Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

ஐரோப்பிய நாடுகளில் மதத் தீவிரவாதம்: நார்வேப் படுகொலைகள்

ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ தீவிரவாதம் ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கிறித்தவ தீவிரவாத, வெள்ளை இளைஞன் ஒருவனால் நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு படுகொலைச் சம்பவம் “அமைதி மிக்க நாடாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் இந்த நாட்டில் வாழும் பிற இன, நிற, மத மக்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொலை நடந்து கொண்டிருந்த அதே வேளையிலும், செய்தி முழுமையாக வெளிவராதும் இருந்த நேரத்தில் இஸ்லாமிய இயக்கங்களைச் சந்தேகத்திற்குள்ளாக்கி பி.பி.சி, ஸ்கை உள்ளிட்ட டி.வி. நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. கொலையில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தான் என்று விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், அனைவரும் திகைப்படையும் வண்ணம் இந்தக் கொலைகளைச் செய்தது ஒரு வெள்ளையர், அதுவும் நார்வே நாட்டைச் சேர்ந்தவன் என்ற செய்தி வெளி வந்தவுடன் பொது விவாதங்கள் இறந்தவர்களுக்கு இரங்கற்பா பாடும் நோக்கில் திசை திரும்பியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தைச் சாடும் ஒருவரும் ஐரோப்பியர்களின்  இந்த வெள்ளையின கிறித்தவத் தீவிரவாதத்தை சாடுவதாகக் காணோம்.

 

 

நார்வே படுகொலைகள்

 

நார்வே நாட்டில் வெள்ளையின மேலாதிக்கத்தையும் று இயங்கும்  தீவிரவாத இயக்கம் ஒன்றின் உறுப்பினராகக் கருதப்படும் ஆண்டர்ஸ் பெரிங் பெர்விக் (Anders Behring Breivik) ) என்ற இளைஞன் தொண்ணூறு பேரை துப்பாகியால் சுட்டும் வெடிகுண்டு வைத்தும் படுகொலை செய்திருக்கிறான். கொலை செய்யப் பட்டவர்கள் அனைவரும் நார்வே தொழிற்கட்சியின் இளைஞர் அணியினர். தொழிற்கட்சி ஒரு சமுக ஜனநாயகக் கட்சி. அதன் இளைஞர் அணியினரை பெருவாரியாகப் படுகொலை செய்ததற்கு அவன் சொன்ன காரணம்: “இந்த இளைஞர்கள் உருப்படியான வெள்ளையர்களும் இல்லை, கிறித்தவர்களும் இல்லை, இவர்களெல்லாம் இருப்பதைவிட இறப்பதே மேல்”. இத்தகைய மத இன வெறியின் ஊற்றுமூலம் ஐரோப்பாவின் கடந்த கால வரலாற்றில் அடங்கியிருக்கிறது

 

ரோப்பிய இனவெறியும் !! வெள்ளை நிறவெறியும் !!

 

ஐரோப்பியர்களின் பழைய வரலாற்றையும், தற்கால நடைமுறைகளையும் அறியாதவர்களுக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒரு அதிர்ச்சி தரக் கூடிய விஷயம். ஆனால், இங்கே ஐரோப்பாவில் பெர்விக் போன்ற நபர்கள் நிறையவே இருக்கின்றனர். அவரைப் போன்றவர்கள் செயல்படும் இயக்கங்கள் பல வெளிப்படையாகவே இயங்குகின்றன. இந்த இயக்கங்கள் கிறித்தவப் புகழ்பாடும் மத்திய காலச் சிலுவைப் போர்களிலிருந்தும், ஐரோப்பிய மேட்டிமையின் தொடக்கமான காலனியாதிக்க மேலாண்மையிலிருந்தும், சமீபத்தில் வாழ்ந்த ஹிட்லர் போன்ற நாஜிகள், பாசிஸ்டுகளின் போதனைகளிளிருந்தும் தமது உற்சாகத்தை பெறுகின்றன. ஐரோப்பாவில் நிலவும் புரட்சிகர அரசியல் வெற்றிடத்தில் இந்த இயக்கங்கள் வளர்கின்றன. அதிதீவிரப் பிரிட்டிஷ் வெள்ளையினத் தீவிரவாத இயக்கமான ஆங்கிலேயப் பாதுகாப்புக் கழகம் (English Defence League), ஐரோப்பிய இஸ்லாமிய எதிர்ப்புச் சங்கம் (Stop the Islamification of Europe (SIOE), போன்றவை அகில ஐரோப்பாவிலும் வெள்ளையின மேட்டிமையை உயர்த்திப் பிடிக்கும் அதிதீவிர இயக்கங்களில் மிகவும் முக்கியமானவை. அதன் மூளையாக இயங்குபவை. இதன் முக்கியக் கோரிக்கைகள் கிறித்தவத்தின் உயர்வு, வெள்ளையின உயர்வு என்பது மட்டுமே.

 

இந்த இயக்கங்களை நேரடியாகக் கண்டித்து ஒடுக்கும் ஜனநாயக வலுவை ஐரோப்பிய அரசியல் இயக்கங்கள் நவ காலனியமாதலின் தொடக்கமான எண்பதாம் ஆண்டுகளிலேயே இழந்து விட்டன. எடுத்துக்காட்டாக, “ஜனநாயக உணர்வு மிக்க நாடுகளில் முதன்மையாகக் கருதப்படும் பிரிட்டனில் தேசியக் கட்சி (British National Party) தற்சமயம் ஒரு ஒட்டு வங்கி என்ற நிலையை விட்டு மாறித் தானே தேர்தலில் நின்று பிற கட்சியினரின் வெற்றி தோல்விகளைப் பாதிக்கும் வல்லமை மிக்க ஒரு அரசியல் கட்சி என்ற பெயரைப் பெற்று விட்டது. இதே போலவே, பிற ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறி ஆட்சிக்கு வரும் நிலையில் இருக்கின்றன. ஜனநாயகம், பல்லின அமைதி (Multiracial co-existence) பற்றி உலகிற்குப் போதிக்கும் ஐரோப்பிய தலைவர்கள், அரசியல் இயக்கங்கள், அதிலும் குறிப்பாக ஐரோப்பிய சமுக ஜனநாயக கட்சிகள் தங்கள் நாட்டில் நடந்து வருவது பற்றி தெரிந்தே மிகவும் அமைதியுடன் இருந்து வருகிறார்கள். இப்படி ஐரோப்பாவின் பல நாடுகளில் வளர்ந்து வரும் இத்தகைய இயக்கங்கள் ஒரு விதத்தில், தம்மை மார்க்சிய விரோத, கம்யுனிச விரோத, சிறுபான்மை எதிர்ப்பு இயக்கங்கள் என்று வெளிப்படையாகப் பிரகடனம் செய்து செயல்படுகின்றன. இதனால், பெரிய கட்சிகள் இவற்றை நேரடியாக எதிர்ப்பதில்லை, மாறாக முடிந்த வரை பயன் படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத கட்சிகளாக மாறி விட்டன. பெயரளவுக்கு இன்றைய ஐரோப்பிய அரசுகள் மதச் சார்பற்ற அரசுகள் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் அவைகளும் மதவாத இயக்கங்கள், வெள்ளையினவாதத்தை முன்மொழிந்து செயல்படும் பல இயக்கங்களை ஏதோ ஒருவகையில் ஆதரித்துத் தங்கள் ஓட்டுவங்கியை வளர்த்துக் கொள்ளவே செய்கின்றனர்.

 

ஐரோப்பிய அரசியல் கட்சிகளின் பச்சோந்தித்தனம்

 

கடந்த நூற்றாண்டில் கொடியவன் ஹிட்லர் அத்தகைய வெள்ளை நிற, கிறித்தவ மதத் தீவிரவாதிகளைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தான். அவனைப் பின்தொடர்ந்து இன்றும் பல கட்சிகள் அதைச் செய்து வருகின்றன, ஆனால் வேறுபாடு என்னவென்றால், ஹிட்லர் செய்த அதே வேகம் இன்று சாத்தியம் இல்லை, ஆனாலும் பல நிறவெறிக் குழுக்கள் ஐரோப்பாவின் செல்வாக்கு மிக்க பெரிய கட்சிகளில் உட்பிரிவுகளாக  இருக்கின்றன. இத்தகைய பிரிவினர் தற்சமயம் பெரும் அளவில் வளர்ந்தும் வருகின்றனர். ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் இப்படிப்பட்ட இயக்கங்கள் இருக்கவே செய்கின்றன. எந்தொரு புரட்சிகர இயக்கங்களுக்கும் அணியோ, செல்வாக்கோ இல்லாத இன்றைய ஐரோப்பாவில், எல்லா பெரிய அரசியல் கட்சிகளும் இந்த நிலையை எதிர்க்கும் துணிச்சல் இன்றி ஒரு பச்சோந்தித்தனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படை..

 

பெர்விக்

 

பெர்விக் என்ற இந்தக் கொலைகாரன் நார்வேயின் மேட்டுக்குடியினர் அதுவும் அரசகுடும்பத்தினர் படித்த அதே பள்ளியில் படித்தவன். கூடவே, ஒரு மார்க்சிய எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு போராளி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டவன். வெள்ளையினத்தின் மேன்மையில் முழு நம்பிக்கை கொண்டவன். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதங்கள், இனங்களின் ஆதிக்கம் ஐரோப்பாவில் கூடிவிட்டதாகவும் அதில் இருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்கத் தம்மைத் தயாரித்து வருவதாகவும் ஒரு பெரும் கொள்கைப் பிரகடனத்தை (1518 பக்கங்கள்) அவன் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. பெர்விக் தான் ஒரு விவசாயி என்று பதிவு செய்து கொண்டு சுமார் ஒன்பது டன் எடையுள்ள அமோனியம் நயிட்ரேட் உப்பை வாங்கிச் சேர்த்துள்ளான். கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த நயிட்ரேட்உப்பு வெள்ளையினத்தவர் என்பதால் தாராளமாகக் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஏராளமான வெடிபொருளைச் இவன் செய்திருக்க முடியும். ஒரே ஒரு கார் குண்டு மூலம் நார்வே நாட்டுப் பிரதமர் அலுவலகத்தை இவன் தகர்த்திருக்கிறான். நாட்டின் பிரதமர் அலுவலகம் என்பது ஒன்றும் சாதாரணமான கட்டிடமாக இருக்க வழியில்லை. இருந்தும் இப்படி ஒரு தாக்குதல் சாத்தியமாகியுள்ளது எப்படி என்பது தெரியவில்லை. மீதம் இருக்கும் குண்டுகள், அவரது கூட்டாளிகள் குறித்து இதுவரை எந்த விவரமும் இது வரை வெளி வரவில்லை. தனிநபராக இருந்து என்பது பேரை துப்பாக்கியால் சுட்டது இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் கூட நடந்ததில்லை. இருந்தும் இதுவரை இவன் ஒருவனே தாக்கினான் என்று இங்கே நார்வேயில் செய்திகள் வெளியாகியுள்ளன. பெர்விக் ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் கூட, நார்வே நாட்டுச் சட்டப்படி அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் இருபத்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்படும். அவன் பின்னாளில், ஏதோ ஒரு அரசியல் கட்சியின் தலைவராகக் கூட வளர முடியும். இதுதான் இங்கே உள்ள நிலைமை.

ஐரோப்பிய வெள்ளையின வெறியின் வரலாறு

காலனிய வாதிகள் கிறித்தவ மதத்தைக் காட்டித்தான்  காலனிய ஆட்சியை உலகம் எங்கும்  நிறுவினார்கள். அதில் வெற்றிகண்டபின் பல்வேறு வழிகளில் இன்றும் அதனைத் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். அமெரிக்காவின் இரண்டு கண்டங்களிலும் பரவிக் குடியிருந்த லட்சக் கணக்கான மக்களைக் கொன்று ஒழிக்க கிறித்தவப் பாதிரிகள் ஐரோப்பியப் படைகளுடன் சமமாக நின்று உதவினர், தங்கள் மதத்தின் மேட்டிமையைக் காட்டி வெள்ளையின அப்படியொரு கொடூர ஆட்சியை நிறுவினர். கிறித்தவ மதத் தீவிரவாதிகள் காலனிய ஆட்சி தொடங்கி இன்று வரை அழித்து ஒழித்த இனங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமானால் அமெரிக்க வரலாற்றை ஒருவர் படித்து அறிய வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி, உலகின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமான பேர் வாழ்ந்த பூர்வகுடிகளான மாயர்கள் உள்ளிட்ட இனங்கள் இன்று வெள்ளையின மக்கள் மட்டுமே வாழும் நிலையை ஏற்படுத்தியிருப்பது கிறித்தவ மதத் தீவிரவாதிகளின் சாதனைகளில் ஒன்று. உலகின் வேறு எந்தவொரு மதமும் இத்தகைய ஒரு பேரழிவை மக்கள் மீது நிகழ்த்தியிருப்பதற்குச் சிறிதும் ஆதாரமில்லை. கொலம்பஸ் அன்றைய கிறித்தவப் பேரரசி என்ற பெயர் பெற்ற ஸ்பெயின் நாட்டின் அரசி இசபெல்லாவின் பண உதவியுடன் தன் அழித்து ஒழிப்புப் பணியை நடத்தினான். அவன் பெற்ற கப்பல், பணம் அனைத்தும் ‘இந்தியாவின் பெருஞ்செல்வத்தை தேடிச் செல்லவும், கிறித்தவ மேட்டிமை உலகிற்கு நிருவவுமே அவனுக்கு வசங்கப்பட்டது’. அப்படிப் பெருஞ் செல்வத்தைத் இன்றும் தேடிச்செல்லும் ஐரோப்பிய அரசுகள் அவன் அடியொற்றிச் செல்வதில் வியப்பேதும் இல்லை. அமெரிக்க கண்டத்தில் வாழ்ந்த, சிவப்பு இந்தியர்களைக் கொன்று ஒழிக்க கொலம்பசுக்கு அதிகாரம் வழங்கி ஒத்துழைத்தது கிறித்தவ மதத் தலைமையிடமான வத்திகனும் போப்பும். அமெரிக்காவைப் போலவே, ஆப்ரிக்காவிலும் பல நாடுகளில் கிறித்தவ மதத் தீவிரவாதிகள் காலனிய ஆட்சியாளர்களுடன் இணைந்து முதலில் பலரை அடிமை வாணிகத்திற்காக பிடித்துச் சென்றார்கள். தங்கள் ஆட்சியை ஏற்படுத்த அவர்கள் சொன்ன காரணம்-

 

கிறித்தவர்கள் உயர்ந்தவர்கள், வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் பிற இனங்கள் அனைத்தும் தாழ்ந்தவர்கள், அந்த இனங்களை திருத்த வேண்டும் என்பதே. கொலம்பஸ் தேர்நெதேடுத்த கொலைகார வழியில் நேரடியாகச் செயல்படாவிட்டலும், இன்றைய ஐரோப்பிய அரசுகள், அரசியல் கட்சிகள், மதவாத இயக்கங்கள் அதே தீவிரவாதத்தை நம்பியே தமது பணிகளைச் செய்து வருகின்றன. அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் நார்வே நாட்டில் நடந்த படுகொலைகள் என்றால் அது மிகையல்ல.

 

இப்படிச் வெள்ளையின தீவிரவாதத்தை உற்பத்தி செய்து வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் முக்கியமானவை இன்று புதிதாக பெயர்பெற்றுள்ள ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்சு, ஹாலந்து, போன்ற நாடுகளே. முதல் உலக யுத்தத்திற்கு முன்பு இந்த நாடுகளுக்கு பிற பெயர்கள் இருந்தன. பின்னாளில், மதத் தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு தார்மீக அடிப்படையை அமைத்துத் தந்ததில் இவர்கள் முக்கியமானவர்கள். கொன்றது போக, மிஞ்சியவர்களைக் கிறித்தவர்களாக மாற்ற தீயர மத மாற்றம் உள்ளிட்ட பணிகளைச் செய்தவர்களும் இவர்கள்தான். ஏறக்குறைய உலகின் பெரும் பகுதியையே ஒரு அடிமை நிலைக்கு கொண்டு வந்ததும் அவர்களின் மதக் கடமையில் ஒன்று. அத்தகைய பெருமை மிக்க கிறித்தவம் இன்று ஐரோப்பாவில் மீள் உருவம் பெற்று புதிய வகையில் வருகிறது என்பதே பெர்விக் நடத்திய இந்தத் தாக்குதல்.

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தர்ப்பவாதம்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பலமான நாடான ஜெர்மனியின் ஆட்சித் தலைவரான ஏஞ்சலா மேற்கல் (Anjela Merkel) ஐரோப்பாவில் பல இன மக்கள் சேர்ந்து வாழும் முறைமை தோல்வியடைந்து விட்டது என்று சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டில் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியைத் தள்ளிய ஹிட்லர் இதையேதான் வேறுவார்த்தைகளில் சொன்னான். அவன் தொடங்கிய போரினால், கடும் இழப்புகளையும்  சொல்லொணாத் துயராங்களையும் ஜெர்மானியர்கள் அடைந்தார்கள். ஆனால், இன்று தமது சமீப வரலாற்றை மறந்து மீண்டும் இனவெறியின் பாதையில் ஜேர்மனிய அரசியல் கட்சிகள் தமது பயணத்தை தொடங்கியுள்ளனர். அதேபோலவே, பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், இனிமேல் பிரிட்டனில் பல்லினக் கலாச்சாரம் (multiculturalism) வெற்றிகரமாக இயங்கும் என்பதைத் தாம் நம்பவில்லை என்று அறிவித்துள்ளார். இப்படி இவர் பல்லினக் கலாச்சாரம் சாத்தியமில்லை என்று சொல்வதன் பொருள் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் கிறித்தவ, வெள்ளையின மேட்டிமை ஒன்றுதான் சரியான வழிமுறை என்பதாகும்.

 

ஐரோப்பாவின் பல நாடுகள் இனித் தங்கள் நாடுகளில் தமது பழைய காலனி நாடுகளில் இருந்து அரசியல் காரணத்தால் புலம் பெயரும் அகதிகளை உள்ளே விடாத வகையில் சட்டங்களை இயற்றிவருவதுடன், இங்கே  இருப்பவர்களையும் வெளியேற்றப் பாடுபட்டுவருகின்றனர். இது இவர்களே அறிவித்துக் கொண்ட தமது சர்வதேசக் கடமையிலிருந்து பின்னோக்கிப் பயணம் செய்வதையே காட்டுகிறது. உதாரணமாக, ஜெர்மனியிலும், பிரிட்டனிலும் இனி அந்நாட்டு மொழிப் பரிட்சையில் தேர்வு பெற்றால் மட்டுமே இனி அகதிகளின் குடியுரிமை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகப் பெரிய ஐரோப்பிய அரசியல் கட்சிகள் எல்லாம் இப்படி வெளிப்படையாக வெள்ளையின மேட்டிமையை மட்டுமே நம்பிக் கட்சி நடத்த வேண்டும் என்ற நிலைக்கு மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக இங்கே சில.

 

ஜெர்மனி

 

ஜெர்மனியில் ஹிட்லரின் அடிச்சுவட்டில் இயங்கும் பல குழுக்கள் வெளிப்படையாகவே இயங்குகின்றன. வெளிப்படையாக, பாசிசக் கட்சிகள் இயங்க முடியாது என்ற போதும், அவை பிற கட்சிகளின் குழுக்களாகவும், கலை கலாச்சார நிறுவனங்களாகவும், ரவுடிக் கும்பல்களாகவும் இயங்கி வருகின்றன. ஹிட்லரின் நினைவைத் தொடர்ந்து பரப்பி வருவதுடன் ஜெர்மனியர்களை மட்டுமின்றி உலகம் எங்கும் ஒரு வெள்ளையின ஆரிய மேலாட்சிக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றன.

 

ஆஸ்திரியா

 

இந்த நாடு முதல் உலகப் போருக்கு முன் பெரும் பேரரசாக விளங்கிய நாடு. ஏறக்குறைய ஐரோப்பாவின் பெரும் பகுதியை தம கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்தப் பேரரசு தொடர்ந்து வந்த இரண்டு உலகப் போர்களில் பல்பிடுங்கப்பட்ட கிழமாக மாற்றப்பட்டது. எனினும், இந்த நாட்டில் மதவாத வெள்ளையின மேலாதிக்கக் கட்சிகள் தொடர்ந்து இயங்கவே செய்கின்றன. அமைதியான நாடுகளில் ஒன்றாக வருணனை செய்யப் படும் இந்த நாட்டில் ஹிட்லரின் புகழ் பாடும் ஜோக் ஹெய்தர் (Jorg Heider) என்பவரின் தலைமையில் அமைந்த சுதந்திரக் கட்சி - Freedom party (FPO) என்று அழைக்கப்படும் மதவாதக் கட்சி சுமார் 27% வாக்குகளைப் பெற்று தற்சமயம் ஆட்சியில் இருக்கிறது. இதன் கொள்கைகளில் முக்கியமானது: வெள்ளையின கிறித்தவ மேட்டிமை, ஐரோப்பாவில் குடியேறும் பிற இனங்களை எதிர்ப்பது என்பதே.

 

பெல்ஜியம்

 

காட்டுமிராண்டிகளின் தலைமை என்ற ஒரு பதவி இருக்குமானால் அதற்குத் தகுதியுடைய ஐரோப்பிய நாடு இந்த நாட்தின் ஆட்சியாளர்கள் பாதிரிகளுக்கு உண்டு. ஆப்ரிக்காவின் காங்கோ போன்ற வளம் மிக்க நாடுகளை ஆண்ட இந்த ஏகாதிபத்தியம் செய்த படுகொலைகள் எண்ணிலடங்காதவை. பெயரைக் கேட்டாலே அருவருப்பைத் தரும் அளவுக்கு பெல்ஜியம் ஒரு கொடுரமான நாடு. இந்த நாட்டில் ஃபிலமிஷ் கட்சி என்று அழைக்கப்படும் ஒரு இனவாதக் கட்சி ஒரு செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் சுமார் பதினைந்து வீதத்திற்கும் அதிகமான இடங்களை பெற்ற செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ளது. இது வளரும் வேகத்தில் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தாலும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இதுவும் ஏறக்குறைய ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி போன்றதே.

 

நெதர்லாந்து

 

டச்சு ஏகாதிபத்தியம் என்று அறியப்பட்ட இந்த நாடு இந்தியா, இலங்கை, இந்தோனேசிய போன்ற பல நாடுகளை அடிமைப் படுத்தி ஆண்ட நாடு. ஆப்ரிக்க அடிமை வாணிபத்தில் செல்வம் கொழிக்கபெற்று இன்று உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் இங்கே வெள்ளையின மேலாதிக்கக் கட்சிகள் பெரும் செல்வாக்கு அடைந்து ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளன. இஸ்லாமியர்களின் வணக்கத்திற்குரிய குர்-ஆன் நூலைத் தொடர்ந்து அவமதித்துப் பேசுவதையே தன் முழு நேரமாகக் கொண்டிருக்கும் கீத் வில்தர் (Geert Wilders) என்பவரின் தலைமையில் அமைந்த சுதந்திரக் கட்சி 2011 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று நாட்டின் பெரும் நகர சபைகளைக் கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தத இடமான 150 க்கு 24 இடங்களைக்க் கைப்பற்றியுள்ளது. வெளிப்படையான இஸ்லாமிய எதிர்ப்புத் திட்டங்கள், வெள்ளையின மேட்டிமைத் திட்டங்கள் அறிவித்துச் செயல்படுத்தப்படும் என அந்தக் கட்சி வெளிப்படையாகவே அறிவித்து உள்ளது. இவருக்கு ஐரோப்பா முழுதும் செல்வாக்கு வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவின் பாடம்

 

இன்றைய ஐரோப்பாவின் பல நாடுகளில் கிறித்தவ மதத் தீவிரவாதிகால் வளர்ந்து வரும் நிலைமை இந்திய நிலைமைக்கு ஒப்பானது. இந்தியாவில் மதவாதக் கட்சியான, பாரதிய ஜனதா தான் ஆட்சியைப் பிடிக்கும் முன்பு நடந்த கடைசித் தேர்தலில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆனாலும், இறுதியில் முஸ்லிம் எதிர்ப்பினை மட்டுமே நம்பி வெற்றியடைந்து ஆட்சியையும் பிடித்து விட்டது. “மதச் சார்பற்ற(?) நாடு எனசொல்லப்பட்ட இந்தியாவில் வெறும் மதவாதத்தை மட்டுமே நம்பி பி.ஜெ.பி  போன்ற ஒரு மதவாதக் கட்சி ஆட்சிக்கு வர பிற அரசியல் கட்சிகள் அனைவரும் உடந்தை என்பதை நாம் அறிவோம். இதே நிலை தான் இன்றைய ஐரோப்பாவின் நிலைமை. மதச் சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொண்ட காங்கிரசு மறைமுகமாக பி.ஜெ.பி க்கு உதவியது. தி.மு.க, தெலுகு தேசம் போன்ற பிராந்தியக் கட்சிகள் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பி.ஜெ.பி. க்கு நேரடியாகவே உதவினர். இன்று அதே நிலைமைதான் ஐரோப்பாவில் இருக்கிறது.

 

உருப்படியான சமூக ஜனநாயகக் கட்சிகளோ, செயல் ஊக்கமுள்ள தொழிற் சங்கங்களோ , புரட்சிகர இயக்கங்களோ இல்லாத இன்றைய ஐரோப்பாவில் மதவாதக்கட்சிகளுக்குத்தான் பிரகாசமான எதிர்காலம் என்பதை ஆஸ்திரியா பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளின் அரசியல் நிலைமை தெளிவாக்குகிறது. இந்த நாடுகளில் உறுதியாக மதவாதக் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். நார்வேயின் பெர்விக் போன்ற தீவிரவாத இளைஞர்களின் உதவியுடனும், இதர தீவிரவாத இயக்கங்களுடனும் சேர்ந்து இவர்கள் குஜராத் படுகொலைகள் போன்ற சிறுபான்மையின அழித்து ஒழிபுப் பணிகளை இந்தக் கட்சிகள் நிச்சயம் செய்வார்கள். தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட இன, மத, மொழிச் சிறுபான்மையினர் மற்றும் புலம் பெயர்ந்தோர் கணிசமாகப் பரவி வாழும் பல ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட தீவிரவாதிகளின் வளர்ச்சி எல்லவிதச் சிறுபான்மையினரின் இருப்புக்கே அச்சுறுத்தலாகவும் மாறும். அந்த நாள் நெருங்கி வருகிறது என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஐரோப்பிய ஜனநாயக வாதிகளும், அறிவாளிகளும், மார்க்சியவாதிகளும் இந்த நிகழ்வு எதிர் பார்க்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அதற்கு எதிரான ஜனநாயக இயக்கங்களைக் கட்டமைக்க வேண்டும் என்று நம்புகின்றனர்.

பவானி

26/07/2011