Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

"Eelam Uncle" கமரோன் வாழ்க!!

அமைச்சரே, பக்கத்து நாட்டு மன்னனிற்கு புறா மூலம் தூது அனுப்பினோமே, மறுமொழி வந்ததா? வந்தது மன்னரே, புறாக்கறி நல்லாயிருந்ததாம்.

தூதுகள், மாநாடுகள் எல்லாம் அன்றிலிருந்து இன்று வரை இப்படி பைத்தியக்காரத்தனமாகத் தான் இருக்கின்றன. வாங்குவது, விற்பது, நாட்டை அடகு வைப்பது வரை முன் கூட்டியே பேசி முடித்து விட்டு பின் பாராளுமன்றத்திலும், மாநாடுகளிலும் பகிரங்கமாக பேசி முடிவு எடுக்கிறோம் என்று படம் காட்டுவார்கள். அவர்களது சண்டையும் முன் கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்டு இருக்கும். கமரோன் இலங்கை அரசை கேள்வி கேட்பதும், மகிந்து நீங்க மட்டும் ரொம்ப நல்லவங்களா என்று எதிர்த்து மீசையை முறுக்குவதும் விஜயகாந்து காற்றிலே பறந்து, பறந்து சண்டை போடும் போது புல்லரிப்பது போல புல்லரிக்க வைக்கிறது. உலகில் தருமம் குன்றி அநீதி மேலோங்கும் போது நான் வருவேன் என்று அய்யங்கார்களின் கொலைத்தெய்வம் கண்ணன் வெறுவாய் மலர்ந்தது போல இப்போது கமரோன் தமிழர்களிற்காக அவதாரம் எடுத்திருக்கிறாராம்.

கமரோன் பிரித்தானிய அரச குடும்பத்தின் உறவினர், பத்தொன்பது பிரதமமந்திரிகளும், பெரும்பான்மையான மந்திரிகளும், பிரபுத்துவ குடும்பத்தினரும் படித்த ஈரொன் (Eton college) தனியார் பள்ளியில் படித்தவர். மற்ற மொழிகளில் பிரதேச வேறுபாடுகள் இருக்கும். ஆனால் இங்கிலாந்தின் ஆங்கிலத்தில் வர்க்க வேறுபாடு இருக்கும். உயர்வர்க்கத்தினரின் ஆங்கில உச்சரிப்பு தனியானது. அதன் அர்த்தம் அவர்கள் பிரித்தானியாவின் பொதுமக்களுடன் எந்த விதமான உறவும் இல்லாமல் வசதியான தங்களது உலகத்தில் வாழ்பவர்கள். கமரோன் அந்த ஆங்கிலம் பேசும் மேட்டுக்குடி. தீவிர வலதுசாரி கட்சியான பழமைவாதக்கட்சித் (conservative party) தலைவர்.

பிரித்தானியாவின் பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்பதும், ஏழைமக்களிற்கு உதவும் சமுக பாதுகாப்பு திட்டங்களை நிறுத்துவதும் அவரது கட்சியின் கொள்கைகள். தொழிலாளர்கள் போராடி வென்ற தொழிலாளர் உரிமைகளை இல்லாமல் செய்வதும், தொழிற்சங்கங்களை முடக்குவதும் அவர்களது பலநாள் கனவு. "இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க தேவையில்லை, ஏனெனில் இந்தியர்களுக்கு தம்மைத் தாமே ஆளத் தெரியாது" என்று உளறிய வின்ஸ்ரன் சேர்ச்சில் இவரது கதாநாயகன். சிலியின் கொலைகாரன் பினாச்செட், தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசு போன்றவற்றை பகிரங்கமாக ஆதரித்த மார்க்கிரட் தட்ச்சர் இவரது தங்கத்தலைவி.

அப்கானிஸ்தான், ஈராக்கில் எவ்விதமான காரணங்களும் இன்றி போர் தொடுத்தவர்கள். எண்ணெய் வயல்களிற்காக மக்களைக் கொல்பவர்கள். இந்த கமரோன் தமிழ்மக்களிற்காக பேசுகிறாராம். 2009 மே மாதத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்தது. சரியாக ஒரு வருடத்தின் பின் 2010 மே மாதம் கமரோன் பிரதமமந்திரியாக பதவி ஏற்றார். அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ ஜக்கிய நாடுகள் சபை அமர்வுகள் நடைபெற்று விட்டன. கமரோன் எதுவும் கேட்கவில்லை. பொதுநலவாய மாநாட்டிற்கு வந்து இலங்கையில் வைத்து தான் அவர் தமிழ்மக்களின் பிரச்சனையை பேசுவார். அதுவரை தமிழ்மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். இதே கமரோன் தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு பிறகு தொடங்கிய சிரியா போருக்கு உடனே படைகளை அனுப்ப வேண்டும் என்று துடிக்கிறார். ஏனென்றால் சிரியாவில் எண்ணெய் இருக்கிறது கொள்ளையடிக்கலாம் என்ற ஒரே காரணம் தான்.

கமரோனுடன் எத்தனையோ பெரும்வியாபார நிறுவனத்தவர்கள் இலங்கை சென்றனர். பலகோடி பெறுமதியான தொழில்களிற்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. ஒரு வியாபாரத்தை தொடங்குபவர்கள் நண்பர்களாக இருக்க வேண்டும். எதிரிகள் பங்குதாரர்களாக இருக்க முடியாது. கமரோன் மகிந்தாவை உண்மையாகவே இனப்படுகொலையாளி என்று குற்றம் சாட்டியிருந்தால் ஒப்பந்தங்கள் செய்யப்படிருக்குமா?. எலிசபெத் ஆட்சிக்கு வந்த அறுபதாவது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அடிமைகளில் ஒன்றான மகிந்து காலனிய காலத்தை பற்றி கேள்வி கேட்பது சும்மா பகிடிக்கு தான் என்பது கமரோனிற்கு தெரியாதா?. இனப்படுகொலைக்கு சரியான விசாரணை வேண்டும் என்று சொல்லி கமரோன் தமிழ்மக்களை ஏமாற்ற, காலனித்துவவாதிகள் எங்களிற்கு பாடம் படிப்பிக்க தேவையில்லை என்று மகிந்து சிங்கள மக்களை ஏமாற்றுவது முன் கூட்டியே எழுதி வைத்த நாடக வசனங்கள்.

கமரோன் போன்றவர்களின் ஒவ்வொரு அசைவும் SPIN DOCTORS எனப்படும் மக்கள் தொடர்பு நிபுணர்களினால் தீர்மானிக்கப்படுபவை. பேச்சு, சிரிப்பு, அலங்காரம், சந்தர்ப்பங்களிற்கு ஏற்ப உடைகள் என்று ஒவ்வொரு விடயமும் அவர்களது ஆலோசனையின் படியே செய்யப்படும். இந்த விடயங்கள் தெரியாதது போல கமரோன் யாழ்ப்பாணம் வந்ததையும், வன்னியிலிருந்து வந்தவர்களின் அகதிமுகாம்களிற்கு போய் தமிழ்மக்களை சந்தித்ததையும் பெரும் வீரச்செயல்களாக பக்திப்பரவசத்துடன் பாடுகிறார்கள் புலம்பெயர் தமிழ் தலைமைகள் என்னும் மாபியாக்கள். ஈழத்தாய் ஜெயலலிதா, மாவீரன் நெடுமாறன், சீமான் வரிசையில் வந்த அடுத்த அவதாரமாக கமரோனிற்கு "Eelam Uncle" பட்டத்தை இவர்கள் கொடுத்தாலும் கொடுக்கக்கூடும். அந்த விழாவை பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கை அரசு, பிரித்தானிய கொன்சர்வேட்டிவ் கட்சி என்று சகல தரப்பினதும் பாசத்துக்குரியவர்களும், தீவீர தமிழ்தேசியவாதிகள் என்று புலம்பெயர் புண்ணாக்கு தலைமைகளினால் பாராட்டப்படும் லைக்கா (Lyca) ஸ்பொன்சர் செய்யக்கூடும்.