிறுவி அதனூடாக தேவைக்கதிகமான உற்பத்திகளைச் செய்து உலகை விற்றலும் வாங்கலுக்குமான திறந்த சந்தையாக மாற்றியுள்ளது. இங்கு சமூக நலன் சமூகத்தின் மேம்பாடு கவனத்திற்கொள்ளப்படுவதேயில்லை.

சார் மன்னனின் ஆட்சியின் கீழ் ரஸ்யத் தொழிலாளிகள் பெருந்துன்பங்களுக்கு ஆளானார்கள். அங்கும் 1895 - 1899ற்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் செய்யப்பட்டன. 1896 ஏப்ரல் மாதத்தில லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில் ரஸ்யத்தொழிலாளியின் நிலைமை குறித்து விரிவாக அலசியபோது ரஸ்யத்தொழிலாளர்களின் பொருளாதாரப்போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டங்கள் மாபெரும் ரஸ்யப்புரட்சிக்கு வித்திட்டது. ஆனால் முதலாளித்துவம் தனது உற்பத்திப்பொறிமுறைகளை விரிவாக்கியதோடு மனிதனை முற்று முழுதாக இயந்திரத்தோடு தொடர்பு படுத்திவிட்டது. இதனால் சக ஊழியர் பற்றிய எண்ணம் குறைந்து மனிதன் இயந்திரத்தோடு வாழப்பழகிவிட்டான். உலகில் அரைவாசிக்கு மேற்பட்ட நாட்டு மக்கள் பட்டினியில் வாழ்கின்றனர். ஆனால் முதலாளித்துவ நாடுகள் தங்களது மேலதிக உணவு உற்பத்திகளை கடலில் வீசும் அளவுக்கு மிலேச்சத்தனம் கொண்டதாக உள்ளன.

ஆரம்பத்தில் கூட்டாக உற்பத்தி செய்து சம பங்காக பிரித்துக்கொண்டே தங்களது தேவைகளை மனிதன் பூர்த்தி செய்து கொண்டான். அந்தக்கூட்டுச்சமூகத்தில் ஒற்றுமையும் மனித நேயமுமே காணப்பட்டது. முதலாளித்துவம் தனது வளர்ச்சியின் முதிர்ச்சிக்கட்டத்தில் இப்போது இருப்பதாகத் தோன்றுகின்றது. தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்குள் கட்டுண்டு கிடக்க வசதியாக முதலாளித்துவம் தங்களது பொறிமுறைகளை வளர்த்துள்ளது. ஆனால் போராட வேண்டிய தொழிலாளர் வர்க்கம் இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் முதலாளித்துவத்திற்கு அடிமைப்பட்டிருப்பது தனது வாழ்வு பற்றிய அச்சத்தினாலேயேயாகும்.

ஆனால் உலகில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் போராட்டங்கள் மூலமாகவே மாறியுள்ளன. அமைப்பு ரீதியான போராட்டங்களே அதிகளவு வெற்றி பெற்றுள்ளன.

அன்று முதலாளித்துவம் நாடு பிடிப்பதற்காக ஆயுதச் சண்டைகளை நடாத்தியது. தற்போதைய காலத்தில் அதன் பொறிமுறையை மாற்றி உலக மக்களுக்கு வங்கிகளை அறிமுகப்படுத்தியது. தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வங்கி சிறந்ததொரு நிறுவனம் என்று கூறியது. சிறிய தொகையை ஊதியமாகப் பெறும் ஒருவர் பெரிய முதலாளி ஆகலாம் என்று மோகம் காட்டியது இதனை சரியாக விளங்கிக்கொள்ளாத தொழிலாளர்கள் வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொள்ளத் துவங்கினார்கள்.இதனால் கடனோடு சேர்த்து வட்டியும் செலுத்த வேண்டிய நிலை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. தொழிலாளி மேலதிகமாக உழைகை;க வேண்டிய கட்டாய நிலைமைக்கு தள்ளப்பட்டான் இதனால் வங்கிகளுக்கு அதிக இலாபம் கிடைத்ததோடு தொழிலாளி தான் வாழும் சமூக அமைப்பிலிருந்து தூரமாக்கப்பட்டான். அன்று மேலதிக நேர உழைப்பை எதிர்த்து போராடிய தொழிலாளி இன்று தான் கடன் சுமையால் மேலதிகமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளான். இது முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் ஒரு படி நிலையாகும்.

ஆகவே தொழிலாளி தான் தொழிலாளி என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உரிமைகள் எப்போதும் போராட்டங்களுடாகவே பெற முடியும் என்பதை தொழிலாளி ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்காக தான் வேலை செய்யும் இடத்தில் தொழிற்சாலையில் அமைப்பு ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மே தினமானது முதலாளிகள் தொழிலாளிகளை மேயும் தினமாக இல்லாமல் தொழிலாளர்கள் தினமாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அனைத்து சர்வதேச தொழிலாளர்களும் அமைப்பு ரீதியாக ஒன்று பட்டு போராட முன்வர வேண்டும்.