Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6

சுதன், ரமேஸ் விடுதலையும் புலிகளின் ஆயுதங்களும்

சுமார் இரு நாட்களின் பின்னர் சுதன், ரமேஸ் போன்றவர்களை ரெலோவின் வீட்டிற்குள் புகுந்து கியு பிரான்ஞ் பொலிசார் மீட்டெடுத்தனர். இந்த நேரத்தில் தான் நாம் அடுத்த கட்டமாக என்ன செய்வது? எப்போ நாட்டுக்குப் போவது? எமக்குச் சாப்பிடுவதற்கே கஸ்ரமான நிலையில் பொருளாதார வசதிகளை எப்படி ஏற்படுத்துவது? என்றெல்லாம் பல பிரச்சினைகள் எமக்குள் இருந்தன. அதனால் அவற்றைத் தீர்ப்பதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். அந்த நேரத்தில் சிலர் வெளியேறி ஒதுங்கப்போவதாகக் கூறினார்கள். விசேஷமாக வெளியேறி ஒதுங்கப்போவதாகக் கூறும் தோழர்களுக்கு உயிர் பாதுகாப்பு என்பது மிகவும் பிரச்சினைக்குரியதொன்று. என்றாலும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு ரெலோ முக்கிய காரணமாகும்.

விடுதலையாக்கப்பட்ட சுதன் ரமேஸ் போன்றவர்களைச் சந்தித்து நடந்த சம்பவங்களை விளக்குமாறு கேட்டோம். அவர்கள் தாம் புலிகளின் வலைக்குள் விழுந்து விட்டது உண்மை என்பதை ஒப்புக்கொண்;டனர். அத்துடன், புலிகளிடம் ஆயுதம் வாங்கி ரெலோத் தலைவரைக் கடத்திக் கொண்டு போய் மத்தியகுழு அமைப்பது தொடர்பாக சில முடிவு செய்தவுடன் தாம் அவரை விட்டு விடுவதாக நினைத்திருந்தோம் என்று தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் கூறினர். நாம் கேட்ட கேள்விகள் சில. உங்களிடம் ஆயுதம் இல்லையா? மத்தியகுழுப் பிரச்சினையை இவ்வாறுதானா கையாளுவது? அக்கேள்விகளுக்கு அவர்களின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அதனால் அவர்களை வெளியேற்றி விட்டுத் தொடர்ந்து வேலை செய்வதாக முடிவு செய்தோம். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து வேலை செய்ய முடிவு செய்தனர்.

அந்த நேரத்தில் மனோ மாஸ்ரரின் நடவடிக்கைகள் என்ன என்பதையும் எங்கள் பிரச்சினைகளில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார் என்ற எனது விமர்சனத்தையும் நான் முன் வைக்க விரும்புகிறேன்.

மனோ மாஸ்ரர் என்ற முற்போக்காளர்

ரெலோ என்ற இயக்கத்திற்கு அரசியல் பக்கத்தினைக் கொடுத்தவர் அவர். அத்துடன், அவர் விரும்பிய முற்;போக்கு அரசியலை ரெலோ என்ற இயக்கத்தின் மூலம் சாதிக்க முயன்றவரும் அவரே. அவரது விருப்பத்தின்படியே தான் அரசியல் வகுப்புக்கள் நடத்துவது போன்ற அரசியல் கட்டமைப்புக்கள் ஆரம்பமானதும் உருவாக்கப்பட்டது. அது ரெலோவின் தலைமை விரும்பிச் செய்ததொன்றல்ல. அவர் தலைமைப்பீடத்தினை மாற்றி அமைக்கலாம் என்று இருந்தார். அது முடியாத காரியமாகப் போய் விட்டது.

அவர் முன்பு எல்.ரி.ரி.யில் இருந்து அதில் பிரிவுகள் ஏற்பட்டபோது விலகித் தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை என்ற இயக்கத்தினை ஆரம்பித்தவர்களுக்கு உதவி செய்தார். ஆனால் அந்த அமைப்பில் முழுமையாக அவரால் வேலை செய்ய முடியவில்லை. பின்னர் சிறிது காலம் ஒதுங்கி இருந்து விட்டு 83 கலவரத்தின் போது ரெலோவின் தொடர்புகளினால் ரெலோவிற்காக வேலை செய்ய ஆரம்பித்தார்.

அவர் எதைச் சொல்லிக் கொடுத்தாரோ அதைத் தான் தொகுதிக்குப் பொறுப்பானவர்கள் எமக்குச் சொன்னார்கள். நாட்டில் இருந்தபடி அவர்கள் சொன்ன விளக்கமானது பலரை ரெலோவிற்குள் உள்வாங்க உதவியது. இந்தியாவில் குடிகொண்டிருந்த தலைமைப்பீடத்துக்கு அது உதவியது. ஆனால் தலைமைப்பீடத்துக்கு எந்தவிதமான கொள்கையும் இல்லாத நிலையில் அல்லது ஒரு ஸ்தாபனத்தை எவ்வாறு கட்டி வளர்ப்பது என்று கூடத் தெரியாத நிலையில் அதற்கு முற்போக்கு முலாம் ப+சி அதை மாற்றலாம் என்று மனோ மாஸ்ரர் நினைத்திருந்தார்.

உதாரணமாக, ரெலோவின் தலைமை பற்றி நாம் நாட்டில் கேட்ட போது அது புலிகளைப் போல் தனித்தலைமை அல்ல, தலைவர் என்று எவருமில்லை. மத்தியகுழுதான் தலைமை வகிக்கின்றது, அங்கு அதிகாரங்கள் எல்லாம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது போன்ற விஷயங்கள் எமக்கு நாட்டில் கூறப்பட்டன. அவற்றை அவ்வாறு சொல்லச் சொல்லி சிறிசபாரத்தினம் சொல்லி இருக்க முடியாது. சுதா, ரமேஸ் போன்றவர்கள் கூறியதை நம்பி மனோ மாஸ்ரர் தான் அவ்வாறு விளக்கி முற்போக்கான தலைமை போல் காட்டி ஒரு பிற்போக்கான தலைமையை வளர்த்து விட்டிருந்தார்.

நாம் இந்தியாவிற்கு வந்த பிறகும் கூட அவர் இந்தியாவுக்கு வந்தபிறகும் கூட அந்த நிலைமைகளை அவதானித்தும் கூட அவர் விரும்பிய தலைமையை ஏற்படுத்துவதற்குரிய பெரிய முயற்சிகளையும் அவர் மேற்;கொண்டதாகக் தெரியவில்லை. சுதா, ரமேஸ் பிரச்சினைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டவுடனே அவ்வாறான பிரச்சினைகள் (மத்தியகுழு ஒன்று இல்லாதது போன்றவை) பல உள்ளதாக அவர் கூறினார். எமது உட்கட்சிப் போராட்டத்தில் பெரிதாகப் பங்குபற்றவில்லை.

நாம் பதின்மூன்று பேரும் பெண் தோழிகள் முப்பது பேர் வரையில் எமது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையிலும் போராடினோம். அந்த ஒருமாத இடைவெளிக்குள் அவர் எமக்கும் தலைமைப்பீடத்துக்கும் இடையில் எமது உயிர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு பேச்சுவார்த்தை ஊடகமாகத் தான் செயற்பட்டார்.

அவர் சம்பந்தமாக எனது விமர்சனம் என்னவென்றால், உண்மையில் வர்க்க விடுதலையை நேசித்த அவர் ரெலோ தலைமைப் பீடத்தை நடத்தக்கூடிய திறமை இருந்தும் அவரது உழைப்பு செயற்திறனற்ற பிற்போக்கு தலையை வளர்ப்பதற்கே பயன்பட்டது அல்லது பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு திறமையுள்ள போராளிகள் அத்தகைய தலைமையினால் பயன்படுத்தப்படுவது கொலைகார மிருகவெறியுள்ள பிற்;போக்குத் தலைமைகளை வளர்ப்பதற்கு உதவியது என்பதே.

மனோ மாஸ்ரரைக் கடத்தல்

தொடர்ந்து அரசியல் வேலை செய்ய வேண்டும் என நினைத்தாலும் முதலில் நாட்டிற்குச் சென்று அங்கிருந்து தான் எமது முடிவுகளை எடுப்பது என்ற நிலையில் நாட்டிற்குச் செல்ல முடிவு செய்தோம். அரசியலில் இருந்து ஒதுங்க விரும்பியவர்களும் நாட்டில் இருந்து வந்த முன்னைய தொகுதிப் பொறுப்பாளர்கள் சிலருமாக நாட்டிற்குச் சென்றனர். பலருக்கு மீண்டும் வீட்டுக்குச் சென்று பழைய வாழ்க்கையை ஆரம்பிப்பது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. விசேஷமாக சிறிலங்கா இராணுவத்தின் கெடுபிடிகள் இருந்தன. எனவே, எமது திட்டத்தின்படி பெண் தோழிகளை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதை ஒத்தி வைத்தோம். இந்த வேளையில் சிலர் பெற்றோர்களைக் கூப்பிட்டு இந்தியாவில் படிப்பதற்குரிய வசதிகளைச் செய்தனர். அந்த நேரத்தில் மனோ மாஸ்ரர் நாட்டிற்குச் செல்வது அவரின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் நினைத்தோம். எனவே, அவரை இந்தியாவில் சிறிது காலம் தங்குமாறு கேட்டோம். ஆனால் எதிர்பார்த்தது போல் இந்தியாவில் அவருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. மனோ மாஸ்ரரையும் சூரி என அழைக்கப்பட்ட இன்னுமொரு தோழரையும் ரெலோ உறுப்பினர்கள் கடத்த முயற்சித்தனர். பின்னர் மனோ மாஸ்ருடன் நாட்டிற்குச் சென்ற சூரி புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.

மனோ மாஸ்ரரை ரெலோ கடத்த எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. மனோ மாஸ்ரரும் மற்றைய தோழரும் எமது இருப்பிடத்தினை விட்டு அவர்களின் இருப்பிடத்திற்கு படுப்பதற்காக ஒரு வெள்ளிக்கிழமை இரவு போருர் பஸ்ஸில் வளசரவாக்கத்திற்கு புறப்பட்டனர். அவர்கள் பஸ்ஸில் ஏறியவுடன் ரெலோவினைச் சேர்ந்த இருவரும் அவர்களின் பஸ்ஸில் ஏறினர். அந்த பஸ்ஸின் பின்னால் ஒரு காரிலும் முன்னால் ஒரு காரிலும் ரெலோவினர் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலைமையைப் புரிந்து கொண்ட அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்குவதைத் தவிர்த்தனர். அந்த நிலையில் பஸ்ஸில் இருந்த ரெலோவினர் அவர்களைப் பிடித்து பஸ்ஸிலிருந்து இறக்குவதற்கு முயற்சித்தனர். அப்போது பஸ்ஸிலிருந்த சக பிரயாணிகள் அதைப் பார்த்து பிரச்சினைப்படவே ரெலோவினர் கூறிய காரணங்கள் அவர்கள் திருடர்கள் எனவும் தமது காம்பில் இருந்து பணத்தைத் திருடி விட்டார்கள் எனவும் ஆகையால் தான் அவர்களைப் பிடிப்பதாகவும் கூறினார்கள்.

அந்த பஸ் போன பாதை ரெலோவினரின் வட பழனி வளசரவாக்கம் ஏரியாவாக இருந்தபடியாலும் அந்தப் பயணிகள் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர்களாக இருந்தார்கள். ஆனால் மனோ மாஸ்ரரும் மற்றைய தோழரும் தாம் திருடர்கள் அல்ல எனவும் தாம் தப்பி ஓடவில்லை எனவும் தம்மைப் பொலிசில் ஒப்படைக்குமாறும் ரெலோ உறுப்பினர்களுடன் போக முடியாது எனவும் கூறினார்கள். எனவே, தகவல் பொலிசுக்கு தெரியப் படுத்தப்பட்டு பஸ் கடைசி பேருந்து நிலையத்தை வந்தடைந்தவுடன் பொலிஸ் வந்து மனோ மாஸ்ரரையும் மற்றைய தோழரையும் மற்றும் ரெலோ உறுப்பினர்கள் இருவரையும் கைது செய்தனர்.

சனிக்கிழமை எமது இருப்பிடத்துக்கு வரவேண்டிய அவர்கள் இருவரும் வராததால் நானும் இன்னும் ஒருவருமாக அவர்களின் இருப்பிடத்துக்குச் சென்றோம். அங்கிருந்த இரு தோழர்கள் அவர்கள் அங்கு வரவில்லை எனவும் தாம் எம்முடன் தான் அவர்கள் நின்றிருக்கலாம் என்று நினைத்ததாகவும் சொன்னார்கள். உடனடியாக நாம் நிலைமைகளைப் புரிந்து கொண்டு அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று முடிவெடுப்பதற்காகக் கூடினோம். எம்மைப் பொறுத்தவரையில் அவர்களை யார் பிடித்தார்கள்? பிடித்தவர்களின் நோக்கம் என்ன? அடுத்ததாக எம்மையும் பிடிப்பார்களா? அவ்வாறாயின் எவ்வாறு தப்புவது? எவரிடம் நம்பி பாதுகாப்புக் கேட்பது? போன்றனவாகும்.

அந்த வேளையில் பெண்கள் 28 பேரும்; ஆண்கள் 3 பேரும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் வேறு இருவர் எம்முடன் பிரிந்தாலும் எம்முடன் இருக்காமல் வேறு இடத்தில் இருந்தனர். அவர்களுடனேயே மனோ மாஸ்ரரும் மற்றைய தோழரும் இருந்தனர். அந்த 3 ஆண்களில் ஒருவர் மட்டும் வயதிலும் அனுபவத்திலும் கூடியவராகக் கருதப்பட்டவர். நானும் மற்றையவரும் 18 வயதினர். நாம் எந்தப் பயத்தையும் அறியாதவர்கள்;. அதனால் துணிந்து பல முடிவுகளையும் உடனடி நடவடிக்கைகளையும் எடுத்தோம். ஆனால் எந்த முடிவும் பெண் தோழிகளின் அனுமதியுடனும் அவர்களின் உடன்பாட்டுடனும் தான் எடுக்கப்பெற்றது. அன்று எமது பிரச்சினை எம்மைப் பாதுகாப்பதும் மனோ மாஸ்ரருக்கும் மற்றத் தோழருக்கும் என்ன நடந்தது என்பதை அறிவதும் தான்.

முதலாவதாக ரெலோவுடன் உடன்பாடுள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃவ், ஈரோஸ், ஆகியவற்றை அணுகினோம். ரெலோவுடன் கதைத்து மனோ மாஸ்ரரும் மற்றத் தோழரும் எங்கே இருக்கிறார்கள்; என்பதை அறிய விரும்பினோம். அத்துடன் எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் முடிந்தளவு உதவிகளைச் செய்யுமாறு கேட்டோம். அடுத்ததாக, பொலிசின் உதவியை நாடினோம்.

அதற்கு எம்மைப் போன்ற இலங்கையரைக் கண்காணிக்கும் தமிழ்நாடு கிய+ பிரிவினருடன் தான் நாம் உண்மையில் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் அந்தப் பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தில் நிலைமைகளை விளக்கி எமக்கு சாதாரண உடையில் வந்து பாதுகாப்புத் தருமாறு கேட்டோம். ஆனால் அந்தப் பொலிஸ் அதிகாரியோ எம்மைப் பாதுகாப்பது தனது பொறுப்பு என்;று சொல்லி எங்களைப் போகச் சொன்னார். அந்தப் பொலிஸ் அதிகாரியின் அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை. அந்த அதிகாரியோ பெரிய ஹீரோக்களை முதன்முதலில் பார்ப்பது போல எங்களைப் பார்த்தார். அவர் எமது இயக்கங்கள் இந்தியாவில் இருப்பதைக் கேள்விப்பட்டதாகவும் முதன்முதலில் இயக்கப் போராளிகளை இப்போது தான் பார்ப்பதாகவும் அதுவும் தனது ஏரியாவில் இருப்பவர்களுக்கு தான் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது ஒரு தமிழனின் கடமை என்றும் எமக்கு ரீயும் வடையும் வாங்கித் தந்து எங்களை அனுப்பி விட்டார்.

ஒரு அதிகாரிக்கு நேரடியாக எல்லாப் பிரச்சினைகளையும் சொல்லவும் முடியாது. சொன்னாலும் அவர் எங்களையும் எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனைகளையும் புரிந்து கொள்கின்ற நிலையில் இல்லை என்பதும் தெரிந்தது. கடைசிக் கட்டமாக ஒரு இந்திய நண்பரை அழைத்து அவர் மூலமாக அந்தப் பொலிஸ் அதிகாரியிடம் நிலைமைகளை விளக்கினோம். ஆனால் அந்த அதிகாரியோ என்னுடைய பிரதேசத்தில் இருக்கும் இவர்களைத் தான் உயிரைக் கொடுத்தும் பாதுகாப்பேன் என்று வீராவேசமாகக் கூறினார். எமக்குள்ள பிரச்சினை முதலாவது இவர் பொலிஸ் ஜீப்பிலோ அல்லது பொலிஸ் உடையிலோ எமது இருப்பிடத்துக்கு வரக் கூடாது என்பது. இரண்டாவது, இது ஒரு தற்காலிக பாதுகாப்பிற்காகத்தான் அவரிடம் போனது. அடுத்த நாள் திங்கட்கிழமை. தமிழ் நாடு கிய+ப் பிரிவினரிடம் போய் அதன் பின் அவர்களின் உதவியைப் பெறலாம் என்பதாகும். ஆனால் எதிர்பார்த்தது போல் அந்த அதிகாரியும் இரு பொலிசாரும் ஜீப்பில் எமது வீட்டுக்கு முன் வந்திறங்கினர்.

எமது வீட்டைச் சுற்றியுள்ள அனைவரும் எமது வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது போலக் கூடி விட்டனர். நாம் இருந்த வீட்டின் உரிமையாளர் எமது வீட்டிற்குப் பின்னால் இருந்தவர். அதுவரையிலும் நாம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் கல்வி கற்பதற்காக அங்கு வந்தவர்கள் என்றும் தான் வீட்டின் உரிமையாளருக்குத் தெரியும்.

ஒரு மாதத்திற்கு முன்பாகத் தான் பல கஸ்ரங்களுக்கு மத்தியில் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். ஏனெனில் முதலில் முப்பது பேர் தங்குவதென்றால் யாருமே வீடு தரமாட்டார்கள். இரண்டாவது இவ்வளவு பெண்கள் என்றால் அவர்கள் ஏன் எதற்காக வீடு வேண்டும் என்று பல கேள்விகளைக் கேட்பார்கள். நாம் படிக்கின்ற மாணவர்கள் என்றால் எம்மைப் பார்த்தால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் மாணவர்களுக்குரிய வயதும் இல்லை. அடுத்தது தண்ணீர் பிரச்சினை. பெண்களுக்கு அவர்கள் வெளியே போய் வரக்கூடிய பாதுகாப்பான ஒரு ச+ழ்நிலை, பஸ் வசதிகள் என்று பல பிரச்சினைகள் இருந்தன. அந்த பொலிஸ் அதிகாரியின் வருகையின் பின்பு வீட்டு உரிமையாளர் வந்து சொல்வதற்கு முன்பாகவே அடுத்து வீடு தேடும் படலம் ஆரம்பமானது.

மனோ மாஸ்ரருக்கும் மற்றத் தோழர் இருவருக்கும் அதுவரை என்ன நடந்தது என்று எமக்குத் தெரியவில்லை. நாம் வழமைபோல் ஈ.பி.ஆர்.எல்.எஃவ், ஈரோஸ் இன் இடங்களுக்குச் சென்று அவர்கள் ஏதாவது ரெலோவுடன் பேசினார்களா? புதிய செய்தி ஏதாவது தெரியுமா? எனக் கேட்டோம். ஈரோஸ் பாலகுமாரிடம் நிலைமைகளைக் கேட்டோம். ரெலோ தனக்கும் அவர்களின் தலைமறைவுக்கும் சம்பந்தமில்லை எனச் சொல்கின்றது என்றும் ஆனால் பஸ்ஸில் பிரச்சினைப்பட்ட நாலு இலங்கையரை பொலிஸ் பிடித்ததாகத் தான் கேள்விப்பட்டதாகவும் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் மறியல் வைத்துள்ளதாகவும் எம்மை விரும்பினால் விசாரித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். அவர் சொன்ன பிரதேசம் ரெலோவினரின் பிரதேசமாக இருந்தபடியால் திங்கட்கிழமை கியூ பிரிவினரின் உதவியுடன் போய் விசாரித்துப் பார்ப்பதாக முடிவெடுத்தோம்.

பெண் போராளிகளைப் புலிகளுடன் சேர்ப்பதற்கு நிர்மலா நித்தியானந்தன் முயற்சி

அந்த நிலையில் புலிகளுடன் இருந்த நிர்மலா நித்தியானந்தன் தமிழர் தகவல் நிலையத்துக்கு வந்து தான் பெண்களுடன் கதைக்க விரும்புவதாகவும் அவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக முடிவு செய்யச் சொல்லியும் வேண்டினார். அவரின் நிலைப்பாடு ரெலோ தான் இவர்களைக் கடத்தியது என்பதும் மிஞ்சி இருப்பவர்களை பாதுகாப்பதற்குப் புலிகள் தயாராக உள்ளதாகவும் நாம் கையெழுத்து வைத்துக் கொடுத்தால் புலிகள் எமக்குப் பாதுகாப்பு வழங்குவார்கள் என்பதுமாகும். விளக்கமாகச் சொல்வதென்றால் எம்மைப் புலிகளுடன் சேரச் சொல்லி, அவர்களின் இடத்துக்கு கூட்டிப் போவதற்காகத்தான் நிர்மலா அங்கு வந்து எமக்கு தகவல் அனுப்பினார்.

எம்மைப் பொறுத்தவரையில் எந்த நிலையிலும் புலிகளுடன் உறவு வைத்துக் கொள்ள நாம் தயாராக இல்லை. வேறு இடத்தில் இருந்த மற்றைய இருவருக்கும் புலிகளின் உதவிகளைப் பெறுவதுதான் நல்லது என்று கருதினர். அவர்கள் இருவரைத் தவிர மிகுதிப் பேர் ஒரே கருத்தில் இருந்ததால் அவர்களின் கருத்து எடுபடவில்லை. அந்த இருவரில் ஒருவர் பின்னர் ஒரு வெளிநாட்டு பிரதமரின் கொலையில் சம்பந்தப்பட்ட புலியைச் சேர்ந்த சிவராசா என்று தேடப்பட்டு கொலை செய்யப்பட்டவர்.

திங்கட்கிழமை காலையில் கிய+ பிரிவினரின் அலுவலகத்தில் எம்முடன் தொடர்புள்ள அதாவது எம்மைக் கண்காணிக்கும் அதிகாரியுடன் சென்று அவர்களை விடுதலை செய்தோம். மனோ மாஸ்ரரும் மற்றத் தோழரும் மட்டுமல்ல ரெலோவைச் சேர்ந்த இருவரையும் கூட விடுதலை செய்தனர். விடுதலை செய்த ரெலோ உறுப்பினர் ஒருவரை அந்த அதிகாரி கூப்பிட்டு ரெயினிங் எல்லாம் முடிந்ததா என்று கேட்டார். உடனே அந்த உறுப்பினர் உ.பி றெயினிங் முடிந்தது எனவும் தான் அதில் விசேஷ பயிற்சி பெற்றதாகப் பெருமையாகக்; கூறினார். உடனே அந்த அதிகாரி எங்களைப் பார்த்து இவர்களை நம்பி இந்தியா றெயினிங் கொடுத்து இருக்கிறது. இங்கு ரெயினிங் கொடுக்கப்பட்டது இரகசியமாகப் பேணப்பட வேண்டியது, இவனோ வாந்தி எடுத்தவன் போல இந்தியாவைக் காட்டிக் கொடுக்கிறானே என்றார். எம்மை இனிமேல் அவர்களின் பிரதேசத்துக்குள் கவனமாக இருக்கும்படி கூறினார்.

மனோ மாஸ்ரரின் கடத்தல் நடவடிக்கையின் விளைவாக நாட்டிற்குச் சென்ற பல தோழர்களில் சிலர் எமது பாதுகாப்பிற்காக திரும்பிச் சென்னை வந்தார்கள். அந்த நிலையில் மனோ மாஸ்ரர் அங்கிருப்பது பிரச்சினை எனக் கருதி நாட்டிற்குச் சென்றார்.

 

1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1

2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2

3. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3

4. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4

5. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5{jcomments on}