Sun04282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரமாண்டமான சதுரங்கப் பலகையில் ஆடிய ஆட்டம்..(பகுதி -2)

அல்ஃபைடா எனப்படும் ‘இலாபம்” இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை வாஷிங்டன் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்னர், பயங்கரவாதிகளை உருவாக்குவது மற்றும் இராணுவச் சதிகள் (படுகொலைகள்) மூலமாகவே ஆடப்பட்டது. 2001ஆம் ஆண்டுக்குப் பின்னான இந்தப் பத்துவருடத்தில் இதே பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தமாகவும், இறுதி 5வருடங்களில் புதிய தொடக்கமாகவும் ஆடப்பட்டது. இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை யூரேஷியாவை அடிப்படையாகக் கொண்ட உலகின் பிரமாண்டமான ஒரு துருவ தலைமைத்துவத்துக்கான யுத்த ஆட்டத் தொடக்கமாகும். குறிப்பாக தெற்காசியாவின் பாரசீக வளைகுடாவை மையப்படுத்திய ஒரு நீண்டகால காலனித்துவ யுத்தம் என்ற கண்ணோட்டத்திலேயே இந்தச் சதுரங்க ஆட்டம் தெரிவு செய்யப்பட்டதாகும். இருப்பினும், 2001 ஆம் ஆண்டு நியூயோக் இரட்டைக் கோபுரத்தை அல்கைடா விஸ்வரூபம் எடுத்துத் தாக்கியதாக அமெரிக்கா இந்தச் சதுரங்க ஆட்டத்தை வெளிப்படையாகவே ஆடத் தொடங்கியது. பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற கோசத்தோடு மேற்குலகையும் சேர்த்து வெளிப்படையாக பலமாக ஆடநினைத்த ஆட்டமாகும்.

2025ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உலகில் முதலிடத்திலும், ஐரோப்பிய யூனியனை இரண்டாம் இடத்துக்கும் கொண்டுவருவதற்கான ஒரு மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு ஆட்டமாகும். சுருங்கச் சொன்னால் இது மத்திய ஆசியாவை ஆக்கிரமிக்கும் சுனாமி ஆட்டமுமாகும். மத்திய ஆசியா எனப்படுவது சோவியத் யூனியனில் இருந்து உடைந்த மேற்சொன்ன ஜந்து நாடுகள் உள்ளடங்கலாக, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வடக்காக அமைந்திருக்கிறது. அதேவேளை அதன் மேற்கெல்லையாக காஸ்பிக் கடலையும், கிழக்கில் சீனாவையும் கொண்டு அமைந்திருக்கும் கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு கேந்திரப் பிரதேசமாகும்.

 

பில்லேடனை ‘சுதந்திர வீரர்கள்” என்று சொன்ன வெள்ளைமாளிகையே இப்போது ‘பயங்கரவாதி பில்லேடன் (அல்கைடா)” என்று பிரகடனப்படுத்தியது. ‘உலகப் பயங்கரவாதி பில்லேடன்” என்பது, காஸ்பியன் பள்ளத்தாக்கில் இருக்கும் அமெரிக்காவுக்கான புதிய வளங்களாகும். பாரசீக வளைகுடாப் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி குழாய்வழியாக உறிஞ்சி இழுக்கப்படும் கனிவளத்துக்கான இரண்டாவது ஆட்டமே, அல் ஃபைடா (இலாபம்) என்பதே இவ்வாட்டம். இவ்வாட்டமானது 2001 இரட்டைக்கோபுரத் தாக்குதலுடன் மத்திய ஆசியா மற்றும் பாரசீக வளைகுடா மீதான அமெரிக்க புஸ்சின் ஆட்டமாக ஆரம்பமாகி இருந்தது. இதற்காக அமெரிக்கா உள்நாட்டு மக்களுக்கு இவ் ஆட்டத்தில் ஏற்படும் இழப்புக்கள் மற்றும் மனிதப்படுகொலைகள், யுத்த மீறல்கள் அனைத்தையும், ஒரு புனிதமான ஜனநாயக உணர்வாக தமது மக்களுக்குக் காட்டத் தரைமட்டம் ஆனது தான் வாஷிங்டன் இரட்டைக் கோபுரம். இதற்காகவே அமெரிக்காவால் வளர்த்த கிடாயே அதன் மார்பில் பாய்ந்ததான ‘கதையை” மறுபுறத்தில் மறைக்க, அல்கைடாவை அல் ஃபைடாவாக தனது இலாபமாக மாற்றியது அமெரிக்கா. பில்லேடன் என்கின்ற தனது வேள்வித் தலைக்கிடாயின் தலைக்கு 25 மில்லியன் டொலர் சன்மானமாகவும் அறிவித்தது அமெரிக்கா. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் சரிந்து விழுந்தது போக, இதன்பின் உலகில் கோடானகோடி சொத்துக்கள் மண்ணாய்ப் போனது. பல இலட்சக்கணக்கான உயிர்கள் கொத்துக்கொத்தாகப் பலியெடுக்கப்பட்டன. இந்த உலகத்தால் ஒரு பருக்கை சோற்றைக்கூட கொடுக்க முடியாத பில்லியன் கணக்கான அகதிகளையும் உருவாக்கி விட்டது. 2001 ஆண்டுக்குப்பின் பயங்கரவாத்தை கைவிடவேண்டும் என்று சொல்லப்பட்ட போதும், பயங்கரவாதத்தை வலிந்த யுத்தத்தால் தீர்ப்பதே நடைமுறையாக எங்கும் இருந்தது.

2001 ஆண்டு கட்டுநாயக்கா விமானநிலையத்தை தாக்கிய விடுதலைப் புலிகளும், இதே பயங்கரவாதப் பட்டியலில் இருந்த சூடானும் 2002 இல் தத்தமது உள்நாட்டுப் பிரச்சனையில் சமாதான பேச்சுக்களுக்குத் திரும்பியிருந்தன. சூடானில் பிரிவினையையும், இலங்கையில் அதிகாரப்பரவலும் இந்த ஆட்டத்தால் முன்வைக்கப்பட்ட விசித்திரமான ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இலங்கையில் புலிகளின் இருப்பும், சூடானில் பிரிவினையுடன் கூடிய அமைதியும் இந்த ஆட்டத்தின் இலாபமாகப் பார்க்கப்பட்டதே ஒழிய மக்களுக்கான தீர்வாகப் பார்க்கப்படவில்லை. சூடானின் எண்ணைவளத்தையும், கனிமவளங்களையும், நைல் நதியின் நீராதார சொர்க்கவளங்களையும் கொள்ளை இடுவதற்கான பிரிவினையாக அது இருந்தது. இலங்கையில் ஒரு பிடி மண்ணும், ஒரு குவளை கடலும் உலகமயமாதலுக்காக விளைகின்ற நில, கடல் வளங்களின் மேற்கின் பங்குப் போட்டியின் இலாபமாக ‘அதிகாரப்பரவலாக” இது இருந்தது. சூடானின் உள்நாட்டு யுத்தத்தில் வெளியேறிய மேற்கு எண்ணைக் கம்பனிகளால் அங்கு சீனாவின் இருப்போடு போட்டி போட முடியவில்லை. சூடானில் கொப்பளித்துக் கொண்டிருக்கும் எண்ணை இருப்பான அபெய் மாகாணத்தை சூடானுக்கே சொந்தமில்லாமல் வடக்குத் தெற்காகப் பிரித்து விடுவதே இவ்வாட்டத்தின் இலாபமாகும். இது சீனாவை அகற்றிவிட்டு மேற்கத்தைய எண்ணைக் கம்பனிகள் காலூன்றுவதற்கு வசதியான பிறிதொரு ஆட்டமுமாகும்.

2003இல் பயங்கரவாத்துக்கு எதிரான யுத்தம், அணு ஆயுத்துக்கு எதிரான போர் என ஆப்கான் முதல் ஈராக் வரை இவ்வாட்டம் ஆடப்பட்டது. ஈராக்கில் 4 வருடத்துக்குள் 12 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 361 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் 33 பேர் பெண் ஊடகவியலாளராக இருந்தனர். இதில் 337 பேர் ஈராக்கைச் சேர்ந்தவர்கள். 24 பேர் வெளிநாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளராக இருந்தனர். வன்முறை அற்ற முறையில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் 2 பெண்களாவர். 201 செய்தியாளர்களும், 29 படப்பிடிப்பாளரும், 06 வீடியோ பதிவாளரும், மேற்கூறியவர்களுக்குத் துணையான 43 பேரும், 12 மொழிபெயர்ப்பாளர்களும், 17 வாகன ஓட்டுனரும், 15 பாதுகாவலரும், 14 உதவியாளர்களுமாக மொத்தம் 337 ஈராக் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அணுவாயுதம் என்று சாக்குப்போக்குச் சொல்லி அமெரிக்கா ஆடிய இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் சதாம் கைது செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டார். இவ் ஆக்கிரமிப்பு யுத்தம் ஓய்வுக்கு வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னமே வடஆபிரிக்கா மற்றும் மேற்காசியாவைச் சேர்ந்த அரபு நாடுகளில் அமெரிக்காவின் கூட்டாளிகளால் கொண்டுவரப்பட்ட தனியார் மயமாக்கலால் வேலையில்லாத் திண்டாட்டம் அதன் எல்லையை மீறியிருந்தது. அமெரிக்காவுக்கும் மற்றும் மேற்கு நாடுகளுக்குமாக உள்ளுர் எடுபிடிகள் இணைந்து நடத்திய பகற் கொள்ளையால் இந்நாடுகள் திவாலாகிப் போயின. மத்தியதர வர்க்கத்து இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் விண்ணை இடித்தது. ஏறத்தாள சரி பாதியான இந்நாட்டு மக்கள் வெறும் 2 டொலருக்கு நாட்கூலியாக வாழவேண்டிய வறுமை வயிற்றில் அடித்தது. எங்கே இது புரட்சியைக் கொண்டுவந்து விடுமோ என்று இந்தப் பிரமாண்டமான சதுரங்க ஆட்டம் பயந்துபோனது. அதனால் அதன் அரையிறுதி ஆட்டத்தை ‘புதிய துவக்கமாக” ஆட நினைத்தது.

இந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பழிவாங்க அமெரிக்கா மத்திய ஆசியா மற்றும் வளைகுடா மீதான ஆக்கிரமிப்பை ஆரம்பித்திருந்தது. செப்.11 -2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலில் விமானக் கடத்தல்காரராக 15 பேர் கைதாகி இருந்தனர். இவர்கள் அனைவரும் சவுதி அரேபியக் குடிமக்களாகவே இருந்தனர். இதில் ஒருவர் கூட ஈரானில் இருந்தோ மற்றும் பாக்கிஸ்தான் ஆப்கானில் இருந்தோ வந்திருக்கவுமில்லை. மேலும் இத்தாக்குதலில் பில்லேடன் சம்மந்தப்பட்டதை அமெரிக்கா ஆதாரபூர்வமாக நிரூபித்தால், பில்லேடனை சரணடையச் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக தலிபான் அறிவித்தது. ஆனாலும் அமெரிக்கா இதைக் காதில் விழுத்தவில்லை, ஆப்கான் மீது மிதமிஞ்சி ஆக்கிரமித்தது. அங்கு தனது வளர்ப்பு நண்பனுக்கு (வேள்விக்கிடாயுக்கு) ஆதரவாகச் செயற்பட்டுவந்த தலிபான் ஆட்சியை வீழ்த்தியது அமெரிக்கப்படை. அன்றிலிருந்து தொடங்கியது தான் பில்லேடன் மற்றும் ஸவாஹிரி போன்ற முக்கிய வளர்ப்புக் கிடாய்களின் மீதான இரத்த வேள்வி ‘ஒசாமா பில்லேடனும், அல் கைடா இயக்கத்தின் முக்கிய தலைவர்களும் எங்கிருந்தாலும் அங்கு நேரடியாக தாக்குதல் நடத்துவோம்” என அமெரிக்க அரசு சூழுரைத்தது. இக்காலப் பகுதியில் சித்திரல் மலைப் பிராந்தியத்தில் பில்லேடனும், தலிபான் தலைவரும் ஆன முல்லாவின் நடமாட்டங்கள் காணப்படுவதாக அமெரிக்கா கூறியது. சித்திரல் மலைப் பிரதேசம் சீன எல்லையை ஒட்டிய வடமேற்குப் பிரதேசமும், மற்றும் ஆப்கானின் குக்கிரம் பள்ளத்தாக்கில் இருந்து டோனரா போரா மலைக்குன்றுவரை நீண்டு காணப்படும் பகுதியாகும். 2001 ஆம் ஆண்டுக்குப் பின், பில்லேடன் பாக்கிஸ்தானுக்குள் உள்நுழைய ஏதுவாக டோரா போரா யுத்தக்களத்தை புஸ் நிர்வாகம் தமது உளவுக்காய்களாக இச் சதுரங்கப்பலகையைப் பயன்படுத்தியது. இது 1996 இல் புலிகளை வன்னிக்குள் அனுப்பியது போன்றது.

 

 

இந்தப் பிரமாண்டமான சதுரங்க ஆட்டத்தின் முதல் பத்துவருடத்தின் (2001-2011) கடைசி முதலாண்டுக் காலத்தில் பில்லேடனைப் பிடிப்பதற்கான அமெரிக்க அரசு ஆப்கானில் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து கடந்த வருடம் அமெரிக்கத் தலைமை வழக்கறிஞர் எரிக் ஹோல்டன் ஒரு செய்தியைக் கூறியிருந்தார். பில்லேடனை உயிருடன் பிடித்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தும் சாத்தியம் தமக்கு இல்லை என்று அவர் அடித்துக் கூறியிருந்தார். மேலும், ‘ஒன்றில் அமெரிக்கப்படை பில்லேடனைக் கொன்று விடும் அல்லது அவரது ஆட்களாலேயே அவர் கொல்லப்பட்டு விடுவார். எனவே உயிருடன் ஒசாமாவை நீதிமன்றத்தில் நிறுத்துவது என்பது சாத்தியமில்லை” என்றும் அவர் கூறியிருந்தார். பில்லேடனை உயிருடன் பிடித்து வந்து அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தினால், எந்த ஓர் அமெரிக்கக் குடிமகனுக்கும் உள்ள உரிமையை பில்லேடன் பயன்படுத்திக் கொள்வார் என்ற ‘குடியரசுக் கட்சியினரின்” எதிர்வாதத்துக்கே இவர் இவ்வாறு பதிலளித்தார். பில்லேடனைக் குறிவைத்து சாட்டுக்கு அமெரிக்கா ஆப்கானில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்த வேளையில், பில்லேடன் பற்றி நாளொரு செய்தியும் பொழுதொரு வதந்தியுமாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

• பில்லாடனுக்கு புற்றுநோய்.
• சிறுநீரகம் பழுதடைந்து விட்டது.
• பாக்கிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டார்.
• ஆப்கான் மலைப்பகுதியில்தான் அவர் பதுங்கியுள்ளார்.
•ஆப்கான் எல்லையை ஒட்டிய பாக்கிஸ்தான் பழங்குடி மக்கள் மத்தியில் தங்கியுள்ளார்.

• பில்லேடன் இறந்துவிட்டார். இப்படிப் பல செய்திகள் வெளிவந்தன!

பில்லேடன் இறந்து விட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன் (28 .04. 09) பாக்கிஸ்தான் அதிபர் சர்தாரி  தெரிவித்தார். ஆனால் இதற்கு தம்மிடம் ஆதாரம் இல்லை என்றும் கூறினார். ஆனாலும் இச் செய்தி உலக ஊடகங்களில் பிரபல்யமானது. (இக்காலத்தில் ஒசாமா இறந்து விட்டதாகவே சுயாதீன ஊடகங்கள் நம்பின) இச்செய்தியை முதன் முதலில் அமெரிக்க அதிபர் ஒபாமா மறுத்தார். அவர் பாக்கிஸ்தானில் மறைந்திருப்பதாகவே அவர் கூறினார். கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி, 2010 பில்லேடன் பாக்கிஸ்தானின் உளவு அமைப்பான (ஐ.எஸ்.ஐ) இன் பாதுகாப்புடன் பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வசிப்பதாக (சீ.என்.என்) ஒரு செய்தியை வெளியிட்டது.- ஆப்கானிலுள்ள நேட்டோப் படைகளின் மூத்த இராணுவத்தலைவர் ஒருவரை மேற்கோள் காட்டி இத்தகவல் சீ.என்.என் இல் வெளியாகியிருந்தது. பில்லேடனும் அவரின் நெருங்கிய இதய சகாவான அய்மன் அல் ஸவாஹிரி (பில்லேடனின் மூளை) தனித்தனி வீடுகளில் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரதும் வீடுகளும் அருகருகே இருப்பதற்கு வாய்ப்புக்களில்லை. அவர்கள் மலைக்குன்றுகளில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுவது மிகவும் தவறான தகவல் என்றும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத நேட்டோவின் மூத்த அதிகாரி கூறியதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்தன.

இதே வேளை பில்லேடன் ஆப்கானில் இல்லை என்று அந்நாட்டின் அயலுறவு அமைச்சர் ஸல்மாய் ரசௌல் கூறியிருந்தார்- ‘பாக்கிஸ்தானும் பங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காவதால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பயங்கரவாத எதிர்ப்பில் கூட்டுறவு கொள்ள விவாதித்து வருகிறோம் என்றும் (08.11.10)இல் கூறினார். இவ்வாறு செய்திகள் அமளிதுமளியாக வெளியாகிக் கொண்டிருக்கும் போது, அல் கைடாவைத் தாக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டு அமெரிக்கா பாக்கிஸ்தானின் எல்லைப் பகுதிகளைத் தாக்கத் தொடங்கியது. இவ்வாறு அது வசிரிஸ்தானைத் தாக்கத் தொடங்கியது. இப்பிரதேசம் சீன வடமேற்கு முதல் ஆப்கான் வரையான பள்ளத்தாக்குப் பளங்குடியினரின் பிரதேசமாகும். 2009 முதல் இன்றுவரை இது பயங்கரவாதிகளைத் தாக்குகிறோம் என்று கூறியே இத்தாக்குதலைத் தொடுத்துவந்தது. 2009 இல் பில்லாடனின் மூன்றாவது மகனான சாட் கொல்லப்பட்டது தவிர இவ்வருடம் அமெரிக்காவின் 14 தாக்குதல்கள் குறிதவறி இருந்தன. இதில் 300க்கும் மேற்பட்ட மலைவாசிகளான பழங்குடி மக்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். பில்லாடனின் 3வது மகன் அல்கைடாவின் தற்கொலை படைக்குப் பொறுப்பாக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

2003 ஆண்டு சாட் ஈரானில் கைது செய்யப்பட்டதாகச் செய்கிகள் வெளியாகி இருந்தன. இவர் கைது செய்யப்பட்டு ஈரானில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தாரா? அல்லது விடுதலை செய்யப்பட்டிருந்தாரா? என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. பாக்கிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத்தாக்குதல் ஒன்றில் இவர் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க தேசிய வானொலி 22யூலை 09இல் அறிவித்தது. இதைத் தலிபான் 9யூலை 09இல் உறுதிப்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தனது தரப்பில் உயிச்சேதங்களைத் தவிர்ப்பதற்கு இப்பள்ளத்தாக்குகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கியது. ‘ட்ரோன்” என்னும் இந்த ஆளில்லா விமானம் 20மணி- நேரம் துல்லியமாக நோட்டமிடவும், 400மணிநேர நிகழ்வுகளைத் தொடர்ந்து பதிவிடவும், விரைவாகத் தரவுகளை வழங்கும் திறன் கொண்டது. பில்லேடனைப் பிடிப்பதற்கும் தலிபான்களை அடக்குவதற்கும் தான் தாக்குதல் செய்வதாகவும், இதனால் எந்த ஒரு பொதுமக்களும் பாதிக்கப்படவில்லை என்றும் அமெரிக்கா முதல் மகிந்தாவரை கூறப்பட்டு வரும் ஒரு பசப்பு வார்த்தைதான் இதுவும்.

இவ் எல்லைப் பிரதேசங்களில் 2009இல் 53முறை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. 2010இல் பாக்கிஸ்தான் உட்பட 118 முறை அமெரிக்கா தாக்கியிருக்கிறது. இதுவரை இப்பழங்குடி மக்கள் 2189 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மொத்தமாக பாக்கிஸ்தானில் நடத்திய போரில் 20,000 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 50,000 பேர்வரை காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 1 5 6 6 அமெரிக்கப் படைகள் மரணத்தைச் சந்தித்தனர். 875 துணை இராணுவத்தினரும் இதில் கொல்லப்பட்டனர் . நியூயோக் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னான பின்லேடனின் கொலை வரைக்குமான கடைசி 8 வருடங்களில், பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்காக அமெரிக்கா தனது கூட்டாளி நாடான பாக்கிஸ்தானுக்கு 19.5 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதில் ‘பாதுகாப்புக்காக” வழங்கப்பட்டது மட்டும் 13.3 பில்லியன் டொலர்கள் ஆகும். இதுவே இச்சதுரங்க ஆட்டத்தில் அல்கைடா தொடர்பாக பாக்கிஸ்தானுக்குக் கிடைத்துவந்த அல்ஃபைடா எனப்படும் இலாபமாகும்.

 

(தொடரும்)

-சுதேகு

முன்னணி (இதழ் -2)