Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

புரட்சியாளர்கள் தேசத் துரோகிகள்: இந்திய நீதிமன்றங்களின் சதி !!


வெள்ளையர்கள்இல்லாது போனாலும், இன்றைய இந்திய அரசாங்கம் அதே அடிமைச் சட்டங்களை அதே வழியில் செயல்படுத்தி அதே போன்ற தண்டனைகளை வழங்கி வருகிறது. ஆனாலும், தந்திரமாக வெளிப்பார்வைக்கு இந்திய நீதிமன்றங்கள் ஏதோ நேர்மையானவை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி மக்களையும் ஏமாற்றுகின்றன. இந்தக் கட்டுரையில் எப்படி இந்திய உச்ச நீதிமன்றம் இந்தத் தந்திரத்தை செயல் படுத்தி வருகிறது என்று பார்ப்போம்.

 

இந்தியா விடுதலை அடைந்ததாகச் சொல்லப் பட்ட பிறகும் அதன் அடிமைச் சட்டங்கள் அப்படியே எழுதிய எழுத்து மாறாமல், அதன் அடக்குமுறை நோக்கம் சிதையாமல் இன்னமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே. அத்தகைய பல சட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று இந்திய தண்டனைச் சட்டம் 1860 ன் 124-A  பிரிவு. இந்தச் சட்டப் பிரிவு ‘தேசத்துரோகம்’ செய்வோரை தண்டிப்பதற்காக எழுதப்பட்டது.

இந்த காலனிய காலச் சட்டத்தின் படி தேசத் துரோகம் என்பது என்ன?.  ‘அரசுக்குப் பிடிக்காததைச் செய்தால் அது தேசத் துரோகம் எனக் கொள்ளலாம்’. அதாவது, அரசுக்கு ஒப்பாததை, விருப்பமில்லாததைச் செய்தால், அதை தேசத் துரோகம் எனக் குற்றம் சாட்டலாம்.  அரசு வெள்ளையர் காலத்து காலனி அரசாக இருந்தாலும் சரி, தற்போது ஆளும் கொள்ளையர் அரசாக இருந்தாலும் சரி. எப்போதேல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் அதைப் பயன்படுத்த விரும்புகிறார்களோ, அவர்கள் இந்த வரையறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியா குடியரசான பிறகு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாகச் சொல்லப்படும் எழுத்துரிமை, பேச்சு உரிமை அடிப்படை உரிமைகள் எனக் கருதப்படுகின்றன. அதாவது, அடிப்படை உரிமைகளை யாரும் பறித்து விட முடியாது.  அப்படி ஏதாவது நடந்தால் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தலையிட்டு குடிமக்களின் உரிமையை நிலை நாட்ட வேண்டும். ஆனாலும் கூட, இந்தச் சட்டத்தை அரசு பயன்படுத்தினால் உங்கள் அடிப்படை உரிமைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது. உலகில், எந்த ஒரு நாட்டிலும் நமது காலனிய எஜமானான  பிரிட்டன் உட்பட இது போன்ற ஒரு சட்டம் நடை முறையில் இல்லை. அரசுக்கு எதிர்ப்பான போராட்டங்கள், விவாதங்கள் ஜனநாயகத்தின் அடிப்படை என எல்லா நாடுகளும் அங்கீகரித்திருக்கின்றன. கொடுங்கோல் அரசர்கள், ராணுவ சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில் தான் இத்தகைய சட்டங்கள் மூலம் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், ஏன் இந்தச் சட்டம் மக்களின் குடியரசு என்று சொல்லப்படும் சுதந்திர இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது?. அது தான் சூட்சுமம்.  இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்திய நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், முதலாளிகளின் கூட்டணியையும் அவர்களின் ஏமாற்றும் தந்திரங்களையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஏமாற்று வித்தையில், இந்திய நீதிமன்றங்கள் முன்னணி வகித்து வருவது அப்போது தெளிவாகும்.

புரட்சியாளர்கள் எப்போதுமேதேசத் துரோகிகள்

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்ட போது இந்தச் சட்டம் பொதுவாக புரட்சிகர இயக்கங்களுக்கு எதிராக பயன்படுத்தப் பட்டது. வெள்ளையர்களின் ஆட்சியை தீவிரமான வகையில் எதிர்த்து வந்த காங்கிரசின் தீவிரவாதிகளான சிலர் இவ்வாறு சிறையில் அடைக்கப் பட்டும், தண்டனை வழங்கப்பட்டு நாடு கடத்தப்பட்டும் வந்தனர். அப்போது, கம்யுனிஸ்டுப் புரட்சியாளர்கள் மீது பல வழக்குகள் பதியப் பட்டு தண்டிக்கப்பட்டனர். காந்தி தான் எழுதிய கட்டுரைக்காக ஆறு ஆண்டு காலம் தண்டனை பெற்றார். காந்தி தண்டிக்கப்பட்ட போது 1922 ல் இந்தியா விடுதலைப் போரின் கொதி நிலையின் உச்சியில் இருந்தது. எனவே, பிரிட்டிஷ் அரசு யாராக இருந்தாலும் தண்டிக்கத் துணிந்தது. காந்தியையும் தண்டித்தது. காந்தியை விசாரித்த வெள்ளைக்கார நீதிபதி அரை மனதுடன் மனம் நொந்தபடி தன் தீர்ப்பில் எழுதினான், ’காந்தியே குற்றத்தை ஒத்துக் கொண்டதால் நான் ஏதும் செய்ய வழி இல்லை’. ஒரு வேளை காந்தி தான் செய்தது தேசத் துரோகம் இல்லை என்று எதிர் வழக்கடியிருந்தால் வழக்கு வேறு விதமாகக் கூட முடிந்திருக்க்கலாம்.
இந்தியா விடுதலை(?) அடைந்ததாகச் சொல்லப்பட்ட 1947 ம் ஆண்டுக்குப் பின்னர், இந்தச் சட்டப் பிரிவில் அதிகமாக கைது செய்யப்பட்டவர்கள் தேச விடுதலைப் போராட்டம் நடத்தி வரும் காஷ்மீரிகள், மணிப்புரிகள், மிஜோக்கள், திரிபுரிகள், அஸ்ஸாமியர்கள், நாகர்கள் போன்றவர்கள் தான். இதைத் தவிர்த்து தேசதுரோகிகள் எனக் கைது செய்யப்பட்டுத்  தண்டிக்கப்பட்டவர்கள் கம்யுனிஸ்டுப் புரட்சியாளர்கள் மட்டுமே. இது வரை கறுப்புப் பணத்தை பதுக்கி வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லும் தேசத்துரோக,  தேசவிரோத நடவடிக்கைகளை செய்துவரும் எந்த ஒரு முதலாளி மீதும் இந்தச் சட்டம் பாய்ந்ததாக வரலாறே இல்லை.

இந்திய அளவில் மிகப் பிரபலமான தேசத் துரோக வழக்கு  1959 ம் ஆண்டு கேதார்நாத் சிங் என்ற பீகார் மாநில கம்யுனிஸ்டுப்  புரட்சியாளர் ஒருவர் தண்டிக்கப்பட்ட வழக்கு ஆகும். அவர் செய்த குற்றம்: ‘பிரதமர் நேருவின் அமைச்சரவை கொள்ளைக்காரர்கள், கருப்பு மார்க்கெட் வியாபாரிகள், லஞ்சப் பேர் வழிகள் நிரம்பிய ஒரு அமைச்சரவை என்றும் இந்தக் கும்பலைத் தூக்கி எறிய நாட்டில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சி வர வேண்டும்’ என்று அவர் பேசிய பேச்சும் எழுதிய ஒரு கட்டுரையும் தான். இதற்காக, அவர் இந்திய தண்டனைச் சட்டம் 124-a பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார். இந்த வழக்கு மேல்முறையிட்டுக்காக  பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது கேதார்நாத் சிங் இத்தகைய பேச்சோ எழுத்தோ இந்தியக் குடியரசு தனக்கும் தன்னை போன்ற எல்லா குடிமக்களுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமகைகளின் படி  அமைந்ததே, தான் இந்திய நாட்டிற்கு துரோகம் ஏதும் இழைக்கவில்லை என்று எதிர் வழக்கடினார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்டு பாட்னா உயர் நீதிமன்றம் அவரை விடுவித்ததுடன் அந்தக் காலனிய காலச் சட்டப் பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதன் காரணமாக அந்தப் பிரிவு சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டியிருந்தது.
ஆனால், அன்றைய காங்கிரஸ் அரசு கம்யுனிஸ்டுகளுக்கு எதிராகவும் நாட்டில் வளர்ந்து வரும் புரட்சி இயக்கங்களின் பிரசாரத்தை தடுக்க எண்ணியும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று எதிர் வழக்காடியது. உச்ச நீதிமன்றம் இந்த சட்டப் பிரிவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இப்படித் தான் காலனிய காலச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தயவால் மீண்டும் உயிபெற்றது. அதே வேளையில், இந்தச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் சில வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே இதை செயல்படுத்த வேண்டும் என்றும் சொல்லி இருந்தது. அந்த வரையறைகளில் முக்கியமான ஒன்று இந்திய அரசுக்கு எதிராகப் பேசுவதோ, எழுதுவதோ  செயல்படுவதோ தேசத் துரோகம் ஆகாது. ஆனால், அச்செயல் உடனடியாக ஏதேனும் மிகப்பெரிய வன்முறையினைத் தூண்டுவதாக இருந்தால் மட்டுமே இந்தச் சட்டத்தை பயன்படுத்தலாம்’.

இதுவரை இந்தப் பிரிவில் கைது செய்யப்பட்டவர்களில் மிகச் சிலரே தண்டிக்கப்பட்டு உள்ளனர். கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களில் பலர் மேல் நீதிமன்றம் சென்ற பொழுது எந்த ஒரு தீர்ப்பையும் இதுவரை உச்ச நீதிமன்றம் சரி என உறுதி செய்யவில்லை.  ஆனாலும் இந்தச் சட்டம் அப்படியே தான் இருக்கிறது, அதை நீக்க உச்ச நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவே இல்லை.  ஆனால், இந்த உச்ச நீதிமன்ற வரைமுறையை போலிசும் கீழ் நீதிமன்றங்களும் கண்டு கொண்டதே இல்லை. ஆக, கேதார்நாத் வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏதோ ஒரு பெரிய புரட்சிகரமான தீர்ப்பு என்று பலரும் பேசி வருவது ஒரு நகைப்புக்கு உரிய செயல் என்று தான் சொல்ல வேண்டும். இது தான் இந்திய மேல் நீதிமன்றங்கள் செய்து வரும் வெளிப்படையான சதி, மோசடி. ஒரு புறம் நம்பிக்கையை  விதைப்பது மறுபுறம் புரட்சியாளர்களை எளிதாக தண்டிக்க வழி வகை செய்து கொடுப்பது – இது தான் நீதிமன்றங்களின் தந்திரம்.

இப்போதும் கூட, சிதம்பரம் போன்ற பகட்டுப் பேச்சு பேசிவரும், அறிவாளிகள் என்று பீற்றிக் கொள்ளும் பாசிஸ்டுகள் இதைத் தான் சொல்லி பினாயக் சென் மேல் நீதிமன்றம் சென்று வழக்கடலாம் என்கிறார்கள். ஏதோ நாட்டில்  சட்டத்தின் படி ஆட்சி நடப்பதாக ஒரு மாயையான நாடகத்தை நடத்துகிறார்கள். படிப்பாளிகள், அறிவாளிகள் கூட இதை நம்பிக் கொண்டு பினாயக் சென் போன்றவர்களுக்கு உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளிக்கும் என்று கூறி வருகிறார்கள். நோபெல் பரிசு வென்ற அறிஞர்கள் உட்பட அனைவரும் அப்பாவித்தனமாக மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள். மாறாக, இது போன்ற கொடுங்கோல் சட்டங்களை புத்தகங்களில் இருந்து ஒரேயடியாக நீக்க வேண்டும், முறையின்றி பயன்படுத்தும் போலீச, நீதிபதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பதே இல்லை.

உச்சநீதிமன்றத்தின் சதிகள் !!

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் வழிமுறைகளும் இந்திய சட்டங்களைப் போலத் தான். எனவே, சட்ட மீறல் செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த கேதார்நாத் தீர்ப்பை சட்டை செய்யாத எந்த மாவட்ட நீதிபதியும், போலிஸ்காரர்கள் எழுதிக் கொடுக்கும் தீர்ப்பை கையெழுத்திடும் கீழ் நீதிமன்ற நீதிமான்களையும்,  உச்ச நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ தண்டித்ததாக எந்த செய்தியும் இல்லை. மாறாக முறையற்ற வழியில் தண்டிக்கப்பட்ட நபர், மேல்நீதிமன்றம் சென்று அது தவறு என்று தீர்ப்பை பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்து விடும். அதுவரை அவருக்குப் பினை  இல்லையென்றால், சிறையில் இருக்க வேண்டும்.
ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டது தவறு என்று மேல் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலும் அவர் அனுபவித்த சிறைத் தண்டனைக்கு எந்த நட்ட ஈடும் இல்லை. சமீபகாலத்தில், பலர் இந்தச் சட்டத்தில் கைதாகி இருந்தாலும், வழக்கு முடிவில் தண்டனை பெற்றவர்கள் மிகவும்  அரிது. அப்படித் தண்டனை பெற்றவர்கள் குறைந்தபட்சத் தண்டனைகளைத் தான் பெற்று உள்ளனர் ஆனால், அவர்கள் சந்திக்கும் நீதிமன்ற முறைமைகளும் தடுப்புக்காவலில் இருக்கும் நாட்களும் அவர்களின் தண்டனையைவிட அதிகமாவே இருக்கும்.

புரட்சியாளர்களுக்கு  எதிராக அனைத்துக் கட்சிகளும் கூட்டணி !!

புரட்சியாளர் கேதார்நாத் வழக்கில் தொடங்கி பினாயக் சென் வரை தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் இவ்வாறு ஒரு அநீதியான சட்ட முறைமையின் மூலம் தண்டிக்கப்பட்டவர்கள். இந்தச் சதி நேரடியாக உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் கண்ணெதிரே நாளும் நடைபெற்று வருவது கண்கூடு.
ஆனாலும் சிதம்பரம் போன்ற மோசடிக்காரர்கள் தொடங்கி நாகரிகம் மிக்க ‘இடதுசாரிகள்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பிரகாஷ் கரத் போன்றவர்கள் வரை சொல்வது என்ன: ‘பாதிக்கப்பட்டவர்கள்  மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம் அதை விடுத்து இந்திய நீதி மன்றங்களையோ அல்லது முறைமைகளையோ அவமதிக்கக்கூடாது’. நீதித்துறையை விமர்சனம் செய்வது கூடாது என்று புனிதப் போர்வையில் அரசியல் கட்சிகள் மௌனம் காத்துவருகின்றன.

அவர்களுக்கு தெரியாத நீதியா?.  மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் தங்களை  இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளும் இடது கம்யுனிஸ்டுக் கட்சியும் இது குறித்து ஒரே நிலைப்பாட்டையே கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் எந்த ஒரு முக்கியமான அரசியல் கட்சியும் இந்த (அ)நீதியைக் கண்டிக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் புரிந்து கொள்ள வேண்டுவது என்ன?.  அனைவரும் புரட்சியாளர்களுக்கு எதிராக தங்களின் புனிதக் கூட்டை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளார்கள் என்பதே.

அயோக்கியத்தனமான நீதிமன்ற நடைமுறைகள்
எழுத்தாளர் அருந்ததி ராய் ‘இந்திய நீதிமன்றங்கள் நேர்மையானவை அல்ல, தமது நடைமுறைகள் மூலம் வழக்கைத் தாமதப்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கின்றன’ என்று சொல்கிறார். தற்போது பிரபலமாக பேசப்பட்டு வரும் பினாயக் சென் வழக்கில் இதுதான் நடந்தது. வழக்கு விசாரனை முடிய தாமதம் ஆகும் என்றால் பிணை வழங்க வேண்டும் என்பது பொதுவான விதி. ஏறக்குறைய எல்லா வழக்குககளுக்கும் இது பொருந்தும். அனால் பினாயக் சென் வழக்கில் என்ன நடந்தது?.

இந்திய உச்ச நீதிமன்றம் சுமார் இரண்டு ஆண்டுகள் அவருக்குப் பிணை வழங்கவே இல்லை, வழக்கில் எந்த விசாரணையும் இல்லை. இத்தனைக்கும் அவர் உலகம் அறிந்த மருத்துவர், அறிஞர், தேச அளவிலும் சர்வதேச அளவிலும் பல விருத்கள் பெற்றவர், அரசாங்கம் செய்யத் தவறிய பணிகளை முப்பது ஆண்டுகளாக செய்து ஏழைகளுக்கு நேரடியாக மருத்துவப் பணி செய்தவர், அரசாங்கத்துடன்  நேரடியாக நலத் திட்டங்களில் பணியாற்றியவர், சிறப்பான பல அரசுத்திட்டங்களை உருவாக்கியவர். அவரை வெளியில் விடச் சொல்லி கடுமையான இதய நோயால் பீடிக்கப்பட்டவர். இருபத்து ஒரு நோபெல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் நேரடியாக அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனாலும் உச்ச நீதிமன்றம் அவரைப் மருத்துவம் பார்க்கக்கூட பிணையில் விட மறுத்து சிறையிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ள சொல்லி உத்தரவிட்டது.

இதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியான மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யால் மிகக் கொடுமையான தசை இசிவு நோயால் பாதிக்கப்பட்டு, நிற்கவோ நடக்கவோ மிகவும் சிரமப்படுபவர், பேனா பிடித்து ஒரு வரி கூட நேராக எழுத முடியாமல் முதுமையில் துன்புற்று வருபவர். அவர் மீது எந்த ஒரு வழக்கும் இது வரை நிருபணம் ஆகவில்லை, ஏன் ஒரு குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. அவர் கைது செய்யப்படும் வரை அவரைப்பற்றி யாருக்கும் ‘இவர் யார்’ என்பது கூடத்தெரியாது. மூன்றாவது குற்றவாளி பியுஷ் குகா வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பீடி வியாபாரி, அவர் மீது எந்த வழக்கும் இல்லை, இந்த வழக்குக்கு முன்பு வரை அவர் யார் என்பதே யாருக்கும் தெரியாது. அவர் சிறையில் இருந்த காலத்தில் அவரது தாய் துக்கம் தாழாமல் நோயுற்று மரணம் அடைந்தார், அவரைச் சாகும் முன் சென்று பார்க்கவோ இறுதிச் சடங்கு செய்யவோ கூட நீதிமன்றங்கள் பிணையில் விட மறுத்து விட்டன.

எவ்வளவு கொடுமை பாருங்கள் !!.  நீதிமன்றங்கள் இப்படித் தான் நேர்மை, நியாயம், நீதி எதையும் மதிக்காமல் சிறிதும் கருணையின்றி  தங்கள் அலுவல்களைச் செய்கின்றன. ஏன்? இது புரட்சியாளர்கள் தொடர்பான வழக்கு இப்படித்தான் வழக்கு நடத்துவோம், தண்டனை வழங்குவோம் என்று பிறர் அறிந்து கொள்ள வேண்டும், நாட்டில் புரட்சி என்ற பேச்சு வந்து விடக் கூடாது என்பதுதான் ஒரே நோக்கம்.

இதே சட்டப் பிரிவில் கைது செய்யப்பட்ட காஷ்மிரி ஒருவர் எட்டு ஆண்டுகள்  தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார்.  அனால் அவருடைய வழக்கு நிருபணம் ஆகாமல் இறுதியில்  முடிக்கப்பட்டு அவர் மீது குற்றம் இல்லை என்று தீர்ப்பு வந்தது. ஆனால், அவர் சிறையில் இருந்த காலம் எட்டு ஆண்டுகள். உச்ச நீதிமன்றம் உட்பட கீழிருந்து மேல் வரை எல்லா நீதிமன்றங்களும் அவருக்கு ‘குற்றத்தின் தீவிரத்த்தன்மை’ காரணமாக பிணை வழங்க மறுப்பதாக தமது தீர்ப்பில் சொல்லியுள்ளன. அனால், வழக்கில் சிறிதும் உண்மை இல்லையென்று அவர் விடுவிக்கபடுகிறார்.  எட்டு ஆண்டுகள் அவர் சிறையில் இருந்ததற்கு நீதிபதிகளும் நேரடியாக பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது தானே இதன் பொருள்.
எனவே, இந்திய நீதிமன்றங்கள் போலிஸ்காரகளின் வழக்கில் நியாயம் இல்லை என்று தெரிய வரும் பொழுது தமது நடை முறைகளின் மூலமே வழக்கைத் தாமதப்படுத்தி குற்றம் சாட்ட்டப்பட்டவரை சிறையில் அடைத்து வைப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டு அநியாயமான வழியில் நீதியை நிலை நாட்டுகின்றன. இந்த அயோக்கியத்தனத்தில் இந்திய உச்ச நீதிமன்றங்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக, புரட்சிகர இயக்கத்தினர்,  இந்த வழியில் மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிர, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் சிறையில் இருக்கின்றனர். அவர்களை அவ்வாறு சிறை வைக்க வழி செய்த வகையில் உச்ச நீதிமன்றம் நேரடியாகப் பங்கேற்றுள்ளது என்பதுதான் உண்மை.

புரட்சிகர இயக்கங்களைத் தண்டிக்க எளிதான வழி !!
இந்தச் சட்டப் பிரிவு இன்னமும் ஏன் இருக்கிறது என்றால், கம்யுனிஸ்டுகளையும், இதர புரட்சியாளர்களையும் தண்டிக்க சிரமம் இல்லாத ஒரு சட்டம் வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் காரணம் இல்லை.  நிஜத்தில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சதிகாரர் எவரும் இந்தப் பிரிவில் தண்டனை பெற்றதாக எந்த ஒரு தகவலும் இல்லை. இப்போதும், பினாயக் சென் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதுதான் அவர் மீதான முக்கியக் குற்றசாட்டு.

ஏறக்குறைய, எல்லா இந்தியப் பத்திரிகைகளும் அறிவாளிகளும் பினாயக் சென் வழக்கில் நடந்த அநீதியைக் கண்டித்து தலையங்கங்கள் வெளியிட்டு வருகின்றன. பல பிரபலமான எழுத்தாளர்கள் இந்தத் தீர்ப்பை கேலி செய்தும், கண்டித்தும், அவமானப் படுத்தியும் எழுதி வருகின்றனர். இருந்தாலும் கூடவே, இந்திய மேல் நீதிமன்றங்கள் இந்தத் தவறை சரி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை கூடவே வைக்கின்றன. ஒருவரும் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்பதில்லை. இந்திய அரசியல்வாதிகள் தங்கள் ஏதோ நீதி நியாயங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்கி இந்திய நீதிமன்றங்கள் இதைச் சரிசெய்து விடும் என்று கூறிவருகிறார்கள்.

சுதந்திர இந்தியாவில், தேசத் துரோகத்திற்காக மிகப் பெரும் தண்டனையை பினாயக் சென் அவர்களுக்கு வழங்கிய ராய்ப்பூர் நீதிமன்றத்தின் நீதிபதி வர்மா இன்னும் பதவி நிரந்தரம் செய்யப்படாத ஒரு தற்காலிக பணியில் உள்ள ஒரு கீழ் மட்ட நீதிபதி. ஆனாலும் அவர் அதிகாரத்தைப் பாருங்கள். பினாயக் சென் போன்ற சர்வதேசமும் அறிந்த ஒரு பிரபலமான மருத்துவரை தண்டிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம்  இவருக்கு வழங்கி இருக்கிறது. அதற்கு இந்திய மேல் நீதிமன்றங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை இருக்கின்றன. இப்படித்தான் (அ)நீதிபதிகளையும் இந்திய நீதித்துறை முன்னின்று உருவாக்குகிறது.


இப்போது புரிகிறதா ? எது குற்றம் ?

புரட்சி செய்வது குற்றம் !!

புரட்சியாளர்களை  ஆதரிப்பது குற்றம் !!

பவானி

16/03/2011